19. பால வர்மம் – Pala Varmam

வேறு பெயர்கள் :

1. பால வர்மம் (வர்ம நிதானம்-500)

பெயர்க்காரணம் :

இவ்வர்மம் மூக்குப் பாலத்தில் (Bridge of the nose) அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இடம் :

கண்ணாடி வர்மத்துக்கு மேலே, மூக்குப் பாலத்தில் (Bridge of the nose) அமைந்துள்ளது.

இருப்பிடம் :

1. ‘சேலவே இன்னுமொரு வர்மம் கேளு
செயலான திலசமதின் அங்குலம் கீழே
பாலமென்ற வர்மமதில் காயம் கொண்டால்’
(வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200)

2. ‘நாதனே ஒருவிரல் மேல் சுழிமுனையாம்
முனையான இருவிரல் மேல் குருந்து வர்மம்
முக்கியமாய் ஒருவிரல் மேல் பாலக்காலம்
தனையான இருவிரல் மேல் திலர்தக் காலம்’ (சதுரமணி சூத்திரம்)

3. ‘சுந்தரமாம் நாசிமத்தி கண்ணாடிக் காலம்
துல்லியமாய் கண்டநடு பாலவர்மமாகும்.’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘வர்ணமே நாசிமத்தி வகுத்த கண்ணாடிக் காலம்
சொர்ணமே அதற்கடுத்து சூண்டிடும் பால வர்மம்’. (வர்ம லாட சூத்திரம்-300)

5. ‘போகவே அதனிடையில் பாலவர்மம்
புண்ணியனே இத்தலத்தில்…………..’ (வர்ம நிதானம்-500)

விளக்கம் :

இவ்வர்மம் திலர்த வர்மத்திலிருந்து ஒரு விரலளவுக்குக் கீழே உள்ளது. நாசி மத்தியில் கண்ணாடிக் காலத்துக்கு அருகில் உள்ளது. மூக்கின் அடியில் உள்ள சுழுமுனை வர்மத்துக்கு இருவிரலளவுக்கு மேலே குருந்து வர்மம் (சதுரமணி சூத்திரம்) உள்ளது. இந்த இடம் கண்ணாடி வர்மத்தின் இடமாகும். குருந்து வர்மம் கண்ணாடி போன்ற குருத்தெலும்பால் (Cartillage bone) ஆன மூக்குத்தண்டின் நடுவில் உள்ளது. இதற்கு ஒரு விரலளவுக்கு மேலே பால வர்மம் உள்ளது. இதற்கு இரு விரலுக்கு மேலே திலர்த வர்மம் உள்ளது என்று ‘சதுரமணி சூத்திரம்’ என்ற நூல் குறிப்பிடினும் உண்மையில் இதற்கு ஒரு விரலளவுக்கு மேலேயே திலர்த வர்மம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி