கொண்டைக்கொல்லி வர்மம்
இடம் :
தலையின் உச்சியில் உள்ளது.
வேறு பெயர்கள் :
- கொண்டைக்கொல்லி வர்மம் (வர்ம கண்ணாடி – 500)
- உச்சி வர்மம் (வர்மநிதானம் – 500)
- பதப்பு வர்மம் (வர்ம சூடாமணி/வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
- உச்சிபதப்பு வர்மம் (வழக்கு)
- துடிக்காலம் (வார்மாணி நாலுமாத்திரை)
- தேரை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
- பிரமானந்தம் (வர்ம விதி)
- அதிபதி மர்மம் (அஷ்டாங்க ஹிருதயம்)
- மேட (மேஷ) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
- பேய் காலம் (வழக்கு)
பெயர்க்காரணம் :
தலையில் உச்சியில் அமைந்துள்ளதால் உச்சி வர்மம் எனப்படுகிறது. உச்சியில் கொண்டை முடியும் இடத்தில் அமைந்திருப்பதால் கொண்டைக் கொல்லி வர்மம் என்று வழங்கியிருக்கலாம். (தலை முடிந்த கொண்டைக் கொல்லி, வர்மசாரி 205) குழந்தைகளுக்கு இவ்வர்மம் அமைந்திருக்கும் இடத்தில் என்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இணைந்திருக்காததாகையால் அவ்விடம் மேலும் கீழும் துடிப்பதைக் காணலாம். எனவே துடிகாலம் எனப்படுகிறது. இதை உச்சிப்பதப்பு என்னும் அழைப்பர். இவ்விடத்தில் அடிகொண்ட உடனே ஆளைக் கொன்று விடுமாகையால் கொண்டை கொல்லி எனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.
இருப்பிடம் :
- ‘உச்சி நடுவில் கொண்டக் கொல்லி
ஒட்டை யதற்குக் கீழ் சீறுங்கொல்லி’
(வர்ம கண்ணாடி-500)
- ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக்கொல்லி
அதனொன்னு ஒட்டையின் கீழ் சிறுங்கொல்லி’
(வர்ம பீரங்கி-100)
- ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி
கீர்த்தி பெற ஒட்டையின் கீழ் சீறுங்கொல்லி’
(வர்மசாரி-205)
- ‘பராபரத்தின் தியானமது பணிந்து கேளு
பாரப்பா உச்சி நடுமையம் தன்னில் உச்சி வர்மம்’
(வாகட நிதானம்)
- ‘கேளப்பா உச்சி வர்ம தலத்தைக் கேளு
கிருபையுடன் நடு நெற்றிதனியிலிருந்து
ஆளப்பா அவரவர் கையதனால் விரல் எட்டு
அளந்து மேல் பார்த்திடவே தலம் தான் காணும்’
(வர்ம நிதானம்)
- ‘கேளே நீ சிரசு வட்டம் நடுவில் தானே
கிருபையுடன் பதப்பு வர்மம்…………’
(வர்மசூடாமணி)
- ‘………………… பொருந்துவர்மம் காணலாகும்
பட்சமுடன் அதற்கு அஞ்சு விரலின் மேலே
பதப்புவர்மம் அதிலிருந்து……………….’
(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
- ‘கேளப்பா உச்சியுட பதப்புதனில் தேரை வர்மம்’
(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
- ‘சீறும் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலளவுக்கு
மேலாக கொண்டைக்கொல்லி வர்மம்” (வர்ம விளக்கம்)
- ‘உச்சியில் துடிக்காலம்…..’ (வர்மாணி நாலு மாத்திரை)
- ‘உச்சி நடுவில் கொண்டைக்கொல்லி அதற்கு பன்னிரெண்டு
விரலளவுக்கு கீழே பின்புறம் சீறுங்கொல்லி…..’ (வர்ம விரலளவு நூல்)
- ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறுங்கொல்லி உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காகமடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்து மேல நோக்கினால் அளந்தால் உச்சி வர்மம் அறியாலாம்’ (வர்ம நூலளவு நூல்)
- ‘கூர்ந்து நிற்கும் கொண்டைக் கொல்லி தலமேதென்றால்
ஆர்ந்து உச்சிப்பட்டம் அருகில் நின்று
சேர்ந்து மூன்று விரல் சூட்சமாக பின்பாகம்
சார்ந்திருக்கும்…………..’ (உற்பத்தி நரம்பறை-1000)
- ‘கேளு நீ பாழ் நடுவர்மம் மேட வர்மம்
கீர்த்தியுற்ற மேடமென்ற கொண்டைக்கொல்லி’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
- ‘நெற்றிக்கு மேலதாகி நேரேழுமுச்சி தன்னில்
சுற்றேழு நரம்புக்கெல்லம் சூழ்ந்திடுமிடமுமாகி மற்றது பிரமானைந்த………….’ (வர்ம விதி)
விளக்கம் :
இவ்வர்மம் தலையின் நடுவில் திலர்த வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு மேலாகவும், சீறும் கொல்லி வர்மத்திலிருந்து ஓர் ஓட்டைச் சாணுக்கு (12 விரலளவு) மேலாகவும் அமைந்துள்ளது. கொண்டைக்கொல்லி வர்மம், உச்சிவர்மம், பதப்பு வர்மம், தேரை வர்மம் ஆகிய நான்கு வர்மங்களும் ஒரே இருப்பிடத்தைக் கொண்டிருப்பதாலும், ஒரே குறி குணங்களைக் கொண்டிருப்பதாலும் இந்நான்கு வர்மங்களும் ஒன்றே என்பது தெளிவாகிறது.
Anatomy : The Bregma of the skull. The point of intersection of sagital and coronal sutures
குழந்தைகளில் இப்பகுதியில் துடிப்பு காணப்படும். இது உச்சி பதப்பு (Fonticuli) என்று அழைக்கப்படுகிறது. இவ்வர்மம் இரு Parietal என்புகளும், முன்பக்கமுள்ள ஒரு Frontal என்பு ஆக மூன்று என்புகளும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
மாத்திரை :
ஒரு ஒட்டையும் இரு நெல்லிடையும் வாங்கி இடித்தால் விழும் மயங்கும்.
Thanks Dr. Kannan Rajaram – Kanyakumari