4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam
வேறு பெயர்கள் :
1. சுருதி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சருதி வர்மம் (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
3. சரிதி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
பெயர்க்காரணம் :
‘சுருதி’ என்றால் ‘செவி’ என்றும் ‘இசையொலி’ என்றும் பொருள் உண்டு. இவ்வர்மத்தில் தாக்குதல் ஏற்படும்போது காதில் பாதிப்பு ஏற்பட்டு, தலை சுற்றல் (தலை சுருட்டல் அல்லது தலை உருட்டல்) தோன்றும் இதனால் இவ்வர்மம் இப்பெயர் பெற்றிருக்கலாம். மேலும் தலையின் பின் சரிவில் உள்ளதால் சரிதி வர்மம் எனவும் பெயர் பெற்றிருக்கலாம்.
இருப்பிடம் :
1. ‘தானான உச்சியிலிருந்து எட்டு விரலின் கீழே
சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள பொற்சை என்ற காலமாமே’
(வர்ம கண்ணாடி-500)
2. ‘ஏறவே கொண்டைக்கொல்லி எண்விரல் கீழ் சருதியாமே’
(வர்ம லாட சூத்திரம்-300)
3. ‘உச்சியில் நின்றெண் விரல் கீழ் சருதி வர்மம்’
(அடிவர்ம சூட்சம்-500)
4. ‘நாமப்பா நாலுவிரல் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கும் பக்கத்தில் சுருதி வர்மம்’
(வர்மானி-16)
5. ‘நாளப்பா விரல் நாலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறை பக்கம் மேல் முன் சருதி வர்மம்’
(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
6. ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி
கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கும் மேல் பக்கமதில் சுருதிவர்மம்
(வர்ம சாரி-205)
விளக்கம் :
வர்ம சாரி-205 என்ற நூலானது சீறும் கொல்லிக்கு நாலு இறைக்குக் கீழ் பிடரி வர்மம் என்றும், நாலு இறைக்கு மேல் பக்கவாட்டில் சுருதி வர்மம் என்றும் குறிப்பிடுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.
வர்ம கண்ணாடி-500 என்ற நூலானது உச்சியிலிருந்து (கொண்டைக் கொல்லி) எட்டு விரலளவுக்குக் கீழே சுருதி வர்மம் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறது.
இரு நூல்களும் குறிப்பிடும் பொதுவான இடத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் எட்டு விரலளவு நீளத்திற்கு ஒரு நூல் கயிறும், நான்கு விரலளவு நீளத்திற்கு ஒரு நூல் கயிறும் எடுத்துக்கொள்ள வேண்டும். எட்டு விரலளவு நூல் கயிற்றை உச்சி வர்மமாகிய கொண்டைக் கொல்லியிலிருந்து பின் கீழ்ப்புறமாக சற்று பக்கவாட்டில் அளக்க வேண்டும். நான்கு விரலளவு நூல் கயிற்றை சீறும் கொல்லியிலிருந்து மேல்ப்புறமாக பக்கவாட்டில் அளக்க வேண்டும். இரு நூல் கயிறுகளும் சந்திக்கும் இடமே சுருதி வர்மத்தின் இருப்பிடமாகும். மேலும் இவ்வர்மம் பொற்சை என்ற வர்மத்திலிருந்து இரு விரலளவுக்கு மேலே அமைந்துள்ளது என்பதும் மேற்கண்ட பாடல் வரிகளிலிருந்து தெரிகிறது.
இடம் :
புறந்தலைக்கு பக்கவாட்டில் உள்ளது.