108. துடை தட்டி காலம் – Thudai Thatti Kalam

வேறு பெயர்கள் :

1. கோச்சு வர்மம் (வர்ம நிதானம்-300)
2. தொடை வர்மம் (வர்ம ஆணி-108)
3. உறுமி என்ற துடைதட்டி காலம் (அடிவர்ம சூட்சம்-500)
4. உறுமிக்காலம் (வர்ம பீரங்கி-100)
5. பச்சி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
6. ஆந்தை வர்மம் (வர்ம சாரி-205)

இடம் :

தொடை முன் பக்கத்தின் மத்தியிலுள்ள ஆமை வர்மத்துக்கு சுமார் 3 விரலளவுக்கு அகப்பக்கவாட்டில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘ஆனாலோ துடையில் முன்பக்கம் மத்திபத்தில்
அடிநரம்பில் கோச்சு வர்மம் கொண்டதானால்’ (வர்ம நிதானம்-300)

2. ‘பார்க்கவே தொடை முதுகில் ஆமக்காலம்
பக்கமதில் கோச்சுவர்மம்…..’ (வர்ம நிதானம்-500)

3. ‘பண்பான நடுத்துடையருகில் கோச்சுவர்மம்
தூரப்பா துடை நடுவில் ஆமைக்காலம்
துடையிடையின் கோச்சு வர்மத்தினடியில் பதைக்கால் வர்மம்’
(வர்ம நிதானம்-300)

4. ‘தொடைவர்மம் : தொடை நடுவில் நான்கு வர்மம்’ (வர்ம ஆணி-108)

5. ‘முட்டுவர்மம் துடையினடி உறுமிக்காலம்’ (வர்ம பீரங்கி-100)

6. ‘ஆனதொரு துடை நடுவில் உறுமி வர்மம்’ (வர்ம துறவு கோல்-225)

7. ‘ஆனதிலே துடை நடுவில் பச்சிவர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

8. ‘செயலான உறுமி என்ற துடைதட்டிகாலம்’ (அடிவர்ம சூட்சம்-500)
9. ‘எழில் துடையின் நடுவில் துடைதட்டிகாலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

10. ‘வளமான துடை நடுவில் கரியின் வர்மம்
வருந்தவே அதன் நடுவில் ஆந்தை வர்மம்’ (வர்ம சாரி-205)

விளக்கம் :

இவ்வர்மம் தொடை முன்பக்கத்தின் மத்தியிலுள்ள ஆமை வர்மத்துக்கு அருகே சுமார் மூன்று விரலளவுக்கு அகப்பக்கவாட்டில் (Medial) உள்ளது. இவ்வர்மத்துக்கு நேரே மேலே தொடையின் அடிப்பாகத்தில் பதைக்கால் வர்மம் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி