92. அசைவு வர்மம் – Asaivu Varmam
வேறு பெயர்கள் :
1. அசைவு வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சிப்பி அசைவு வர்மம் (வர்ம நூலளவு நூல்)
3. சூ(ண்)டிகை வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
4. தாக்ஷி காலம் (வர்ம ஆணி-100)
இடம் :
சிப்பி வர்மத்திற்கு மேல் பக்கவாட்டில், புயத்தின் மொழிப் (Acromian Process) பகுதியிலிருந்து சுமார் மூன்று விரலளவுக்கு பின் புறத்தில் கீழாக உள்ளது.
பெயர்க்காரணம் :
கையின் சிப்பி என்பு (Scapula Bone) புய என்போடு (Humerus) பொருந்தும் இடத்தில் அசைவு ஏற்படும் பகுதியிலுள்ள வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘புயந்தனிலே அசைவு வர்மம் புகலலாமே’ (வர்ம பீரங்கி-100)
2. ‘சிப்பி வர்மத்திலிருந்து (சுமார் 9 விரலளவு) மேல் பக்கவாட்டில் அளக்க சிப்பி அசைவு வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
3. ‘ஏகுமே புசத்தடியில் அசைவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
4. ‘பணிகமாய் முண்டகம் மேல் வலது சூ(ண்)டிகையே சூட்சம்’
(வர்ம லாட சூத்திரம்-300)
5. ‘புகன்றதோர் சூண்டிகைக்கு புசம் களைத்திடல் உண்டாகும்
இகன்றதோர் தைலத்தாலே இதக்கேட்டை மாற்றிபோடும்
நிகன்றதோர் அசவு வர்மம் நின்ற பெயர் சொல்லலாகும்
உகன்றதை அறிந்து கொள்ள உண்மையாய் வகுக்கலுற்றேன்’
(வர்ம லாட சூத்திரம்-300)
6. ‘பின்னே நீ கரமதிலே புசத்தைப் பற்றி
பிலமான முனையதிலே காலம் சொல்வேன்
என்னே காலம் நீ தாக்ஷி யென்ற காலமொன்று
இசைவான காலத்தின் குணத்தைக்கேளு’ (வர்ம ஆணி-100)
விளக்கம் :
இவ்வர்மம், சிப்பி என்பின் (Scapula) கீழ் கோணத்திற்கு (Inferiorangle) கீழேயுள்ள சிப்பி வர்மத்திலிருந்து சுமார் ஒன்பது விரலளவுக்கு மேல் பக்கவாட்டில் (Supero – Lateral) சிப்பி என்பின் acromial angle பகுதியில் உள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி