76. வல்லுருமி காலம் 77. வெல்லுருமி காலம்
76. Vallurumi Kalam 77. Vellurumi Kalam
வேறு பெயர்கள் :
1. வல்லுருமி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. எல்லுருமி வர்மம் (வர்ம சாரி-205)
3. வில்லுருமி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
4. வெல்லுருமி வல்லுருமி வர்மம் (வர்ம பீரங்கி-100)
5. உடற்கூறியல் பெயர்கள் :
பெயர்க்காரணம் :
இவ்வர்மம் ஆண்குறியின் (தண்டின்) அடிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆண்குறியின் தன்மையைப் பொறுத்து இது, வல்லுருமி-எல்லுருமி-வில்லுருவி எனப் பெயர் பெற்றது.
இடம் :
ஆண்குறியின் அடிப்பகுதியில் இருபக்கமும் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘தக்க கல்லடைக் காலம் வலமிறைக்குள்
மகிழும் வலம்பூரி இடம்பூரி வர்மம் வெல்லுறுமி
வல்லுறுமி………………………….’ (வர்ம பீரங்கி-100)
2. ‘தப்பாது விசையடுத்து வலம்புரியுமென்ன
கர்மமடா வில்லுருமி ரெண்டிறையிலதாகும்
கருதுநிறை தண்டதுதான் விசையதாகும்
அற்பமடா விசையடுத்து நாங்குகுத்தி’ (வ.ஒ.மு. சாரி-1500)
3. ‘கனமான வலம்புரி வல்லுறுமி ரண்டு’ (வர்ம சாரி-205)
4. ‘கோளென்ற பீசம் அடிநரம்பு தானும்
குறியான வெல்லுறுமி காலம் தானே!’
‘தானான நடு நரம்பே வல்லுறுமி யாகும்
தனிகாட்சி நான்கு குற்றி காலம் பாரும்’ (அடிவர்ம சூட்சம்-500)
5. ‘கல்லிடை காலத்துக்கும் சுருதி ஓரிறைக்கும் கீழே
ஒல்லிடை வலம்புரிதான் ஒன்று இடம்புரியும் கூட்டி
நெல்லிடை கீழும் மேலும் நேரேதானதற்கு கழுத்து
சொல்லிடைக் கிடது பக்கம் சோதனைக்கு ஒரு நரம்பு’
‘ஒரு நரம்பு அதிலே ரண்டு ஒட்டியே அடுத்தடுத்து
வருமதின் பேரு கேளு வல்லுறுமி வில்லுறுமி
அருகினில் நாங்கல் குற்றி………………….’ (வர்ம லாட சூத்திரம்-300)
6. ‘மண்ணிடை தண்டிலொரு மடக்கின் பக்கம்
வலம்புரி இடம்புரி இரண்டும் பக்கம் தான்
வெல்லுறுமி வல்லுறுமி இரண்டதாகும்
விசம் படிக்க தலை மடுத்து நங்குற்றி’ (வர்மானி-16)
7. ‘போமிந்த தண்டில் வலம் ஓரிறைக்குள்
புனிதமாய் வலம்புரியின் காலமாச்சே’
‘ஆச்சுதே இதனருகே இடம்புரிக்காலம்
அடவாக அதனருகே வல்லுறுமி என்பார்
வாச்சுதே வல்லுறுமி நாங்கல் குத்தி
வளமான அதினடுக்கம் வில்லுறுமி என்பார்’ (வர்ம திறவு கோல்-225)
விளக்கம் :
‘வெல்லுருமி-வல்லுருமி’ எனப்படும் இந்த வர்மத்தின் இடத்தைக் கண்டறிவது சற்று சிரமமான ஒன்றாகும். இந்த வர்மம் கல்லடை காலத்துக்கு அருகில் உள்ளது என்று ‘வர்ம பீரங்கி-100’ நூல் குறிப்பிடுகிறது. மேலும் வலம்புரி இடம்புரி வர்மங்களுக்கு அருகே இவ்வர்மம் அமைந்துள்ளது என்றும் தெரிகிறது. மேலும் ‘வர்ம கண்ணாடி-500’ என்ற நூலிலிருந்து இவ்வர்மம் நரங்கல் குத்தி வர்மத்துக்கு அருகே அமைந்துள்ளது எனத் தெரிகிறது. ‘வர்ம சாரி-205’ என்ற நூல் இவ்வர்மம் தண்டில் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறது.
வலம்புரி-இடம்புரி வர்மங்களுக்கு ஒரு நெல்லிடை (அரை விரலளவு) மேலும் கீழும் இவ்வர்மம் அமைந்துள்ளது (வர்ம லாட சூத்திரம்-300) இவ்விடத்தில் ஒரு நரம்பு போன்ற பகுதி உண்டு. இதன் அடிப்பகுதியில் வெல்லுருமியும், மேல்பக்கம் வல்லுருமியும் அமைந்துள்ளன (அடிவர்ம சூட்சம்-500) இதற்கு அருகில் நரங்கல் குற்றி என்ற வர்மம் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி