74. வலம்புரி காலம் 75. இடம்புரி காலம்
74. Valampuri Kalam 75. Edampuri Kalam
வேறு பெயர்கள் :

1. வலம்புரி வர்மம் – வலது பக்கம் (வர்ம பீரங்கி-100)
2. இடம்புரி வர்மம் – இடது பக்கம் (வர்ம சாரி-205)

பெயர்க்காரணம் :

‘புரி’ என்றால் ‘முறுகிய கயிறு’ (Twisted Rope) என்று பொருள். இதை வழக்கில் ‘பிரி’ என்றும் கூறுவார்கள். இவ்வர்மம் விதையோடு தொடர்பு கொள்ளும் Spermatic Card (புரி)-ல் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

இடம் :

ஆண்குறியின் இருபக்கத்திலும் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘தக்க கல்லடைக் காலம் வலமிறைக்குள்
மகிழும் வலம்பூரி இடம்பூரி வர்மம்
வல்லுறுமி வெல்லுறுமி நரங்கல் குத்தி’ (வர்ம பீரங்கி-100)

2. ‘போமிந்த தண்டில் வலமோர் இறைக்குள்
புனிதமாம் வலம்புரியின் காலமாச்சே
ஆமிந்த இதனருகே இடம்புரிக்காலம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘தப்பாது விசையடுத்து வலம்புரியுமென்ன’ (வ.ஒ.மு. சாரி-1500)

4. ‘கனமான வலம்புரி வல்லுறுமி ரண்டு’ (வர்ம சாரி-205)

5. ‘பாட்சமென்ற வலம்புரி காலமொன்று
மூத்திர காலத்தின் கீழே தானே
விருத்தமாய் குண்டு தூக்கும் நரம்பில்தானே’

6. ‘தேனென்ற தண்டின் வலம் வலம்புரியாம் காலம்
தெளிந்திடமாம் இடம்புரி யெனவாகும்’ (அடிவர்ம சூட்சம்-500)

7. ‘கல்லிடை காலத்துக்கும் கருதி ஓரிறைக்கும் கீழே
ஒல்லிசை வலம்புரிதான் ஒன்று இடம்புரியும் கூட்டி’ (வர்ம லாட சூத்திரம்-300)

8. ‘மண்ணிடை தண்டிலொரு மடக்கின் பக்கம்
வலம்புரி இடம்புரி இரண்டு பக்கம் தான்’ (வர்மானி-16)

9. ‘கேளடா யோனி தனிலே நின்று இடம்புரி வலம்புரியாக
பிரிந்து திரிகோணத்துக்குள்ளே தோன்றிடுமாம்
தோன்றிடுமாம் வலம்புரியென்ற தலத்தில் நின்று
பதமாகவே தான்ரண்டு செறு நரம்பு வலம்புரி
இடம்புரி மார்க்கம் ரண்டும் ரண்டு கரமதிலே
தோன்றுமடா ஆண் பிள்ளைக்கு பாரே’
தோன்றிடுமாம் பெண்ணுக்கு ஆகும் இந்த யோனிமார்க்கம்
வளையமாக சுற்றி பார்க்கவே யிரண்டு மார்க்கம்
அகபுறம் பிரிவு ரண்டாகும் மைந்தனே
கேளு மார்க்கங்கள் தப்பில்லாமல் தானே’ (வர்ம நரம்பறை சூத்திரம்-107)

விளக்கம் :

‘தண்டு’ என்றும் ‘விசை’ என்றும் அழைக்கப்படும் ஆண் குறியின் அடிப்பகுதியை அடுத்து ஓர் இறைக்கு வல, இட பக்கங்களில் அமைந்துள்ள வர்மங்களே வலம்புரி மற்றும் இடம்புரி என்று வழங்கப்படுகிறது.

வர்ம நரம்பறை சூத்திரம் என்ற நூல் விதையைத் தாங்கிக் கொண்டிருக்கும் சிறு நரம்பில் இவ்வர்மம் அமைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இந்நூல் குறிப்பிடும் ‘நரம்பு’ “Spermatic Cord” ஆகும் எனவே இவ்வர்மம் ஆண்குறிக்கு அருகே அதன் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள Spermatic Cord -ன் மீதே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி