106. முட்டு வர்மம் – Muttu Varmam

வேறு பெயர்கள் :

1. முட்டு வர்மம் (வர்ம சூத்திரம்-101)
2. மூட்டு வர்மம் (வர்ம கண்ணாடி-500)
3. கால்மூட்டு வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. சானு (வர்ம விதி)

இடம் :

கால்முட்டு பொருத்தின் முன்பக்கமாக உள்ளது.

பெயர்க்காரணம் :

இரு என்புகள் இணைவதாலும் முட்டு பகுதியில் அமைந்துள்ளதாலும் மூட்டு வர்மம் எனப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘என்றனவே காலதிலே முட்டுவர்மம்
எழுகின்ற மூவிரலில் பக்கவர்மம்
நன்றாக அசகுதிரி கண்ணு வர்மம்’ (வர்ம சூத்திரம்-101)

2. ‘தானதிலே முட்டிசைவில் மூட்டு வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘ஆமவர்மம் இதற்கு பத்து விரலுக்கு கீழே
கால்மூட்டு வர்மம் இது தொடுவர்மம் இதற்கு
பத்து விரலுக்குக் கீழே குதிரைமுக வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

4. ‘வெகுகுதிரைமுக காலம் முட்டு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

5. ‘ஆடே நீமுட்டு பொருத்துதனில் முட்டுவர்மம்
அப்பனே இத்தலம் தான் அசைவு திரிகண்ணுமாகும்’ (வர்ம நிதானம்-300)

6. ‘மென் கணுக்காலின் மேலே மேவிய துடையின் கீழே
தன் பொருத்த தனிற் சானுத் தன்மமாம் வன்மமாகும்’ (வர்ம விதி)
விளக்கம் :

காலின் மூட்டுப் பகுதியில் (Knee Joint) முன்பக்கமாக சிரட்டை என்பை ஒட்டி மேலே இவ்வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்துக்கு சுமார் மூன்று விரலளவுக்குப் பக்கவாட்டில் அசகுதிரி கண்ணுவர்மம் உள்ளது. இந்த இரு அசைவு திரி கண்ணு வர்மங்களுக்கு இடைப்பட்ட பகுதியும் முட்டு வர்மம் (A.L.L1t-24) என்றே கொள்ளப்படுகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி