15. மந்திர காலம் – Manthira Kalam

வேறு பெயர்கள் :

1. மந்திர காலம் (வர்மசாரி-205)
2. மந்தார வர்மம்
3. மந்தி என்ற வர்மம் (வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200)

இடம் :

கருவிழி அருகில் கீழ்புறமாக உள்ளது.

பெயர்க்காரணம் :

‘மந்திரம்’ என்றால் ஆலோசனை அல்லது எண்ணம் என்று பொருள். இவ்வர்மத்தில் அடிபட்டால் உடன் மயக்கம் ஏற்படும் (வர்ம பீரங்கி-100) மேலும் எதையும் ஆலோசனை செய்ய முடியாதவாறு மூளை சோர்வுற்று அடிக்கடி கொட்டாவி ஏற்படும். (வர்மசாரி-205, வர்ம கண்ணாடி-500) எண்ணங்களை (மந்திரம்) செயலிழந்து போகச் செய்யும் வர்மம் ஆகையால் இது இப்பெயர் பெற்றிருக்கலாம்.

மந்தார வர்மமே மந்திர வர்மம் என மருவி வழங்கி வந்திருக்கலாம் இவ்வர்மம் கண்ணின் கருவிழியின் அருகில் இருப்பதால் இதில் அடிபடும்போது கண் பார்வை மந்தாரப் பட்டு (தெளிவற்று) தெரிவதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்த வர்மத்தில் அடிபட்டால் மந்தி (குரங்கு) போல முகம் சீறும். இதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவ்வர்மத்தின் குறிகுணங்களில் வயிற்றில் ‘மந்தம்’ ஏற்படுதலும் ஒன்று எனவே மந்த வர்மம் என அழைக்கப்பட்டு பின்னாளில் மந்திர வர்மம் எனத் திரிந்திருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘வாலமென்ற கருவிழியருகில் மந்திரகாலம்…’ (வர்மசாரி-205)

2. ‘இலேசான திலர்தமதில் நெல்லிடைவலத்து
மந்தி என்ற வர்மமது கொண்டதென்றால்
மந்திபோல முகம் சீறும்……..’ (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

3. ‘காணவே கருவிழியருகில் மந்திரக் காலம்
பூணவே அதற்கு ரண்டு புறமுமே அங்க வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
4. ‘இசைந்த கருவிழியருகில் மந்திரக்காலம்’
‘மந்திரமாம் காலத்தோடக வர்மம்
வலுவாக இருபுறமுமெனவே சொல்வார்’ (வர்ம கண்ணாடி-500)

5. ‘காணரிய கருவிழிக்கீழ் மந்திர காலம்’ (அடி வர்ம சூட்சம்-500)

6. ‘கருவிழியருகில் மந்திரக்காலமாமே’
‘மந்திரமாம் காலத்தோடக வர்மம்
வளமான இருபுறமும் எனவே சொல்வார்’ (வர்ம துறவு கோல்-225)

விளக்கம் :

பெரும்பான்மை நூற்களில் கருவிழியருகில் மந்திரக்காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதேத் தவிர, கருவிழிக்கு எந்தப் பக்கத்துக்கருகில் என்று குறிப்பிடவில்லை. ஆனால் அடிவர்ம சூட்சம்-500 என்ற நூல் மாத்திரம் கருவிழிக்குக்கீழ் மந்திரக்காலம் என்று குறிப்பிடுகிறது.

கருவிழிக்கு மேல்புறம் புருவ மத்தியில் புருவ காலம் அமைந்துள்ளது (வர்ம நிதானம்-500) எனவே மந்திரகாலம் கருவிழிக்கு கீழ்ப்புறத்திலேயே அமைந்திருக்க வேண்டுமென்று அறிய முடிகிறது.

இவ்வர்மம் திலர்த வர்மத்திலிருந்து சுமார் இரு விரலளவுக்கு பக்கவாட்டில் (Lateral) அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி