9. நட்சத்திர காலம் – Natchathira Kalam
வேறு பெயர்கள் :
1. நட்சேத்திர காலம் (வர்ம பீரங்கி-100)
2. மீன வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
3. ஆபங்க வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)
இடம் :
கடைக்கண்ணுக்கு அருகில்.
பெயர்க்காரணம் :
இவ்வர்மத்தின் குறிகுணத்திலிருந்து இவ்வர்மத்தினால் கண்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று தெரிகிறது. நட்சத்திரம் இரவில் ஒளிகொடுப்பது போல மனிதனுக்கு ஒளியாக விளங்கும் கண்ணில் இவ்வர்ம பகுதி அமைந்துள்ளதால் இவ்வர்மத்துக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
இருப்பிடம் :
1. ‘காலமாம் கடைக்கண் கீழ் நட்சத்திரக்காலம்’ (வர்ம பீரங்கி-100)
2. ‘காலமாம் கடைக்கண்ணில் இறைக்குள்ளே தான்
கலங்குகின்ற நட்சத்திர காலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டு இறைக்குக் கீழே
இதமான காம்போதிக் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘வளமான கண்ணின் கீழ் நட்சத்திர காலம்
வர்மமடா இரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்’ (வர்மசாரி-205)
4. ‘பொய்கை காலத்துக்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சேத்திரக்காலம் இதற்கு இரண்டு விரலுக்கு
கீழே அலவு காம்பூரி வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
5. ‘இயல்பான கடைக்கண்ணில் இமையில் தானே
நயம்பெறவே நட்சேத்திர காலம்…..’ (வர்ம கண்டி)
6. ‘கடைக்கண் இறைக்குள்ளே தான்
கலங்குகின்ற குழியிதிலே நட்சேத்திரகாலம்’ (வர்மசூத்திரம்-101)
7. ‘…………… பொய்கை வர்மம் ரண்டு
தறுகிலே இருவிரலின் பக்கம் மாறி
சார்வான நட்சத்திரகாலம் ரண்டு
மறவாதே அதிலிருந்து நால்விரல் மேல்
மைந்தேனே சென்னிவர்மமாகும் ரண்டு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
8. ‘நன்றான கடைக்கண்ணில் ஓரிறைக்கு தாழே
நாயகனே நட்சத்திரக் காலமாகும்’ (வர்ம திறவு கோல்-225)
9. ‘நானென்ற கடைவிழிக்கு கீழ் நட்சத்திரம்தான்
நாடுமறை ரண்டின்கீழ் காம்பூரியாகும்’ (அடி வர்ம சூட்சம்-500)
10. ‘கண்டத்தின் மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லி
உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) எட்டாக
மடக்கி (4 விரலளவு) திலர்தவர்மத்திலிருந்து அளக்க
நட்சத்திரக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
11. ‘சுருதியிடங்கண் புறத்திற் கண் புருவத்தில்
மருவிடுங் கீழபாங்கமெனு……………’ (வர்ம விதி)
12. ‘அப்பனே மீனமது நட்சேத்திர வர்மம்’
(வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
விளக்கம் :
இந்த வர்மம் கடைக்கண்ணுக்கு (Outer Canthus of the Eye) ஓர் இறைக்கு கீழாகவும், காம்போதி (காம்பூரி) வர்மத்துக்கு இரண்டு இறைக்கு மேலாகவும் அமைந்துள்ளது, திலர்த வர்மத்திலிருந்து நான்கு விரலளவு பக்கவாட்டில் அமைந்துள்ளது.
இவ்வர்மம் கடைக்கண்ணுக்கு ஓர் இறைக்குக் கீழே உள்ளது என்பதை வர்ம சாரி-205, அடிவர்ம சூட்சம்-500 போன்ற நூல்கள் உணர்த்துகின்றன. இவ்வர்மம் உள்ள இடத்தில் ஒரு குழி உண்டு என்று ‘வர்ம சூத்திரம்-101’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்வர்மம் பொய்கை வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்கு முன்புற பக்கவாட்டில் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி