73. கல்லிடைகாலம் – Kallidai Kalam

வேறு பெயர்கள் :

1. வித்து வர்மம் (வர்ம நூலளவு நூல்)
2. விந்து வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
3. கல்லிடை வர்மம் (வர்ம சாரி-205)
4. முக்கோண தேங்காய் கண்வர்மம் (வர்மாணி நாலு மாத்திரை)

பெயர்க்காரணம் :

‘வித்து’ எனப்படும் விந்து (Sperm) சுரக்கும் விதைப் பகுதியை (Testis) சார்ந்த வர்மமாகையால் இது இப்பெயர் பெற்றது.

இடம் :

விதைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘கேளப்பா மடிக்குழியில் வித்து வர்மம்
கெட்டியாக அடிகொண்டால் குணத்தைக் கேளு’ (வர்ம நிதானம்-300)

2. ‘மடிக்குழி என்ற தலத்தில் வித்து வர்மம்’ (வர்ம ஆணி-108)

3. ‘………………………………… விந்து வர்மம்
சாற்றுவேன் அதிலிருந்து மூவிரலில்
உள்ளபடி சொல்லுகிறேன் தண்டு வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

4. ‘கல்லடைக் கால வர்மத்துக்கு மூன்று விரலுக்கு
வலத்தே வித்து வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

5. ‘கருத்தான தண்டில் இரு விரலின் கீழே
வெட்டியே இது நடுவே வித்து வர்மம்’ (வர்ம சூத்திரம்-101)

6. ‘உந்திவர்மத்துக்கும், கல்லடை வர்மத்துக்கும் அளவெடுத்து (12 விரலளவு) அதில் நாலில் ஒரு பகுதி நீளத்தை (3 விரலளவு) கல்லடைக் காலத்திலிருந்து பக்கவாட்டில் அளக்க வித்து வர்மத்தை அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

7. ‘வேளென்ற அரையிறையின் கீழ் பீசக்காலம்
விதிப்படியே இருநெல் கீழ் கல்லிடையாம் காலம்’
(அடிவர்ம சூட்சம்-500)
8. ‘வேமிந்த வித்திரண்டும் பதிந்த சார்பில்
விதமான கல்லிடையின் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

9. ‘காலமென்ற கல்லிடை தான் இரண்டதாகும்’ (வர்ம சாரி-205)

10. ‘தர்மமடா உந்தியின் கீழ் கல்லிடையதாகும்’ (வ.ஒ.மு. சாரி-1500)

11. ‘சட்ட எலும்பின் மீதே முக்கோணம் அந்த எலும்பில் தானே
தேங்காய் கண்ணு போல மூணு வர்மமும்………………….
அது தண்டினும், வித்தினுடைய பைக்கும்…………….’
(வர்மாணி நாலு மாத்திரை)

விளக்கம் :

இவ்வர்மம் விதையை (Testis) பற்றியதாக இருப்பதால் இரட்டை வர்மமாகும். இது அண்ட வர்மம் என்னும் (ஒற்றை) கல்லடை காலத்திலிருந்து சுமார் 3 விரலளவு பக்கவாட்டில் உள்ளது. தண்டு வர்மத்திலிருந்தும் சுமார் 3 விரலளவு கீழ் பக்கவாட்டில் உள்ளது. முக்கோண தேங்காய் கண் வர்மங்கள் மூன்றினுள் இது திறப்பற்ற இரட்டைக் கண் வர்மம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வர்மம் பீசக்காலத்துக்கு கீழே, அருகே உள்ளது. வர்ம சாரி-205 கூறும் கல்லிடை வர்மம் இவ்வர்மமேயாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி