1. சுமை வர்மம் – Chumai Varmam

 

வேறு பெயர்கள் :

 1. சுமை வர்மம் (வர்ம பீரங்கி-100)
 2. சிமை வர்மம் (வர்ம சாரி-205)
 3. பிராண சாதம் (வர்ம விரலளவு நூல்)
 4. பத ஈரல் (பிராண அடங்கல்)
 5. பதைப்பு வர்மம் (வர்ம நிதானம்-500)

 

பெயர்க்காரணம் :

‘சிமை’ என்றால் சிகரம் அதாவது உச்சி, மார்புக் கூட்டின் உச்சிப் பகுதியில் இது அமைந்துள்ளதால் ‘சிமை வர்மம்’ எனப்பட்டிருக்கலாம். ‘திவளை‘ என்ற கழுத்தின் கீழ் பகுதியிலுள்ள குழியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் ‘திவளைக்குழி வர்மம்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

 

இடம் :

தொண்டைக்குழியில் உள்ளது.

 

இருப்பிடம் :

 1. ‘ஆமப்பா குரல் வளையில் சங்கு திரிகாலம்

அதன் கீழ் நாலங்குலத்தில் சுமை வர்மந்தான்’

(வர்ம பீரங்கி-100)

 

 1. ‘ சிமைதானொன்று’ (வர்ம சாரி-205)’

 

 1. ‘அறிவான குரல் வளையில் சங்குதிரி காலம்

அதற்கும் கீழ் அங்குலம் நாலில் சுமை வர்மம்’

(வர்ம கண்ணாடி-500)

 

 1. ‘ஆனாலும் சிமை வர்மம் தானம் தொட்டு

ஆறுவிரல் பக்கம் மாறி வலமிடமும்’

‘இடம் தனிலே காக்கட்டை காலம் ரண்டு’      (வ.ஒ.மு.ச.சூ.-1200)

 

 

 1. ‘நிசமான சுமை வர்மம் அதுதானப்பா

போச்செடா ஐந்துவிரல் அகலச்சொல்வேன்

புத்தியதால் காக்கட்டைக் காலமாகும்’   (வர்மானி-16)

 

 1. ‘இலக்கமாய் சொன்னதொரு கூம்பு வர்மம்

ஈராறு விரல் மேலே சுமை வர்மந்தான்

துலையான சுமை வர்மம் ஒரு விரல் மேல்

தும்மியென்ற காலமதின் தானமப்பா’

(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

 

 1. ‘காரைக்குழி வர்மத்துக்கு நாலு விரலுக்கு முன்னால் பிராணசாதம்

இது தொடு வர்மம். இது தொண்டை பதப்பு’  (வர்ம விரலளவு நூல்)

 

 1. ‘தொண்டைக் குழியில் பதைப்பு வர்மம்’ (வர்ம ஆணி-108)

 

 1. ‘ பருத்த குரல்வளை சங்குதிரி யாம்காலம்

கூரென்ற குரல்வளைக்கு கீழ் அங்குலம் நாலில்

குருதலத்தில் சுமை வர்மம் கூர்ந்து கேளு’ (அடிவர்ம சூட்சம்-500)

 

 1. ‘அறிவான குரவளையில் சங்குதிரிக்காலம்

அதற்கும் நாலங்குலத்தின் கீழ் சுமை வர்மம்’

(வர்ம துறவுகோல்-225)

 

 1. ‘பாரப்பா தொண்டை கீழ்க்குழியில் பதைப்பு வர்மம்’ (வர்ம நிதானம்)

 

 1. ‘வளமான காக்கட்டை சுமை வர்மம் தான்

ஆகுமே கிளிமேகம் மேலதாகும்

அடங்கியே கழுத்தின் மேல் முப்பத்தேழு’

(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)

 

 1. ‘பூணெல்லின் ஒருவிரல் மேல் பதப்பு வர்மம்’ (சதுரமணி சூத்திரம்)

 

விளக்கம் :

சுமை வர்மம் அல்லது சிமை வர்மம் என்று அழைக்கப்படும் இவ்வர்மம் குரல் வளையிலுள்ள சங்கு முடிச்சு என்ற சங்குதிரி வர்மத்துக்கும் நாலு விரலுக்குக் கீழாகவும், தும்மி வர்மத்துக்கு ஒரு விரலுக்குக் கீழாகவும் அமைந்துள்ளது.

காக்கட்டை வர்மத்திலிருந்து ஆறு விரல் மையம் நோக்கி இவ்வர்மம் அமைந்துள்ளது. இது ஒற்றை வர்மம். தொண்டைக் குழியில் பதைத்து (துடித்துக்) கொண்டிருக்கும் இடத்தில் இவ்வர்மம் உள்ளது.

 

மார்பிலுள்ள கதிர் வர்மத்துக்கு நாலு விரலுக்கு மேலே இவ்வர்மம் அமைந்துள்ளது. மார்புக்கு கீழ்ப்பக்கத்தில் அமைந்துள்ள கூம்பு வர்மத்துக்கு பன்னிரெண்டு விரலுக்கு மேல் இவ்வர்மம் அமைந்துள்ளதாக ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூல் குறிப்பிடுகிறது.

 

மாத்திரை :

ஓர் அங்குலம் தாழும் போது மயங்கும்.

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

 1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.