49. வெள்ளீரல் வர்மம் – Velleral Varmam

வேறு பெயர்கள் :
1. வெள்ளீரல் காலம் (வர்ம விரலளவு நூல்)
2. வெள்ளை ஈரல் வர்மம் (வர்ம விளக்கம்)

இடம் :
மார்பில் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘முலைக்கண்ணுதனில் இருந்து மூவிரலுக்கு அப்பால்
விதமுறும் குறுக்கே தாழே வெள்ளீரல் வர்மம்’ (வர்ம சூடாமணி)

2. ‘தொண்டைக் குழிக்கு ஆறு விரலுக்குக் கீழே காரீரல் காலம். இதற்கு
இரண்டு விரலுக்குக் கீழே வெள்ளீரல் வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

3. ‘கூறக்கேளு மார்பிலிரு விரலின் மேலாய்
கூனெலும்பின் இடைபற்றிக் கொண்ட வர்மம்
மாறக்கேள் வெள்ளீரல் சோரைப் பற்றி’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘…………………………………………………………… நேரு வர்மம்
தக்கபடி யதிலிருந்து ஆறுவிரல் மேல்
சார்ந்த வெள்ளீரல் காரீரல் வர்மம்’ (வ.ஒ.மு. சூத்திரம்-1200)

5. ‘கை சீப்பில் நின்றும் விரலினும் வலத்தே
மூன்றாவது எலும்பினுடைய இடைக்கு வெள்ளை ஈரல் வர்மம்’
(வர்ம விளக்கம்)

6. ‘எட்டெல்லின் நாலாவது பொய்கை யென்ற
குருந்தில் குத்தினால் வெள்ளீரல் தரிக்கும்………..’ (வர்மாணி நாலு மாத்திரை)

7. ‘திவளை வர்மத்துக்கு கீழே வெள்ளீரல் வர்மம்’ (வர்ம நூலளவு நூல்)

விளக்கம் :
இவ்வர்மம் திவளை வர்மத்துக்கு கீழே, முலைக் காம்புக்கு (தூசிக வர்மம்) அரை விரலுக்கு கீழே அமைந்து உள்ளது. ஆனால் வர்ம சூடாமணி என்ற நூல் முலைக்கண்ணுக்கு மூவிரலுக்கு குறுக்கே தாழ்வாக இவ்வர்மம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது என்றாலும் 4, 5-ஆம் விலா என்புகளுக்கு இடையே இவ்வர்மம் அமைந்துள்ளது என்ற உண்மை மட்டும் விளங்குகிறது. இவ்வர்மம் எட்டெல்லின் நாலாவது பொய்கையில் (4th Intercostal Space) அமைந்துள்ளது. இப்பொய்கையில் குத்தும்போது வெள்ளீரல் பாதிப்படைவதாக வர்மாணி நாலு மாத்திரை என்ற நூல் குறிப்பிடுகிறது. (ஒப்பு நோக்கு : காரீரல் வர்மம்)

மாத்திரை :
விரல் மடக்கி 1.5 அங்குலம் தாழ்த்தும் போது சதை விலகும். அப்போது மயங்கும் அல்லது கைமுறுக்கி ஒரு முழமும் ஒரு சாணும் சுவடு பெருக்கி இடிக்கவிழும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி