55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam

வேறு பெயர்கள் :
1. கைகெட்டி வர்மம் (வர்ம சாரி-205)
2. கைக்கொட்டிக் காலம் (வர்ம பீரங்கி-100)
3. கைகூட்டிக் காலம் (வர்ம லாட சூத்திரம்-300)

இடம் :
கை சிப்பி என்பின் அக ஒரத்தில் உள்ளது.

பெயர்க்காரணம் :
முதுகில் கைக்கு எட்டும் இடத்தில் உள்ள வர்மமாகையால் (கைக்கு + எட்டி) கைக்கெட்டி எனப் பெயர் பெற்றது.

இருப்பிடம் :
1. ‘சுருதியே தும்பியின் மேல் நாலிறைக்குள்
கைக்கொட்டிக் காலம் மேலிறை ரண்டில் சடப்பிறக்காலம்’
(வர்ம பீரங்கி-100)

2. ‘நேர் வர்மத்தின் கீழ்பக்கம் நேர் தும்பிக்காலம்
நின்றதின் நாலு இறைக்குள் கைகெட்டிக்காலம்’
(வர்ம கண்ணாடி-500)

3. ‘……………………………………………. சிப்பி வர்மம்
பகர்ந்த ஓரிறை மேலே கிளிப்பிற வர்மம்
வர்மமடா அடிப்பாகத்தில் கைகெட்டி வர்மம்
மகிழ்ந்த தன் மேல் எட்டெல்லு வர்மம்’ (வர்ம சாரி-205)

4. ‘பகர்ந்த கைகெட்டி ரண்டு எட்டெல்லு ரண்டு’ (வர்ம சாரி-205)

5. ‘………………………………………….. கைகூட்டி காலம்
திடலின் ரண்டிறைக்குள் சடப்பிறை வர்மமென்றேனே’
(வர்ம லாட சூத்திரம்-300)

விளக்கம் :
இவ்வர்மம் கை சிப்பி (Scapula) என்பின் அக ஓரத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபடும் போது ‘புயமது விழுந்து தாழும்’ (Dislocation of Shoulder) என்று வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. Occationally, a direct violence on the back of the shoulder dislocated the shoulder forward (Text book of Orthopaedics by M. Natarajan)

இவ்வர்மம் தும்பி வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்கு மேலே அமைந்துள்ளது. இது இரட்டை வர்மமாகும். இதற்கு மேலும் கீழும் எட்டெல்லு வர்மங்கள் காணப்படுகின்றன. (ஒப்பு நோக்குக : கிளிமேக வர்மம்)

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி