1. காக்கட்டை வர்மம் – Kakattai Varmam

 

வேறு பெயர்கள் :

  1. காக்கட்டை வர்மம் (வர்ம பீரங்கி-100)
  2. காக்கட்டை கணை வர்மம் (வர்ம நிதானம்-125)
  3. கோட்டை வர்மம் (வர்ம விரலளவு நூல்)
  4. கபீரம் (வர்ம விதி)
  5. அம்ச மர்மம் (அஷ்டாங்க ஹிருதயா)

 

இடம் :

தோளில் உள்ளது.

 

பெயர்க்காரணம் :

தண்ணீர் எடுத்துக்கொண்டு வர ‘காவடியை’ ஒத்த ஒரு சாதனத்தை பயன்படுத்துவார்கள். ஒரு நீளமான கம்பை தோளில் வைத்து அதன் இருபுறமும் இரு பெரிய பாத்திரங்களைக் கட்டித் தொங்கவிட்டிருப்பர். அந்த கம்புக்கு பெயரே ‘காக்கட்டை’ என்பது இந்த கம்பானது தோளில் அழுத்திக் கொண்டிருக்கும் இடமே காக்கட்டை வர்மத்தின் இருப்பிடமாகும்.

 

இருப்பிடம் :

  1. ‘வழுவில்லா தோளிலிரு விரலருகில்

வன்மையுள்ள காக்கட்டை காலம்’         (வர்ம பீரங்கி-100)

 

  1. ‘குன்றான காக்கட்டை ரண்டு சிமைதாமொன்று’ (வர்ம சாரி-205)

 

  1. ‘மன்றான தோளில் இரண்டங்குலமே நீங்கி

மருவுகின்ற தலமதிலே காக்கட்டை வர்மம்’   (வர்ம கண்ணாடி-500)

 

  1. ‘வளமான காக்கட்டை சிமைவர்மமாகும்

ஆகுமே கிளிமேகம் மேலதாகும்

அடலான பிடரிக்கு மேல் கண்டமது முப்பத்தேழு’    (வர்மசாரி-205)

 

  1. ‘ஆனாலும் சிமை வர்மம் தானம் தொட்டு

ஆறு விரல் பக்கம் மாறி வலம் இடமும்’

‘இடம் தனிலே காக்கட்டைக் காலம் ரண்டு

இதற்கு மறுபுறமதனில் நேரதாக

முடிச்சு வர்மம்…………………………’     (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

 

  1. ‘நிசமான சுமை வர்ம மதுதான் அப்பா

போச்செடா ஐந்துவிரல் அகலசொல்வேன்

புத்தியதால் காக்கட்டைக் காலமாகும்’.  (வர்மானி-16)

 

  1. ‘நெளியிலே தோளில்நின்று ரெண்டங் குலத்தில்

வெளியிலே ரண்டுவிதமான காக்கட்டைக் காலம்’    (வர்ம லாட சூத்திரம்-300)

 

  1. ‘பாரடா தோளிலிரு விரல்தான் நீங்கி

பரிவு காக்கட்டை யுடகாலமாகும்’      (அடிவர்ம சூட்சம்-500)

 

  1. ‘மன்றான தோளில் ரண்டங்குலமே நீங்கி

மருவுகின்ற தலம்தனிலே காக்கட்டை வர்மம்’ (வர்ம துறவுகோல்-225)

 

  1. ‘விலங்கு வர்மத்துக்கு நாலு விரலுக்கு உயரே கோட்டைக் காலம்’

(வர்ம விரலளவு நூல்)

 

  1. ‘சுமக்குமந்த தோள்தனிலே நடுமையத்தில் காணும் நீ

காக்கட்டை வர்மம் ஒன்று’.      (வாகட நிதானம்)

 

  1. ‘சீறும்கொல்லி வர்மத்திலிருந்து தலை சுற்றளவின் (32 விரலளவு)

நாலில் ஒரு பகுதிக்கு (8 விரலளவு) கீழ்ப்பக்கவாட்டில்

காக்கட்டை வர்மம் உள்ளது’   (வர்ம நூலளவு நூல்)

 

  1. ‘கழுத்தினிற் புறத்தினிலுங் கனத்த தோளின் மூட்டினிலும்

கிளைத்தெழு நரம்பு முற்றுங் கீறிவந்து பொருந்துமிடம்

இளைத்திடுங் கபீரவன்ம………..’  (வர்ம விதி)

 

விளக்கம் :

காக்கட்டை வர்மமானது கழுத்தும், தோளும் இணையும் பகுதியிலிருந்து இரண்டு விரலுக்குப் பக்கவாட்டில் தோள் பகுதியில் அமைந்துள்ளது.

 

கழுத்தின் முன் கீழ் நடுப்பகுதியிலுள்ள சிமை வர்மம் எனப்படும் சுமை  வர்மத்திலிருந்து சுமார் ஆறு விரலுக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

வல, இட காக்கட்டை வர்மங்களுக்கு இடையே ஒரு கோடு போட்டால் அதன் மையத்தில் முடிச்சு வர்மம் (வளைமுடிந்த வர்மம்) உள்ளது. இம்மூன்று வர்மங்களும் மேல் புறமுள்ள சீறும்கொல்லி வர்மத்திலிருந்து சுமார் எட்டு விரலளவுக்கு கீழாக அமைந்துள்ளன. விலங்கு வர்மத்திலிருந்து சுமார் நான்கு விரலளவுக்கு உயரே தோளின் மையத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது.

 

மாத்திரை :

இரு விரல் கொண்டு பிடித்தால் ஒரு விரல்-அரை அங்குலம் தாழும் போது வர்மம் ஏற்படும்.

 

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

  1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.