- திவளை வர்மம் – Thivalai Varmam
வேறு பெயர்கள் :
- திவளைக் காலம் (வர்ம பீரங்கி-100)
- கௌவிக் காலம் (வர்ம விளக்கம்)
இடம் :
காரை எலும்புக்கு மையத்தில் சற்றே கீழாக உள்ளது.
இருப்பிடம் :
- ‘மேலாக பூட்டெல்லு வர்மம் அஞ்சு
வேந்தனே அதிலிருந்து பக்கம் பற்றி
பாலாபார் மூவிரலில் திவளை வர்மம்
பகர்ந்திட்டேன் இடவலமும் ரண்டதென்று
சேலான திவளை வர்மம் இருவிரல் நேர்
சித்திரக்கால மென்ற வர்மம் ரண்டு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
- ‘காரை ரண்டு விரலினும் கீழ் திவளைக் காலம்
கண்ணு ஓரிறை வலத்தே யேந்திக்காலம்’ (வர்மானி-16)
- ‘சத்தியென்ற காரை ரண்டு விரலின் கீழ் திவளைக் காலம்
சாற்றுகிறேன் ஓரிறை வலத்தே யேந்திக் காலம்’ (வர்ம சாரி-205)
- ‘பனியான சத்தியொன்று திவளை ரண்டு’ (வர்ம சாரி-205)
- ‘தீரும் திவள காலம் திட்டமாய் கேளு மாற்றான் காலத்திற்கு
திறமாக இருவிரலுக்கு தாழே செப்பிடும் திவளைக் காலம்’ (வர்ம நிதானம்)
- ‘…………………………………………………………………….காரை
எல்லின் கீழ் ரண்டதிலே திவளைக் காலம்
கழிவில்லா தோரிறையின் வலமே ஏந்தி’ (வர்ம பீரங்கி-100)
- ‘காரை எலும்பிலிருந்து தாழ்வாக இரு மார்பிலும் இரு விரலுக்கு
உள்ளே இரு பொய்கை உண்டு’ (வர்மாணி நாலு மாத்திரை)
- ‘நெஞ்சில் பக்கமிரண்டும் வர்மம் எட்டு (மேல்) பக்கம்
நாலு காலம் உண்டென்று அறிக, இரண்டு கார எலும்பின்
கீழ் (திவளை) இரண்டு கார எலும்பின் மேல் (விலங்கு)’
(வர்மாணி நாலு மாத்திரை)
- ‘சாரடா காரை எல்லின் கீழ் திவளைக் காலம்
சாரும் இறை ஒன்றின் கீழ் திருமி வர்மம் என்றே
என்றதின் வலமாய் ஓர் இறையதில் ஏந்தி காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
- ‘தும்மி வர்மத்துக்கும் உந்தி வர்மத்துக்கும் இடைப்பட்ட அளவு எடுத்து (20 விரலளவு) அதில் நாலில் ஒரு பகுதி நீளத்தை (5 விரலளவு) முலைக்காம்பிலிருந்து நேரே மேலாக அளந்தால் காணுமிடம் திவளை வர்மமாகும்’ (வர்ம நூலளவு நூல்)
11.‘கௌவிக் காலம் காரை எலும்பினும் இரு விரலினும்
இரண்டு நெல்லினும் இருக்கிறது’ (வர்ம விளக்கம்)
விளக்கம் :
இந்த வர்மம் காரை எலும்பிலிருந்து முலைக் காம்புக்கு நேராக உள்ள கோட்டில் (Mid clavicle Lane) காரை என்பிலிருந்து இரு விரலுக்குத் தாழ்வாக அமைந்துள்ளது. முலைக் காம்பிலிருந்து சுமார் ஐந்து விரலுக்கு மேலாக அமைந்துள்ளது.
ஏந்தி வர்மத்திலிருந்து ஒரு விரலுக்கு அகப்பக்கம் (Medial) நோக்கி அமைந்துள்ளது. சித்திர வர்மத்துக்கு சுமார் இரண்டு அல்லது இரண்டரை விரலுக்கு மேலாக அமைந்துள்ளது.
மார்பிலுள்ள நெஞ்சென்பின் இரு பக்கங்களிலும் ஐந்து ஜோடி பூட்டெல்லு வர்மங்கள் காணப்படுகின்றன. இவற்றின் இடத்திலிருந்து மூன்று விரலளவுக்குப் பக்கவாட்டில் (Lateral) இத்திவளை வர்மம் அமைந்துள்ளது.
மாற்றான் வர்மத்துக்கு இருவிரலுக்குக் கீழே என்று வர்ம நிதானம் குறிப்பிட்டாலும், நேரே கீழாக இல்லாமல் கீழ் புறப்பக்கவாட்டில் (Infero- Lateral) அதாவது காரை எலும்புக்கு நடுப்பகுதிக்கு நேரே கீழாகவே இவ்வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்திலிருந்து ஓர் இறைக்குக் கீழே திருமி என்ற வர்மம் உள்ளதாக ‘அடிவர்ம சூட்சம்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்வர்மம் மையக் கோட்டிலிருந்து சுமார் 5 விரலளவுக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
சில நூற்கள் சத்தி என்ற சதிகார வர்மத்துக்குக் கீழே திவளை வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இது முற்றிலும் தவறானதாகும். ‘கார எலும்புக்குக் கீழே’ என்றிருக்க வேண்டியது ‘(சதி) கார வர்மத்துக்குக் கீழே’ என்று திரித்து எழுதப்பட்டுள்ளதை ஆய்வின் மூலம் அறிந்துணரலாம்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
- வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி