60. புச வர்மம் – Pusa Varmam

வேறு பெயர்கள் :
1. புய வர்மம் (வர்ம சூத்திரம்-101)
2. புஜ வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
3. புச வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)

பெயர்க்காரணம் :
புய பகுதியில் உள்ள வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.

இடம் :
காரை என்பின் (Clavicle Bone) புற அந்தத்தின் முனையில் இவ்வர்மம் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘நடை கிளிமேக வர்மம் நல்காறை முனையில் தங்கும்
தடைபடா புஜ வர்மம் தானென்பதே அறிய சொன்னோம்’
(வர்ம லாட சூத்திரம்-300)

2. ‘ஓமிந்த காரையதின் முனையிலே தான்
உற்றதொரு புஜ வர்மமாகும் பாரு’ (வர்ம திறவுகோல்-225)

3. ‘நேரதோ புசத்தினடி புச வர்மம் தான்’ (அடிவர்ம சூட்சம்-500)

4. ‘தீருமடா காரையதின் முனையில் தானே
திறமான புய வர்மம் அதற்குப் பேரு’ (வர்ம சூத்திரம்-101)

5. ‘அடப்பகாலத்திலிருந்து (சுமார் 10 விரலளவு) மேல் நோக்கி
அளக்க புஜ வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

6. ‘காரை எலும்பு புஜத்தினுடைய மோணெலும்பில்
இணையும் பொய்கையில் புஜ வர்மம்’. (வர்மாணி நாலுமாத்திரை)

7. ‘புய வர்மம் : புயபொருத்து விலகிப் போனால்…..’ (வர்ம ஆணி-108)

விளக்கம் :
கழுத்துக்கு கீழுள்ள வர்மங்களின் தொகுப்பில் இவ்வர்மம் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறுவதென்றால் இவ்வர்மம் மார்பும், கையும் இணையும் பகுதியிலுள்ள வர்மமாகும்.

காரை என்பின் (Clavicle Bone) புற அந்தத்தின் முனையில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அடப்பக்காலத்திலிருந்து (வர்ம நூலளவு நூல்) சுமார் பத்து விரலளவுக்கு மேலாகக் காணப்படுகிறது. தும்மி வர்மத்திலிருந்து சுமார் பத்து விரலளவுக்குப் பக்கவாட்டில் இவ்வர்மத்தின் இருப்பிடம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி