13. திலர்த வர்மம் – Thilartha Varmam

வேறு பெயர்கள் :

1. திலர்த காலம் (வர்ம சூத்திரம்-101)
2. திலச காலம் (வர்ம நிதானம்-500)
3. இடப (ரிஷப) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
4. தபனி வர்மம் (வர்மவிதி / சுஸ்ருதசம்ஹிதா)
5. சுழிசர்வாங்க அடங்கல்

இடம் :

நெற்றி நடுப்புருவத்தில் அரை விரலளவுக்குத் தாழ்வாக உள்ள பகுதி.

பெயர்க்காரணம் :

‘திலகம்’ என்ற சொல்லே ‘திலர்தம்’ என்று மாறி அமைந்திருக்க வேண்டும். திலகம் என்றால் ‘பொட்டு’ என்று பொருள். நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் (நெற்றிப் பொட்டு) பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

மேலும் ‘திலகம்’ என்றால் ‘சிறந்தது’ என்று ஒரு பொருளும் உண்டு. வர்மங்களில் இது சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘நேரப்பா நெற்றி நடு புருவம் தன்னில்
நேராக நெல்லிடைக்கு தாழ்வாக
பாரப்பா திலர்தகாலம் அதற்குப் பேரு…’ (வர்ம சூத்திரம்-100)

2. ‘காலமென்ற நெற்றியின் கீழ் திலர்தகாலம்…’ (வர்மசாரி-205)

3. ‘உடனே அந்த கண்ணாடி காலத்திற்கும்
ஒரு விரல் மேல் திலர்தவர்மம் கண்டுகொள் நீ’
(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

4. ‘காலமதில் வலத்திறை மூன்றுள்ளாய் மூர்த்தி
கால மிறையின் கீழ் திலர்த காலம்…’ (வர்ம பீரங்கி-100)
5. ‘சுருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்
முன்னவே சொன்னதின் கீழ் அரையிரைக்கு
முனையான திலர்தமென்ற காலம் மாகும்’ (வர்ம கண்ணாடி-500)

6. ‘கண்ணாடி காலத்துக்கு ஒன்றரைவிரலுக்கு
மேலே திலர்தகாலம்’ (வர்ம விரலளவு நூல்)

7. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறுங்கொல்லி
உட்படச் சுற்றளவைத்து இரண்டாக மடக்கி
நோக்கினால் சீறும் கொல்லியும் திலர்தகாலமும் அறியலாம்’
(வர்ம நூலளவு நூல்)

8. ‘தீரவே கும்பிடுங்காலங்கேளு நிர்ணயமாய்
நெற்றிநடு திலசக் காலம் நெல்லிடையாம்’
‘நெல்லிடையாம தன்கீழே கும்பிடுங் காலம்…’ (வர்ம நிதானம்-500)

9. ‘மீளுமே இடப வர்மம் பரையதாகும்
மிதமான பரைதானே திலர்தகாலம்’
(வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

10. ‘மற்றிரண்டு புருவ நடு தபனி யெனும் மொரு வன்மம்’ (வர்மவிதி)

விளக்கம் :

நெற்றி நடுவில் இருபுருவ மத்தியிலிருந்து ஒரு நெல்லளவுக்கு கீழாகவும், கும்பிடு வர்மத்திலிருந்து அரைவிரலளவுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது.

கண்ணாடி வர்மத்தின் மூலம் இடமறிதல் :

கண்ணாடி வர்மத்துக்கும் திலர்த வர்மத்துக்கும் இடைப்பட்ட தூரம் 1, 1.5, 2 விரலளவுகள் என்று மூன்று வெவ்வேறு நூல்கள் வேறுபாடான அளவுகளைக் குறிப்பிட்டாலும், திலர்த காலத்தின் இருப்பிடத்தைப் பற்றிய சந்தேகத்துக்குரிய குழப்பங்கள் ஏதும் இல்லை. ஏனெனில் அது நெற்றி நடுவில், இருபுருவங்களுக்கும் மைய பகுதியிலிருந்து ஒரு நெல்லிடை அளவுக்கு (0.5 வி.அ.) கீழாக உள்ளது என்பது மிகவும் பிரபலமாக தெரிந்த ஒன்று. எனவே கண்ணாடி வர்மம் திலர்த வர்மத்திலிருந்து எத்தனை விரலளவு தூரத்தில் அமைந்துள்ளது என்பதுதான் முக்கியம். இதை பற்றி கண்ணாடி வர்மத்தில் காணலாம்.

மூர்த்தி வர்மத்தின் மூலம் இடமறிதல் :

லாட சூத்திரம்-300, வர்ம பீரங்கி-100, வர்ம கண்ணாடி-500 ஆகிய நூல்கள் மூர்த்தி வர்மத்துக்கு அரை இறைக்கு கீழே திலர்த வர்மம் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் வர்ம சாரி-205 என்ற நூல் மூர்த்தி வர்மத்துக்கு ஓர் இறைக்குக் கீழே அண்ணான் வர்மம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. மேலும் இந்நூல் மூர்த்தி வர்மத்தை இரட்டை வர்மம் என்று குறிப்பிடுகிறது. எனவே வர்ம பீரங்கி, வர்ம கண்ணாடி ஆகிய நூல்கள் குறிப்பிடும் மூர்த்தி வர்மத்தின் இருப்பிடம் வாகட நிதானம் என்ற நூல் குறிப்பிடும் லாட மூர்த்தி வர்மம் ஆகும். (விளக்கம் : லாட மூர்த்தி வர்மத்தில் காண்க.) இந்த லாட மூர்த்தி வர்மத்துக்கும் அரை இறைக்குக் கீழே திலர்த வர்மம் காணப்படுகிறது.

மாத்திரை :

ஒரு சாணும், 2 விரலுமான தூரத்திலிருந்து கை முறுக்கி குத்தும் போது அல்லது இடிக்கும் போது மயக்கம் உண்டாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.