71. மூத்திரக் காலம் – Moothira Kalam

வேறு பெயர்கள் :

1. மூத்திர காலம் (வர்ம சாரி-205)
2. மூத்திரக்குண்டி காலம் (வர்மாணி நாலு மாத்திரை)
3. மூத்திரகால அடங்கல் (அடங்கல் விபரம்)
4. மூத்திராசயம் (வர்ம விதி)
5. வஸ்தி மர்மம் (சுஸ்ருத சம்ஹிதா)
6. வருண வர்மம் (படுவர்ம நிதானம்-101)

இடம் :

தொப்புளுக்கு நான்கு விரலளவுக்கு கீழே உள்ளது.

பெயர்க்காரணம் :

இவ்வர்மத்தில் அடிப்பட்டால் சிறுநீர் தன் உணர்வின்றி வெளியேறுவதால் இப்பெயர் பெற்றது.

‘எண்ணிய மூத்திரக் காலங்கொண்டால்
எண்ணாதே மூத்திரந்தான் கழிந்து போகும்’ (வர்ம பீரங்கி-100)

இருப்பிடம் :

1. ‘தகை நாபி நால் விரற்கீழ் மூத்திரக் காலம்’ (வர்ம பீரங்கி-100)

2. ‘கீழென்றால் அன்னக்காலம் கீழ்விரல் நாலுக்கப்பால்
தோழென்றால் மூத்திரக்காலம் சொல்லுவோம் இன்னும் சூட்சம்’
(வர்ம லாட சூத்திரம்-300)

3. ‘யேகுமென்ற தொப்புளின் கீழ் மூத்திரக் காலம்’ (வர்ம சாரி-205)

4. ‘ஓமிந்த தொப்புளுக்கு விரல் நாலின் கீழ்
உற்றதொரு மூத்திரத்தின் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

5. ‘கள்ள மில்லா சொன்ன தண்டு வர்மத்தின் மேலே
கணக்கான விரலதுவும் ஆறில் தானே
துள்ளியிடும் மூத்திரத்தின் காலமாகும்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

6. ‘நாளா மூத்திரக் காலம் அதிலிருந்து
நால்விரலின் பக்கம் அரையாப்புக் காலம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

7. ‘உதறவே தொப்புளின் நால் விரலின் கீழே
உத்தமனே மூத்திரக் காலமாகும்’ (வர்ம கண்டி)

8. ‘உந்தி வர்மத்துக்கு நாலு விரலுக்குக் கீழே
மூத்திரக் காலம்’ (வர்ம விரலளவு நூல்)

9. ‘அறியவே மூத்திரக் காலத்தின் செய்கை
அறைகிறேன் உந்திக்கு மூன்றுவிரலின் தாழே’ (வர்ம நிதானம்)

10. ‘நால்விரல்மேல் கதிர்நிலை ஓர்விரலின் மேலே
மழுக்கென்ற அன்னத்தின் காலமப்பா
மைந்தனே முவிரல் கீழ் மூத்திரக்காலம்’ (சதுரமணி சூத்திரம்)

11. ‘முயங்கிடு கடிகை தன்னில் மூத்திரா சயத்தின் வன்மம்’ (வர்ம விதி)

12. ‘கொள்ளுவாயிதினும் நாலிறைக்கும் தாழே
குணமுடனே யித்தலத்தில் வருண வர்மம்’ (படுவர்ம நிதானம்-101)

விளக்கம் :

மூத்திர காலம் தொப்புளுக்கு நான்கு விரலுக்குக் கீழே உடலின் மையக் கோட்டில் அமைந்துள்ளது என்று வர்ம நிதானம் தவிர பொதுவாக எல்லா வர்ம நூல்களுமே குறிப்பிடுகின்றது.

‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூல் மூத்திரக் காலத்துக்கு இரு பக்கமும் நான்கு விரலளவில் அரையாப்பு காலம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. மேலும் இந்நூல் தண்டு வர்மத்திலிருந்து ஆறு விரலுக்கு மேலே மூத்திரக்காலம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது சரியான இடமேயாகும். இந்நூல் குறிப்பிடும் இவ்விடம் தொப்புளுக்கு நான்கு விரலுக்குக் கீழே காணப்படும் இடமேயாகும். இத்தலத்தை வருண வர்மம் என்று படுவர்ம நிதானம்-101 என்ற நூல் குறிப்பிடுகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி