85. பந்தக் காலம் – Pantha Kalam

வேறு பெயர்கள் :

1. மணிபந்த வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. மணிக்கட்டு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
3. மணிக்கட்டு பந்த காலம் (அடிவர்ம சூட்சம்-500)
4. கோழிகழுத்து – புறதாரை வர்மம் (வர்ம நூலளவு நூல்)
5. எட்டெல்லு பொருத்து வர்மம் (வர்ம நிதானம்-300)

இடம் :

மணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘மோது மணிபந்தத்தின் நால்விரல் மேல் ஆந்தை’ (வர்ம பீரங்கி-100)

2. ‘விரியாத மணிக்கட்டில் மணிபந்தம்
வீரான விரல் நாலின்மேல் ஆந்தை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘ஆரடா பெருவிரல் இடைமேல் குண்டுவர்மம்
அப்பனே அஞ்சிறை மேல் மணிபந்த வர்மம்’ (வர்ம சாரி-205)

4. ‘வன்முடிச்சியதின் கீழ் மணிக்கட்டு வர்மம்
சரியதனிலிருந்து எட்டு விரல் மேலே
தடவிப்பார் விஷமணிபந்த வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

5. ‘திண்டாடும் மணிகட்டு பந்த காலமாமே’ (அடிவர்ம சூட்சம்-500)

6. ‘மிகையதாம் மணிக்கெட்டாகும் இடத்திலே மணிபந்தம் பார்’
(வர்ம லாட சூத்திரம்-300)

7. ‘கோழிகழுத்து வர்ம பகுதியில் சுற்றளவெடுத்து இரண்டாக மடக்கினால் கோழிகழுத்து அகத்து வர்மம் அகதாரை அறியலாம் புறத்து வர்மம் புறதாரை அறியலாம்’. (வர்ம நூலளவு நூல்)

8. ‘புறங்கையில் மணிக்கெட்டினருகு பற்றி’
‘பற்றியே அதில் எட்டெல் பொருத்துண்டப்பா
பாரமாம் இந்த பொருத்து விலகிபோனால்’ (வர்ம நிதானம்-300)

விளக்கம் :

இவ்வர்மம் கை மணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் (Posterior) காணப்படுகிறது. இது ஆந்தை வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாகவும், முடிச்சு வர்மத்துக்கு ஒரு விரளவுக்கு மேலாகவும், விஷமணிபந்த வர்மத்துக்கு எட்டு விரலளவுக்கு கீழாகவும் காணப்படுகிறது.

இந்த இடத்தில் எட்டு மணிக்கட்டு என்புகள் (Carpus Bones) இரண்டு அடுக்குகளாக உள்ளன. அவை Trapezium, Trapezoid, Capitate, Hamate, Scaphoid, Lunate, Triquetrum, Pisiform ஆகியன. இந்த மணிபந்த வர்மத்தில் அடிபடும் போது இந்த என்புகளெல்லாம் விலகிப் போகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி