11. மூர்த்தி காலம் – Moorthi Kalam
வேறு பெயர்கள் :
1. மூர்த்தி வர்மம் (வர்மசாரி-205)
2. வலமூர்த்தி காலம் (வர்ம லாட சூத்திரம்-300)
பெயர்க்காரணம் :
மும்மூர்த்தி வர்மங்கள் மூன்றில் இது இரட்டை மூர்த்தி வர்மமாகும். இலாடமூர்த்தி வர்மம் ஒற்றை மூர்த்தி வர்மமாகும். இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் முறையே பிரம்மா (வாதம்), விஷ்ணுவை (பித்தம்) பிரதிநிதியாகக் கொண்டு அழைக்கப்படுவதால் இவ்வர்மம் மூர்த்தி வர்மம் எனப் பெயர் பெற்றது.
இடம் :
மூக்குக்கு அருகில் இரண்டு பக்கமும் உள்ளது.
இருப்பிடம் :
1. ‘கர்மமடா ரண்டிறை கீழ் காம்பூரிக்காலம்
கருது மூன்றிறை வலத்தே மூர்த்திக்காலம்
தர்மமடா இறையின் கீழ் அண்ணான் காலம்’ (வ.ஒ.மு. சாரி-1500)
2. ‘பண்பான காம்பூரி ரண்டு மூர்த்தி ரண்டு’ (வர்ம சாரி-205)
3. ‘அனாதி ரண்டிறைக்கு கீழ் காம்பூரிக் காலம்
இன்னும் மூன்றிறை வலத்தே மூர்த்திக் காலம்
இன்னு யிறையின் கீழ் அண்ணான் காலம்’ (வர்மானி-16)
4. ‘நாடுமிறை ரண்டின் கீழ் காம்பூரியாகும்
மானென்ற இறை மூன்றில் வலமே மூர்த்தி
மருளிறையாம் இறையின் கீழ் அண்ணான் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
5. ‘கருத்தான கண்ணினடி அருகுபற்றி
கூர்ந்து நிற்கும் முனைகள் இருவசங்கள் தாவி
கண்டுகொள் இத்தலமிரண்டும் மூர்த்தியென்றகாலம்’ (உற்பத்தி நரம்பறை-1000)
விளக்கம் :
இவ்வர்மம் காம்பூரி (காம்போதி) வர்மத்துக்கு மூன்று இறைக்கு வலத்தேயும் (Medial), அண்ணான் வர்மத்துக்கு ஓர் இறைக்கு மேலாகவும் உள்ளது. இது இரட்டை வர்மமாகும்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி