1. ஒட்டு வர்மம் – Ottu Varmam

 

வேறு பெயர்கள் :

  1. ஒட்டு வர்மம் (வர்ம பீரங்கி-100)
  2. கீழ்நாடி மோணுமத்தி வர்மம் (தொடுவர்ம நிதானம்)
  3. மூர்க்கமென்ற காலம் (சதுரமணி சூத்திரம்)

 

பெயர்க்காரணம்:

கீழ்தாடை (Mandible) என்பின் இருபக்கங்களும் மத்தியில் ஒட்டியிருக்கும் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் ஒட்டு வர்மம் எனப் பெயர் பெற்றது.

 

இடம் :

நாடியில் (Chin) உள்ளது.

 

இருப்பிடம் :

  1. ‘ஆரப்பா கீழ் நாடி ஒட்டுவர்மம்’ (வர்ம பீரங்கி-100)

 

  1. ‘நெறியான கீழ் நாடி ஒட்டுவர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

 

  1. ‘தப்பாது ஒட்டுவர்மம் ஒன்றதாகும்’ (வர்ம சாரி-205)

 

  1. ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து சீறுங்கொல்லி

உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காய்

மடக்கி (8 விரலளவு) திலர்தகாலத்திலிருந்து அளந்தால்

ஒட்டு வர்மம் அறியாலாம்’            (வர்ம நூலளவு நூல்)

 

  1. ‘தானென்ற சுழிமுனையின் நாலங்குலம் கீழ்

தயவான ஒட்டுவர்மம் கொண்டால் கேளு’

(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

 

  1. ‘நால்விரல் விட்டு கீழே நாடியில் ஒட்டுவர்மம்

ஈர்விரல் ரண்டிற்கும் கீழ் இசைந்திடும் உறக்ககாலம்’

(வர்ம லாட சூத்திரம்-300)

 

  1. ‘வேறுபடு மூர்க்கமென்ற காலம் கேளு

வெல்லுவேன் கீழ்அலகு நாடிக்குண்டில்…’   (சதுரமணி சூத்திரம்)

 

  1. ‘உரமாக முன் சொன்ன உறக்ககாலம்

உத்தமனே மூவிரலுக்கு உயரத்தானே’

‘தானேதான் ஒட்டுவர்மம் என்று நாமம்’      (வ.ஒ.மு. ச.சூ.-1200)

 

  1. ‘மூன்றான கீழ்நாடி மோணுமத்தி

முன்னறிவால் காணுகின்ற யிடத்திலொன்று’   (தொ.வ. நிதானம்)

 

விளக்கம் :

இவ்வர்மம் கீழ் நாடியின் நடுவில் அமைந்துள்ளது. இது ஒற்றை வர்மமாகும். இது திலர்த வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு கீழும் சுழிமுனை வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்குக் கீழும் காணப்படுகிறது.

 

உறக்க வர்மத்திலிருந்து மூன்று விரலளவுக்கு உயரே இருப்பதாக ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலும் நான்கு விரலளவு (2 x 2 விரலளவு) தூரத்தில் உள்ளதாக வர்மலாட சூத்திரம்-300 என்ற நூலும் குறிப்பிடுகின்றன. இரண்டும் சரிதான் இந்த வித்தியாசம் கழுத்தை விரித்துச் சுருக்கும் போது ஏற்படும். பேதத்தினால் ஏற்பட்டதாகும்.

 

உடற்கூறு சான்று : வர்மசாரி-205. வர்ம பீரங்கி-100. வர்மக் கண்ணாடி-500 ஆகிய நூல்களும் இந்த வர்மத்தின் குறிகுணமாக ‘நாடி இரண்டும் பூண்டு போகும்’ என்று கூறியிருப்பதால் மேல் மற்றும் கீழ் தாடைகளின் இருபக்க சந்திகளும் ஒரே சமயத்தில் பாதிப்பு அடைகிறது என்று தெரிகிறது. இவ்வாறு இருபக்க சந்திகளும் ஒரே நேரத்தில் பாதிப்படைய வேண்டுமானால் தாக்குதல் இரு சந்திகளுக்கும் மையமான நாடிப்பகுதியிலேயே ஏற்படும் என்று புரிகிறது. எனவே இவ்வர்மம் நாடியின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

  1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.