- உறக்க காலம் – Urakka Kalam
வேறு பெயர்கள் :
- உறக்க காலம் (வர்ம கண்ணாடி-500)
- மாத்ரிகா வர்மங்கள் நான்கில் ஒன்று (சுஸ்ருத சம்ஹிதா)
இடம் :
ஒட்டு வர்மத்துக்கு அருகில் உறக்க வர்மம் உள்ளது.
பெயர்க்காரணம் :
‘கண் மயங்கி மூடிப்போகும்’ என்றும் ‘விழிமூடும்’ என்றும் ‘மோதவே உறங்கும் பார் பல்வாய் பூண்டு, குறட்டை விட்டு உறக்கமது தானுண்டாகும்’ என்றும் வர்ம நூல்கள் குறிப்பிடுவதால் இந்த வர்மம் கொண்டால் உறக்கம் வரும் என்று தெரிகிறது எனவே இவ்வர்மம் ‘உறக்கக் காலம் எனப்பெயர் பெற்றிருக்க வேண்டும்.
இருப்பிடம் :
- ‘ஆரப்பா கீழ் நாடி ஒட்டுவர்மம்
அதனருகில் உறக்கமென்ற காலமாமே’ (வர்ம பீரங்கி-100)
- ‘நெறியான கீழ் நாடி ஒட்டுவர்மம்
நின்று வாயருகில் இரண்டு உறக்க காலம்’ (வர்ம கண்ணாடி-500)
- ‘துடியான ஒட்டையின் கீழ் அடப்பு வர்மம்
துகையான ஆறு விரலின் கீழ் உதிரக்காலம்
வடிவான முண்டிருக்கி உறக்க காலம்’ (வர்மசாரி-205)
- ‘உரமாக முன் சொன்ன உறக்க காலம்
உத்தமனே மூவிரலுக்கு உயரேத்தானே’
‘தானேத்தான் ஒட்டுவர்மம் என்று நாமம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
- ‘ஒப்பான முண்டிறுக்கியொன்று உறக்கம் ரண்டு’ (வர்மசாரி-205)
- ‘கவள வர்மத்துக்கு நாலு விரலுக்குக் கீழ் உறக்க காலம்
இது படுவர்மம் இதற்கு கீழ் நான்கு விரலுக்குள் உதிர காலம்’
(வர்ம விரலளவு நூல்)
- ‘கழுத்துச் சுற்றளவின் (20 விரலளவு) எட்டில் ஒரு பகுதி
நீளத்தை (2.5 விரலளவு) முன் பக்கமுள்ள முன்நாக்கு
தள்ளி வர்மத்திலிருந்து மேல் பக்கவாட்டில் அளந்தால்
உறக்க காலத்தை அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
- ‘கிருபையுடன் கொக்கி என்ற காலத்திலிருந்து தானே
குறியாக நெல்லிடைக்கு மேலதாக
தாக்கடா உறக்கமென்ற காலமாகும்’ (வர்ம சூடாமணி)
- ‘வேறுபடும் நாடியருகு தன்னைப் பற்றி
விரல் பதியும் குழியதிலே உறக்க காலம்’ (வர்ம சூத்திரம்-101)
- ‘நாடியில் நின்றும் மூன்று விரலினும் அகத்தே கொற நாடிக்கும்
ஒரு நெல்லிடைக்கும் வலத்தே உறக்க காலம் உள்ளது’ (வர்ம விளக்கம்)
- ‘கொக்கி வர்மத்துக்கு அடுத்து இருவசமும்
உறக்க காலம் கொண்டால்………..’ (வர்ம ஆணி-108)
- ‘உள்ளபடியே கழுத்தின் கீழ் நாடி தன்னில்
உத்தமனே அருகு பற்றி உறக்க காலம்’ (வர்ம கண்டி)
- ‘ஊக்கமாய் கீழ்நாடி அருகுபற்றி உறக்க காலம்’ (வர்ம நிதானம்)
- ‘ஆமப்பா நாடியருகு பற்றியே தான்
அடவான உறக்கத்தின் காலமொன்று’ (வர்ம பீரங்கி திறவுகோல்-16)
- குலமான குரல்வளையில் சங்குதிரி காலம்
குணக்கேடாய் ……………………………..
பிலமான சங்குதிரி யருகில் உறக்கக்காலம்
பொருந்தவே இந்தவர்மம் கொண்டால் கேளு (வர்ம நூலேணி – 200)
விளக்கம் :
பல நூல்கள் ‘கீழ் நாடியருகு பற்றி’ என்று குறிப்பிடுகின்றன. ‘கீழ் நாடி அருகு’ என்பது அதன் புற ஓரத்தைக் குறிக்காமல், கீழ் நாடி (முன்) கழுத்தோடு இணைந்துள்ள அக ஓரத்தைக் குறிக்கிறது. இவ்விடத்தைத் தான் ஒட்டு வர்மத்திற்கு மூன்று விரலுக்கு அகத்தே என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற வர்மங்களின் இருப்பிடங்களோடு ஒப்பாய்வு செய்யும் போது உறக்க வர்மமானது. ஒட்டு வர்மத்திலிருந்து நான்கு விரலுக்கு கீழாக சற்றே பக்கவாட்டில் (இரட்டை வர்மம்) உள்ளது. ஆனால் அலகு அருகின் அடியோரத்தை ஒட்டி அளக்காமல். ஒட்டு வர்மத்திலிருந்து நேரே அளந்தால் இது மூன்று விரலளவுக்கு கீழேயே உள்ளது.
மேலும் இவ்வர்மம், கீழடப்பின் வர்மத்திலிருந்து ஆறு விரலுக்குக் கீழாகவும், கவளவர்மத்துக்கும், நான்கு விரலுக்குக் கீழாகவும், உதிர வர்மத்திலிருந்து நான்கு விரலுக்கு முன்பாகவும் அமைந்துள்ளது.
இவ்வர்மம் கொக்கி வர்மத்துக்கு பக்கவாட்டில் சற்று மேலே அமைந்திருப்பதாக ‘வர்ம சூடாமணி’ என்ற நூல் குறிப்பிடுகிறது. முன் நாக்குத்தள்ளி வர்மத்திலிருந்து இரண்டரை விரலுக்குள் இவ்வர்மம் உள்ளதாக வர்ம நூலளவு நூல் குறிப்பிடுகிறது. சங்கு முடிப்பு காலத்துக்கு சுமார் இரண்டு விரலுக்கு மேல் உள்ளதாக ஒரு நூல் குறிப்பிடுகிறது.
வர்ம சூத்திரம் என்ற நூலானது நாடியருகு பற்றி விரல் பதியும் குழியில் இவ்வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இது முண்டிறுக்கி என்ற வர்மத்துக்கு சுமார் இரண்டு விரலுக்கு பக்கவாட்டில் காணப்படும் குழியாகவே இருக்க வேண்டும். இந்த வர்மத்தில் தாக்குதல் ஏற்படும் போது வேகஸ் நரம்பு பாதிப்படையலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
வர்ம நூலேணி என்னும் நூல் சங்குதிரி வர்மத்துக்கு பக்கத்தில் உறக்க காலம் இருப்பதாக குறிப்பிடுகிறது.
மாத்திரை :
இவ்வர்மத்தின் இரண்டு பக்கமும் பிடித்தால் இளகும். கையினால் ஒரு பக்கத்தில் ஒரு விரல் கொண்டு 1.5 அங்குலம் விலக்கித் தாழ்த்தினால் புளியங்கொட்டை போல இருக்கும். அதில் விரலால் அழுத்திவிட வேண்டும். 2 விரல் தாழும் போது மயங்கும்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
- வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.