41. அடப்பக் காலம் – Adappa Kalam

வேறு பெயர்கள் :
1. அடப்பக் காலம் (வர்ம பீரங்கி-100)
2. அடைப்பு வர்மம் (வர்ம கண்ணாடி-500)
3. அடப்பன் காலம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

இடம் :
முண்டெல்லின் நாலு அங்குலம் மேலே.

இருப்பிடம் :
1. ‘முண்டெல்மேல் அங்குலம் நால் அடப்பகாலம்’
(வர்ம பீரங்கி-100)

2. ‘அமைந்த முண்டெல்லின் மேல் அங்குலம் நாலில்
உற்றதொரு அடைப்பு வர்மம் எனவுஞ்சொல்வார்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘ஈடப்பா முண்டெலும்பின் நாலு விரலின் மேலாய்
இயல்திடமாம் பக்கத்தில் அடப்பக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘கொல்லவே கூம்புதனில் ஒட்டை தன்னில்
கொடியான அடப்பன் என்ற காலமாகும்’ (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

5. ‘வில்லுவர்மத்துக்கு இரண்டு விரலுக்கு உயரே
அடப்பக்காலம் கொண்டால்……………………’ (வர்ம ஆணி-108)

6. ‘…………………………………………….. முண்டெலும்பு வர்மம்
விற்றியே நாலுவிரலுக்கு மேல் அடப்பு வர்மம் தான்’
(வர்ம லாட சூத்திரம்-300)

விளக்கம் :
இவ்வர்மம் முண்டெல்லு வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்கு மேலே அமைந்துள்ளதாக பல நூற்கள் குறிப்பிடுகின்றன. கூம்பு வர்மத்திலிருந்து ஓர் ஒட்டைக்குப் (12 விரலளவு) பக்கவாட்டில் இவ்வர்மம் காணப்படுகிறது. வில்லு வர்மத்திலிருந்து இருவிரலளவுக்கு உயரே இவ்வர்மம் உள்ளது.

குறிகுணம் :

அடப்பக் காலம் (16)
அறைகிறேன் அடப்பக் காலத்தை கேளு
அடித்த உடன் உடல் வியர்த்து குளிரும் கை கால்
நிறைகிறேன் முதிர்ந்து வரும் அந்த கைக்கால்
நிகழ் இருபத்தைந்தாகும் உச்சம் கொண்டால்
தறைகிறேன் பலநோய் கை கால் உளைச்சல் உண்டாகும்
தற்பரமே சாத்தியமாம் இதிவேயாகும்
உரைக்கின்றேன் படுவர்மம் என்று சொல்லி
உபாயமாய் சிகிட்சைகள் உற்று பாரே.

அடப்பக் காலத்தின் குணம் ஏதெனில் அடிபட்ட உடன் உடல் வியர்த்துகை கால்கள் குளிரும்.கை கால்கள் முதிரும். சரியான மாத்திரையில் கொண்டால் பல நோய்களை உருவாக்கும். கை கால்களுக்கு உளைச்சல் காணும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி