விஷக்கடிகள் (Poisonous Insect Bites)
பாம்பு கடிக்கு
பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர் இல்லை. விஷம் உள்ளதோ, இல்லாததோ என்று தெரியாது. பாம்பினுடைய வடிவம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் பயத்திற்கு உரியது. குளிர் பிரதேசத்தில் வாழும் பாம்புகளை விட இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற உஷ்ண பிரதேசங்களில் வாழும் பாம்புகள் நச்சுத் தன்மை அதிகம் உள்ளது. கொடிய விஷத்தை கொண்ட பாம்பு கடித்து விட்டால் மீள்வது மிக அரிது. அவைகளில் எட்டடி வீரன் மலைப்பிரதேசங்களில் காணப்படும் கரிவழலை போன்ற பாம்புகள் கடித்தால் வைத்தியரிடமோ மருத்துவமனைக்கோ செல்லும் முன்னால் குறைந்த நேரத்தில் இறந்து விடுவார். மேலும் தாழை மரத்தின் பூவில் இருக்கும் பாம்பு ராஜ நாகம் என்று அறியப்படுகிறது. அது வடிவத்தில் மிக சிறியதாக இருந்தாலும் விஷத்தன்மை மிக அதிகம்.
பசியினாலும், பயத்தினாலும், மிதிபடுவதனாலும், பற்களில் விஷ மிகுதியாலும், கோபத்தாலும், பிறவி வினையினாலும், பகையினாலும், பெரியோர் சாபத்தாலும், பாம்பு மக்களை கடிக்கிறது. விஷத்தின் தன்மையை ஆதாரமாக கொண்டு விஷ பாம்புகளை நல்ல பாம்பு வகை என்றும், விரியன் வகை என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு வகையிலும் எண்ணற்ற பிரிவு பாம்பு வகைகள் காணப்படுகின்றன.
நல்ல பாம்பு வகையில் பத்தி உடைய பாம்புகள் சுமாராக 4 அடி முதல் 25 அடி வரை நீளம் கொண்ட பாம்புகள் உண்டு. மரங்களில் தொங்கி கிடந்து இரை தேடும் பாம்புகள் இதிலும் அதிகமாக நீளம் உடையவைகள் ஆகும்.
மலைப்பாம்புகள் பருமனில் பெரியதும், பெரிய உயிரினங்களை விழுங்குவதுமாகிய தன்மை இருந்தாலும் அதற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விஷத்தன்மை கிடையாது. அது கடித்தால் மனிதன் இறந்து போவதில்லை. ஆனால் கடித்த இடத்தில் புண் ஆறுவதற்கு வெகு நாட்கள் ஆகும். சில வேளை அந்த இடம் வெள்ளை நிறமாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
தண்ணீரில் வாழும் பாம்புகள் விஷத் தன்மை குறைந்தது ஆகும். ஆனாலும் தக்க முறையில் சிகிச்சை செய்யாவிட்டால் உடலில் அசிங்கமான தழும்புகளை உருவாக்கும்.
விரியன் பாம்பு வகையில் இரத்த அணலி கடித்தால் உடலில் உள்ள இரத்தம் அடர்த்தி குறைந்து நீர்த்து போகும். ஆகையால் உமிழ்நீரிலும், மூக்கிலிருந்து வெளியேறும் நீரிலும், மல ஜலங்களிலும், வியர்வையிலும் இரத்தம் வெளியேறிக் கொண்டு இருக்கும். ஊது அணலி கடிப்பதில்லை. அதற்கு பதிலாக விஷத்தை மனிதர்களுக்கு நேராய் ஊதுகிறது. அதன் காற்று உடலில் படும் போது ஆங்காங்கே தடித்து வீங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இவ்வகையான பாம்புகளில் சில பறந்து வந்து கண்களுக்கு நேராய் விஷம் ஊதுகிறது. இந்த விஷக்காற்று கண்களில் பட்டு கண் எரிச்சல் ஏற்படுகிறது. உடனடியாக சுத்தமான நீரில் கழுகினால் அதனுடைய விஷத்தன்மையில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அப்படி கழுவாவிடில் கண் பார்வை இழக்கவும் வாய்ப்பு உண்டு.
குளிர் பிரதேசங்களில் பாம்பு கடித்தால் எப்படிப்பட்ட கொடிய விஷம் உள்ளதானாலும் ஆள் இறந்து போவதில்லை. ஆனாலும் உடனடியாய் அதற்கேற்ற சிகிச்சை செய்யாவிடில் இரண்டோ மூன்றோ மாதம் கழித்து தன்னை பாம்பு கடித்ததை மறந்து சூடான பிரதேசத்தில் போக நேர்ந்தால் அப்போது முன் பாம்பு கடித்ததின் விஷம் ஏறி ஆள் இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.
பாம்பு கடித்தால் முன்னெச்செரிக்கை
கையிலோ காலிலோ பாம்பு கடித்தால் உடனடியாக முட்டுக்கு மேலான பகுதியில் இரத்த ஓட்டம் ஏற்படாத அளவுக்கு இறுக்க கட்டுவது நல்லது. அப்படி கட்டினால் இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் வழி இருதயத்தில் சென்று எல்லா இடத்திற்கும் பரவ முடியாதபடி தடுக்க முடியும். மேலும் கடிவாயை பெரிது பண்ணி இரத்தத்தை கீழே பீச்சி விடுவது நல்லது. ஒரு கோழியை கொண்டு வந்து கடிவாயில் கோழியினுடைய குதத்தை சேர்த்து வைத்தால் கோழி அந்த விஷத்தை உறிஞ்சி எடுக்கும். அதனால் கோழி செத்துப் போகவும் வாய்ப்பு உண்டு. கோழி செத்துப் போனால் மாற்றுக் கோழி கொடுக்க வேண்டும். அப்படி செய்வதனால் விஷத்தை வெளியேற்றலாம். மேலும் வாயில் புண் அல்லது காயம் இல்லாதவர்கள் கடிவாயை பெரிது பண்ணி வாயினால் உறிஞ்சி வெளியேற்றலாம். கடிபட்டதின் மேல் பனிக்கட்டி வைத்து கட்டுவது மிகவும் நல்லது.
கடிபட்டால் அறிகுறிகள்
நல்ல பாம்பு கடித்து நரம்புகளில் விஷம் ஏறுவதினால் கடித்த இடத்தில் எரிவும் திமிரும் உண்டாகும். குமட்டல், கை கால் தளர்வு, மயக்கம், பேச்சு குளறல், மதி மயக்கம், மூச்சு முட்டல், வாயிலும், மூக்கிலும் நுரை வெளியேறுதல் போன்ற குறி குணங்கள் காணப்படும். மேலும் விஷத் தன்மை அதிகமானால் உடம்பும், பற்களும் கறுத்துப் போகும். இரத்தம் கட்டியாகும்.
விரியன் கடித்தால் எரிவும், இரத்த பாய்ச்சலும், வீக்கமும், மயக்கமும், வியர்வையும் ஏற்படும். வாயில் இருந்தும் மூக்கில் இருந்தும் இரத்தம் வரும். இருதயத் துடிப்புகள் குறையும். கண்கள் மேல் சுருங்கும்.
சிகிச்சை முறை
பாம்பு கடிப்பட்ட நோயாளிக்கு வெகு விரைவில் சிகிச்சை வழங்குதல் நல்லது. பாம்பை கண்டவுடன் கடிக்காவிட்டாலும் மயங்கி விழுவாரும் உண்டு. எனவே பாம்பு கடிபட்டவரா இல்லையா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பாம்பு கடித்திருந்தால் பல் பட்ட இடத்தில் எரிவு போன்ற அறிகுறிகள் காணப்படும். பாம்பு கடிபட்டவரின் வாயில் நல்லமிளகு போட்டு சுவைக்க கூறவும். காரம் தோன்றாமல் இருந்தால் உடம்பில் விஷம் உண்டு என தீர்மானிக்கலாம். கடிப்பட்ட இடத்தை சோதிக்கவும். பாம்பின் ஒரு பல் பட்டிருந்தால் அது கால் கடி. இரண்டு பல் பட்டிருந்தால் அரை கடி. மூன்று பல் பட்டிருந்தால் முக்கால் கடி. நான்கு பல் பட்டிருந்தால் முழுக்கடி. முதல் இரண்டு இனமும் பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் மூன்றும் நான்கும் மரணத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஆகையால் வெகு விரைவில் ஏற்ற சிகிச்சை செய்வது உத்தமம்.
அலோபதி (English Treatment) முறைப்படி நல்ல பாம்பினுடைய விஷத்தை கொண்டு அணலி விஷத்துக்கும், அணலி விஷத்தை கொண்டு நல்ல பாம்பு விஷத்துக்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆகையினால் கடித்த பாம்பினுடைய இனம் தெரியாமல் சிகிச்சை செய்தால் நோயாளி இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நாட்டு மருந்துகளாகிய பாஷாண வகைகளை கொண்டு தயாரிக்கும் மருந்துகளால் ஒரே மருந்தினால் எவ்வித பாம்பு கடித்தாலும் கொடுத்து சுகப்படுத்தலாம்.
1. பாம்பு கடித்தவரை வாழைப் மடலில் படுக்க வைத்து வாழைத் தடை பிழிந்து 180 மில்லி அளவுக்கு உள்ளே குடிக்க கொடுப்பது நல்லது.
2. வேப்பெண்ணெயை 15 மில்லி அளவுக்கு எடுத்து உள்ளே கொடுத்தால் விஷத்தன்மையை முறிக்கலாம்
3. வெற்றிலையை கசக்கி சாறு பிழிந்து மயக்கமுற்றோரின் நாசியிலோ, கண்ணிலோ விடவும் அப்போது மயக்கம் தெளியும்.
4. துளசியினுடைய தளிர் இலை, தும்பை இலை, வசம்பு, வெங்காயம், தாய்ப்பால், கந்தகம் இவைகளை எடுத்து எல்லாம் கலந்து சாறாக்கி பக்குவப்படுத்தி நாசியில் நசியம் விட பாதிப்பு மாறும்.
5. களற்சி இலை, சிறு தும்பை, கரும் துளசி, மாவிலங்கு, முதிர்ந்த வேப்பிலை, முடக்கொத்தான், பொடுதலை இந்த ஏழு வகை மூலிகைகளையும் சம அளவு எடுத்து சிறு நீர் விட்டு நன்றாய் அரைத்து வெதுப்பேற்றி கடிவாயில் பூச விஷம் நீங்கும்.
6. எருக்கிலைச் செடியின் தளிர் இலையும், பூவும், வேரும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து 3 கிராம் அளவு எடுத்து 100 மில்லி சிறு நீரில் கலக்கி குடிக்க கொடுக்கவும். பத்தியம் பார்க்கவும். (ஆண்களுக்கு பெண் குழந்தைகளின் சிறுநீரும், பெண்களுக்கு ஆண் குழந்தைகளின் சிறுநீரும் கொடுப்பது நலம்)
7. கீழ்காய்நெல்லி இலை, துளசியிலை, முருக்கிலை இவைகளை சமனாய் எடுத்து வந்து அரைத்து கடிப்பட்ட இடத்தில் பூச விஷம் நீங்கும்.
பாம்பு கடிப்பட்ட நோயாளி மயக்கமாய் இருந்தால் அவரின் கண் இமைகளை திறந்து பார்க்கவும். கண் விழி மேலே சொருகி இருந்தால் உயிரானது மேல் நோக்கி அடங்கி இருக்கிறது எனவும், கண் விழி கீழ் நோக்கி இருந்தால் உயிர் கீழ் நோக்கி அடங்கி இருக்கிறது எனவும், பக்கங்களில் ஒதுங்கி இருந்தால் பக்கவாட்டில் உயிர் அடங்கி இருக்கிறது எனவும், கண்கள் திறந்தவாறு இமை சிமிட்டாமல் இருந்தால் உயிர் பிரிந்து விட்டது என்றும் அறிந்து கொள்ளலாம்.
பாம்பு கடித்து இறந்து விட்டால் உடனடியாக இறந்ததாக நிர்ணயித்து விடக் கூடாது. பல உயிர் சோதனைகள் செய்து பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும். கடிபட்டவரின் தலை மயிர் காதுகளின் பக்கத்தில் பிடித்து இழுத்தால் வலியின் காரணத்தினால் உடலில் அசைவு ஏற்பட்டாலும், பிரம்பினால் நோயாளியை அடிக்க தடிப்பு அல்லது சிவப்பு ஏற்பட்டாலும், குளிர்ந்த நீரை உடலில் தொடர்ச்சியாய் விட ரோமங்கள் சிலிர்த்தாலும், கால் கை விரல்கள் இழுக்க நெட்டி ஒடியும் சத்தம் கேட்டாலும் உடலில் உயிர் அடங்கி இருக்கிறது என்று அறிய வேண்டும். காதை மூடினால் உள் இரைச்சல் இல்லாமல் இருந்தாலும், சூரியன், சந்திரன் விளக்கு இவைகள் ஒளி கண்ணில் தோன்றாமல் இருந்தாலும், நகக்கண்களை கிள்ளினால் உணர்ச்சி இல்லாமல் இருந்தாலும் உயிர் பிரிந்தது நிச்சயம்.
பாம்பு கடிக்கு கலிக்கம் நசியம் முறைகள்
இந்துப்பு, வெங்காரம், கந்தகம், அரிதாரம், ரெசம், கடுகு, பெருங்காயம் இவைகளை சமனாய் எடுத்து முதலில் ரெசம், கந்தகம் இவற்றை நன்றாக அரைத்து பின் மற்ற மருந்துகளை ஒவ்வொன்றாய் சேர்த்து நன்றாக அரைத்து பேய் பீர்க்கன் கொடி சாறு விட்டு நன்றாக அரைத்து கயிறு போல் மாத்திரை ஆக்கவும். தாய்பாலிலோ, பேய் பீர்க்கன் சாற்றிலோ ஒரு குன்றி மணி அளவு உரைத்து இரு கண்களிலும் கலிக்கம் போடவும்.
இலுப்பை விதை, வாழைத்தண்டு, காட்டாமணக்கு இலை, முஞ்சூறு பல், பச்சைப் பாம்பு கண்டம் இவைகளை சம எடை எடுத்து உலர்த்தி பொடித்து நசியம் செய்யவும். அந்த பொடி நாசி வழியாய் தலைக்கு ஏறி விஷத்தை தணிக்கும். அடங்கிய உயிர் மீண்டும் திரும்பும்.
துரிசு, பூடு, நீல ஊமத்து இலை, துத்தி இலை, நறுந்தாளி இலை, பலாசு விதை இவைகள் சமனாக எடுத்து இடித்து மண்பானை ஓட்டில் வறுத்து கடிவாயில் ஒற்றடம் கொடுக்க விஷங்கள் முறிந்து போகும்
புகை ஊட்டும் முறை
கற்பூரம், பெருங்காயம், கந்தகம், ரெசம் இவைகளை சமஅளவு எடுத்து கல்வத்தில் இட்டு வெள்ளெருக்கன் பால் விட்டு அரைத்து ஒரு வெள்ளைப் பருத்தி (Cotton White Cloth) துணியில் தடவி உலர்த்தி திரி போல் சுருட்டி வைத்துக் கொண்டு, அந்த திரியை கொளுத்தி எரிவதை அணைத்து அதிலிருந்து வரும் புகையை கடிபட்டவன் மூக்கு வழியாக உள்ளே செலுத்துவதால் பாம்பு கடியால் ஏறிய விஷம் முறிந்து மரணத்திலிருந்து மீள்வர்.
நாக தாளி விதையைப் பொடித்து மாற்றுப் பாலாரின் சிறுநீரில் கலக்கி கொடுக்க விஷம் நீங்கி விடும். இந்துப்பை பெண்ணின் சிறுநீரில் கலக்கி மூன்று முறை வடிகட்டி ஆண் நோயாளிக்கும், அவ்விதமாக இந்துப்பை ஆணின் சிறுநீரில் கலக்கி மூன்று முறை வடிகட்டி பெண் நோயாளிக்கும் குடிக்க கொடுக்க விஷம் நீங்கிவிடும்
மீளாக் கடி
ஒரே பல் அழுத்தின போதிலும் அந்த பல் பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வழிந்தாலும், அல்லது திருகியது போல் தோன்றினாலும், அந்த இடம் ஆமை ஓட்டினைப் போல் மேல் எழும்பினாலும் அசாத்தியம் ஆகும். சில பாம்புகளுக்கு தாடைக்குள் ஒவ்வொரு கோரைப் பல் முளைத்திருக்கும். அந்த கோரைப் பல் பட்டு விஷம் ஏறினாலும் மரணம் நிச்சயம். பாம்பு கடித்த இடத்தில் கறுப்பு நிறமாகவும், கனிந்த நாவல் பழ நிறமாகவும் காணப்பட்டால் அவ்விஷம் மிகவும் கொடியது ஆகும்.
பாம்பு கடித்த இடத்தை முகர்ந்து பார்த்தால் தாழை மலர் வாசனை வீசினால் நல்ல பாம்பு கடி எனவும், புளியம் பூ வாசனை வீசினால் மண்டலி பாம்பு விஷம் எனவும், சுக்கு, மிளகு இவைகளின் வாசனை வீசினால் சிறிய வகை சாதாரண பாம்பு எனவும், இந்த மணம் யாதொன்றும் இல்லாமல் இருந்தால் சில்லறை விஷக்கடி எனவும் அறிந்து கொள்ளவும்.
மனிதருடைய தலை, நெற்றி, புருவ மத்தி, தாடை, உதடு, நெஞ்சுக்குழி, உள்ளங்கை, உள்ளங்கால், மார்பு, முலைக்கண், தொப்புள், ஆண்குறி அல்லது பெண்குறி, குய்யம், அக்குள் போன்ற இடங்களில் பாம்பு கடித்தால் மீளாக்கடியாகும்.
பௌர்ணமி, அமாவாசை, பஞ்சமி, பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய ஆறு திதிகளில் பாம்பு கடித்தாலும், மயானம், பல பேர் கூடும் இடம், நாற்சந்தி, முச்சந்தி, அரச மரத்தடி, ஆல மரத்தடி, புன்னை மரத்தடி, அரளிசெடி மூடு, நந்தவனம், குளக்கரை, ஆற்றங்கரை, சுனைக்கரை, வீட்டுக் கூரை, வீட்டுச் சுவர், கோயில், பாழடைந்த வீடு, பாழடைந்த கோயில், புளிய மரம், முருங்கை மரம், மூங்கில் கூடு, பிரம்பு புதர், நாணல் புதர், கறையான் புற்று, நீரில்லாத தாமரை குளம், அமாவாசை, பௌர்ணமி, பிறந்த நாள் போன்றவைகளில் கடித்தாலும் தப்புவது கடினம். சில சந்தர்ப்பங்களில் பாம்பு வந்து கடிக்கிறது. அதுவும் மீளாக்கடியாகும். ஏற்ற வேளையில் தகுந்த சிகிச்சை கொடுத்தால் மேற்சொன்ன அனைத்து மீளாக்கடிகளும் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.
விஷக்குழம்பு
வெள்ளைப் பாசாணம், கந்தகம், ரெசம், பெருங்காயம், துத்தம், துரிசு, சேராங்கொட்டை, மனோசிலை, கௌரி பாசாணம், அரிதாரம், நாவி, காந்தம், சவ்வீரம், வேப்பின் விதை, இரச கற்பூரம், அரிச்சன்னாயம், பொரிகாரம், நெறி விஷம், எட்டிகொட்டை வகைக்கு 5 கிராம் வீதம். நேர்வாளம் சுத்தி செய்தது 25 கிராம்.
வெள்ளறுகு, ஈச்வரமூலி, சிவனார் வேம்பு, நீலஅவுரி வகைக்கு சாறு 180 மில்லி. மேல் சொன்ன மருந்துகளை ஒரு துணியில் கிழி கெட்டி சாற்றில் தோளாந்திரமாக கட்டி அவித்து கல்வத்தில் இட்டு நன்றாக அரைக்கவும். பிறகு 50 கும்மட்டிக்காய் சாற்றில் மேற்படி மருந்தை நன்றாக கலக்கி குழம்பு பருவமாக காய்ச்சி எருமைக்கடாகொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும். ஒரு பயிறளவு குழம்பை வெற்றிலையில் பொதிந்து உள்ளே கொடுத்து சிறிதளவு உமிழ் நீரில் குழப்பி கடிவாயில் வைக்க எட்டு மணி நேரத்திற்குள் பிணியாளி குணமடைவான்.
எல்லா வித பாம்பு விஷங்களும் ஆறு வகை வீரியன் விஷங்களும், மண்டலி, பூரான், செவ்வட்டை, முதலை, அரணை, தேள், விசவண்டு, குரங்கு, எலி விஷம், சன்னி, கொடிய விஷங்களும் நீங்கி குணமடைவது நிச்சயம். விஷம் ஏற்றவர்களுக்கு இந்த மருந்தினால் பிணி தீரும், விஷம் இல்லாதவர்களுக்கு கொடுத்தாலும் கெடுதல் ஏற்படாது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
பத்தியம்
விஷக்கடி ஏற்றவர்கள் விஷம் நீங்கும் வரை தூங்கக் கூடாது. விழித்திருக்க வேண்டும். பக்க பலமாக யாரேனும் உட்கார்ந்து விஷம் ஏற்றவரை தூங்காமல் பாதுகாக்க வேண்டும். கடிவாயில் வைத்த மருந்தை சுமார் 8 அல்லது 10 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் பரிபூரணமாய் அப்புறப்படுத்தின பின் தொடர்ந்து மருந்து வைத்திருந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் இடைவிடாமல் அடிக்கடி 2,3 நாள் தடவவும். மருந்து இருக்கும் நாளில் 24 மணி நேரம் வரை பச்சையரிசி கஞ்சி உப்பில்லாமல் சாப்பிடவும். அன்று குளிக்கக் கூடாது. மறுநாள் மாலையில் வென்னீரில் உடல் கழுக வேண்டும். மூன்றாம் நாள் சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இரண்டாம் நாள் கலக்கி, காய்ச்சின உப்பு சேர்த்து புழுங்கல் அரிசி கஞ்சி கொடுக்கவும். முதல் நாளில் பச்சை அரிசி கஞ்சி குடிக்கும் போது மலம், இளகிப் போனாலும் வேறு மருந்து சாப்பிடக் கூடாது. மூன்றாம் நாளில் இருந்து ஏத்தன் வாழைக்காய், சேனைக்கிழங்கு, வழுதனங்காய், முருங்கைக்காய் போன்ற காய்கறிகள், இளந்தேங்காய் சுட்டெரித்து புளி சேர்க்காமல் வறுத்த உப்பு சேர்த்து சமைத்து தாளிசம் செய்யாமல் சாப்பிடவும். இந்த பத்தியம் 8 நாட்கள் வரை தொடரும்.
சில விஷங்களுக்கு மாற்று மருந்து
1. விசவண்டு கடித்தால் விடத்தேர் இலை அரைத்துப்பூசவும்.
2. வெற்றிலை போடும் போது பாக்கு செருகினால் நல்லமிளகை வாயில் போட்டு நன்றாக மெல்லவும்.
3. வெற்றிலை போடும் போது சுண்ணாம்பினால் வாய் வெந்தால் ஒரு வெற்றிலையை எடுத்து தேங்காய் எண்ணெய் தடவி சாப்பிடவும்
4. கள் அதிகம் சாப்பிட்டு போதை தலைக்கு ஏறினால் இளநீர் குடிக்கவும்
5. சாரயம் குடித்து போதை தலைக்கு ஏறினால் நுங்கு தண்ணீர் கொடுக்கவும்
6. அரிஷ்டம் குடித்து போதை தலைக்கு ஏறினால் எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கவும்.
7. தேன், நெய் அதிகரித்தால் சிரட்டைக் கரி கொடுக்கவும்
8. கள்ளிப்பால் குடித்தால் சீதாப்பழ இலை சாறை உள்ளே கொடுக்கவும்.
9. கண்ணாடி துண்டு காலில் பட்டு அற்றுப் போனால் கீழ்காய் நெல்லியிலை அரைத்துப் பூசவும்.
விஷக்கடிகள் பல வகைப்படும். அதில் முக்கியமானது பாம்புகடி. அடுத்ததாக விஷம் குறைவாக இருந்தாலும் தாக்கம் அதிகமாக காணப்படுவது தேள்கடி. தேள் கடித்து விரைவில் மரணம் ஏற்படுவதில்லை. கடித்த இடத்தில் கடுமையான குத்துளைச்சல் ஏற்படும். மற்ற இடங்களில் அதி சீக்கிரத்தில் பரவுவதில்லை. ஆனாலும் விரைவாக மருத்துவரை அணுகி ஏற்ற சிகிச்சை செய்வது நல்லது.
தேள்கடி
தேள் சாதாரணமாக வெப்பமான பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் ஒரு விஷப்பிராணி. இவைகள் பல வகைப்படுகிறது. வெண் தேள், செந்தேள், குள்ளத் தேள், சித்திரத் தேள், சிறுதேள், சிந்தியா தேள், கருந்தேள், வயல்தேள், மரத்தேள் என பல பிரிவுகளாக காணப்படுகிறது. சாதராணமாக வீடுகளில் காணப்படும் தேள் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்கள் கொண்டவையாகும். இது சந்து பொந்துகளிலும், ஓலைக் கூரைகளிலும் அதிகமாய் சஞ்சரித்து கொண்டிருக்கும். கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதால் வெப்பம் தாங்காமல் வெளியேறி கொடுக்குவதற்கு ஏதுவாகிறது.
தேளின் மீது நம்முடலில் ஏதேனும் பாகம் தொட்டால் அது கொடுக்கி விடும். வாலின் நுனியில் உள்ள கொடுக்கின் உதவியால் கொட்டுகிறது. இது கடிப்பதில்லை. நம் தோலில் உள்ள துவாரங்கள் வழியாக விஷத்தை உடலுக்குள் செலுத்துகிறது.
விஷத்தின் தன்மை
தேள் கொட்டினால் தரிப்பால் மிகவும் வேதனை உருவாகும். கண் விழிகளில் தரிப்பு உண்டாகி கண்ணீர் பெருகும். நெருப்பினால் சுட்டது போல் உணர்வு ஏற்படும். நேரம் போகப் போக விஷத்தின் அகோரம் உச்சம் பெற்று புலம்புவர். உடலில் அசதி ஏற்படும். வாயில் நுரை தள்ளும். வாய் குளறும். உடல் மரத்துப் போகும். மூக்கில் இருந்து இரத்தம் வடியும். உடல் முழுவதும் வியர்வை காணும். மேலும் வாய் உலர்தல் போன்ற குறிகுணங்கள் காணப்படும். தேள் கொட்டினால் மயக்கம் ஆகலாம். விழி இரண்டிலும் நீர் வடியும். மேலும் காந்தல் போல சுற்றிலும் எரிச்சலாகும். இவ்வாறாக தேளின் விஷம் கொண்டவரின் தன்மையை சித்தர் பாடலில் காண்கிறோம்.
சிகிச்சை
தேள் கொட்டிய இடத்தை அசைக்காமல் வைத்திருந்தால் விஷம் விரைவாய் உடலில் ஏறாது. கொட்டிய இடம் கை அல்லது கால் ஆனால் உடனே கடிப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 அல்லது 3 அங்குலம் மேலே கயிற்றினால் இறுக கட்டவும். இதனால் விஷம் உடல் முழுக்க பரவாமல் கடித்த இடத்தோடு நின்று விடும். தேள் கடித்த இடத்தை துடைத்தால் கடிவாயில் இருந்து நீர் கசியும். அந்த இடத்தில் தடிப்பு, கடுப்பு இவை காணும். இதற்கு ஏற்ற மருந்தை கொடுக்க பரிபூரணமாய் விஷம் நீங்கி விடும். ஒவ்வாரு இடத்திலும் அவ்விடத்தில் இயற்கையாய் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து விதவிதமாய் சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
1. 25 கிராம் வெள்ளைப் பூண்டை எடுத்து சதைத்து சாறு பிழிந்து நோயாளியின் உடல் பலத்தையும் வயதின் அளவையும் கண்டு உள்ளே கொடுக்கவும். மேலும் அவருடைய மூக்கில் இரண்டு துளி விடவும். இதனால் விஷத்தின் தன்மை அகலும்.
2. எள்ளெண்ணெய் 15 மில்லி அளவு எடுத்து தேள் கொட்டிய வாயில் துளி துளியாக விடவும். பத்து நிமிடங்கள் கழிந்த பின் அந்த இடத்தை துடைக்க விஷம் மாறிவிடும்.
3. பொட்டிலுப்பு குழந்தையின் சிறுநீரில் கரைத்து அல்லது வெந்நீரில் கரைத்து அனலேற்றி தேள் கொட்டிய கடிவாயில் போடவும். விஷத்தின் தன்மை நீங்கி விடும்.
4. வெற்றிலை, மிளகு இவை இரண்டும் சிறிதளவு எடுத்து வந்து ஊமிழ்நீரில் அரைத்து தேள் கடித்த இடத்தில் தடவ விஷம் நீங்கி விடும்.
5. சிறியா நங்கை செடியின் சாறு எடுத்து கடிவாயில் தடவினால் விஷத்தின் வீரியம் மாறும்.
6. குப்பைமேனி சாறு 90 மில்லி எடுத்து ஒரு பரந்த பாத்திரத்தில் வைத்து அதில் சிறிதளவு பொட்டிலுப்பை கரைத்து அடுப்பேற்றி கொதிக்க வைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசவும். விஷம் நீங்கி விடும். வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் மாறும்.
7. ஒரு வெங்காயத்தை எடுத்து பாதியாக வெட்டி ஒரு பாதியை கொட்டிய இடத்தில் அழுத்தி மாறிமாறி தேய்க்கவும். மறுபாதியுடன் பத்து மிளகு சேர்த்து மென்று சாப்பிடவும்.
8. ஒரு மிளகளவு பெருங்காயத்தை நீர் விட்டு குழைத்து கடிவாயில் தடவவும்.
9. மாங்காய் பால் அல்லது பப்பாளிப்பால் கடிவாயில் தடவவும்.
10. கல் சுண்ணாம்பும் நவச்சாரமும் சமமாக எடுத்து ஒன்றாய் கலக்க சூடாக வரும். இதில் சிறிது எடுத்து முகரச் செய்யவும்.
11. ஈஸ்வர மூலி, உத்தாமணி வேர், நாயுருவி வேர், எட்டி வேர், வாய் விளங்கம், சுக்கானகீரை விதை, பிரம்மதண்டு வேர் இவை சேர்த்து அரைத்து கடிவாயில் தடவ விஷம் முற்றிலும் நீங்கி விடும்.
12. தேள் கடித்து விஷம் ஏறி மூர்ச்சையாகி பல் கடி முதலியன ஏற்பட்டால் சிவனார் வேம்பு சாறு சிறிதளவு நாசியில் ஊத உடனே மூர்ச்சை தெளியும். 50 முதல் 100 மில்லி அளவுக்கு உள்ளே கொடுக்கவும்.
13. முயல்செவிக்கள்ளி 2 அல்லது 3 இலைகளைப் பறித்து அரைத்து தேள் கடிவாயில் தேய்த்து பிறகு 2 இலைகளை சாப்பிடக் கொடுக்கவும். விஷம் நீங்கும். கை கண்டது.
14. வாழைப்பழம் 6 (பூங்கதளி), மிளகு 20 வைத்து அரைத்து சட்டியில் இட்டு அடுப்பேற்றி காய்ச்சி வெள்ளைத் துணியில் அதை தேய்த்து உலர்த்தி சுருட்டி வைத்துக் கொள்ளவும். தேவையான போது அதை எடுத்து தீ கொளுத்தி அதிலிருந்து எழும் புகையை நாசியில் முகரவும்.
15. மஞ்சள் நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் புகையை கடிவாயில் காட்டவும்.
16. அறுகன்புல்வோ, உப்பு சேர்த்து வாயில் இட்டு மென்று தேள் கொட்டிய இடத்தின் மறுபக்க செவியில் ஊதவும்.
17. தைவேளை இலையை உப்பு சேர்த்து கசக்கி தேள் கொட்டிய இடத்தில் மறுபுறம் செவியில் விட விஷம் நீங்கும்.
18. எருக்கின் வேர் 35 கிராம். வெடியுப்பு 35 கிராம் எடுத்து கல்வத்தில் இட்டு எருக்கன் பால் விட்டு மை போல் அரைத்து மாத்திரை செய்து வெந்நீர் விட்டு உரைத்து கடிவாயில் பூசவும்.
19. கழஞ்சிக் கொட்டை பருப்பை அரைத்து கொட்டு வாயில் தடவி புகை பிடிக்கவும்.
20. சிறு கீரை கசக்கி கொட்டுவாயில் வைத்துக் கட்டவும்.
21. பாவல் இலை கசக்கி தேள் கொட்டிய இடத்தில் வைத்துக் கட்டவும்.
22. கத்தரிக்காயை இரண்டாக வெட்டி வெட்டு வாயை தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டவும். சிறிது நேரம் ஆகும் போது கத்தரிக்காய் கறுத்து விடும். அதன் பின்னர் மீதி பாதியை கடிவாயில் வைத்துக் கட்ட வலி மாறும்.
பூரான் கடி
பூரானை நூறு கால் பூச்சி என்று நம்மில் பலர் கூறுவர். இதன் தலையில் உணர்வு இழையும், வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கி பற்களும் இருக்கும். பூரான் கடித்தது உடன் தெரிய வராது. உடம்பில் வீக்கம் எழுவதை பார்த்தோ, தசையின் இழுப்பை உணர்ந்தோ இதனை நிச்சயப்படுத்துகிறோம். இக்கடி விஷத்தை சிலர் உதாசீனமாக விட்டு விடுவர். இப்படி விடுதல் நல்லது அல்ல. சில பூரான் கடித்தால் பின் நாட்களில் தொல்லைகள் ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடிப்பட்ட இடங்களில் தடிப்பு, எரிச்சல் ஏற்படும். பூரான் கடித்தவரை உடனுக்குடன் தக்க சிகிச்சை செய்யவும். பிறகு வரும் தொல்லைகளுக்கு இடம் கொடுக்க கூடாது.
மருந்து
1. பூரான் கடித்து தடிப்புற்றால் அதன் விஷம் உடம்பில் ஏறும். இந்த பாதிப்பை மாற்ற நெல்லிக்காய் அளவு பழம்புளியை எடுத்து 100 மில்லி சுத்த தண்ணீரில் நன்றாய் கலக்கி சர்க்கரை சேர்த்து இக்கலவையில் 35 மில்லி லிட்டர் எள்ளெண்ணெயை ஊற்றி வைக்கவும். இதை பூரான் கடித்தவருக்கு குடிக்க கொடுக்கவும். கலவையின் அளவு, ஆளின் வயது உடலின் வலிமை முதலியவை கண்டு தீர்மானப்படுத்தவும். இதில் சிறிதளவு எடுத்து சூடாக்கி கடிவாயில் தொட்டுப் போடவும். சுகம் உண்டாகும்.
2. 5 பூண்டு சதைத்து சாறு எடுக்கவும். இதில் 30 மில்லி எள்ளெண்ணெயை கலந்து உள்ளுக்கு ஊட்டவும்.
3. அவுரிச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து ஆறு நாள் காலை மாலை கொடுத்து இச்சாபத்தியம் பார்க்க குணமடையும்.
4. பழம் புளி, புகையறை இவைகளை கலக்கி சூடாக்கி கடிவாயில் பூசவும்.
5. கடிப்பட்ட இடத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி கடித்த இடத்தில் அழுத்தி தேய்க்கவும்.
பல்லி கடி
பூச்சி, புழு வகைகளை ஆதாரமாய் பிடித்து தின்று வாழும் பல்லியை வீடுகளில் சாதாரணமாக காணலாம். நாம் தூங்கும் போது பல்லி படுக்கை பக்கத்தில் ஊர்ந்து செல்லும். தூங்குபவரின் கை கால் அதன் மீது படுமானால் பல்லி கடித்து விடும். மேலும் தொந்தரவு கொடுத்தால் பயத்தின் காரணத்தால் கடித்து விடுகிறது. பல்லி கடியில் வீக்கம், எரிச்சல், உடல் வியர்வை, ஆயாசம், மார்பு வலி போன்ற குணங்கள் காட்டும். கடித்த இடத்தில் பொடியரிசி போன்று சிரங்கு எழும்பும்.
மருந்து
1. பெருங்கரந்தை வேர், குதிரைகுளம்படி வேர் வகைக்கு 70 கிராம். பாகல் இலைச்சாறு, பசுவின் பால் வகைக்கு 70 மில்லி சேர்த்து அரைத்து கடிவாயிலும், உடலிலும் பூசி குளிக்கவும். குணம் உண்டாகும்.
2. மிளகு பொடி 60 கிராம் எடுத்து அதில் 200 மில்லி அகத்தி இலைச்சாறு கலந்து சாப்பிட்டு வர பல்லி கடி விஷம் நீங்கும்.
அரணைக் கடி
அரணைக் கடிப்பது அரிது. ஏதேனும் காரணத்தால் அரணை கடித்து விட்டால் அக்கடி அதிக விஷம் உடையது. எவ்வளவுக்கு எவ்வளவு ஊனம் பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு விஷம் ஏறும் என்பது அனுபவ பூர்வமானது. அரணை கடித்தால் அல்லது நக்கினால் உடன் வேண்டிய சிகிச்சை பெறுவது உத்தமம். உடம்பில் விஷம் பரவினால் கடிபட்டவரின் வாயில் இருந்து நுரை வெளியேறும். கடிபட்டவரின் உடல் நடுங்கும். நாக்கு தடிக்கும். பேச முடியாது. குளறுவர். அரணை வால் சில வேளை முறிந்து விழுவது உண்டு. அது உணவு சமைக்கும் வேளையில் உணவில் விழுந்தால் கொடிய விஷமாகும். அரணை நக்கினால் 24 மணி நேரம் கழியும் போது மயக்கம் ஏற்படும்.
மருந்து
1. சாரணை வேர் 20 மில்லி கிராம் எடுத்து வந்து துளசிச்சாறு விட்டு அரைத்து பசுவின் பாலில் கலந்து பருக வேண்டும். விஷம் நீங்கும்.
2. அழிஞ்சி வேரின் உள் பட்டையின் வேர் உரித்து வந்து சுத்தி செய்து அதில் சிறுநீர் விட்டு அரைத்து கலக்கி சூடேற்றி அரணை கடித்த இடத்தில் தளம் இடவும். விஷம் விலகும்.
3. சாரணைசமூலம், வசம்பு, பூண்டு இம்மூன்றையும் சிறு குழந்தையின் சிறு நீர் விட்டு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு உள்ளேயும் கொடுத்து உடலிலும் பூசவும்.
4. பொடுதலை, மிளகு, உப்பு இது மூன்றையும் சம அளவு தண்ணீர் விட்டு அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு சாப்பிடவும்
5. செவ்வரணை நக்கினால் சுக்கு, வசம்புகரியும் ஓரிடையாக எடுத்து பொடித்து திறிகடி பிறமாணம் உள்ளுக்கு கொடுத்து வெள்ளைச் சாரணை வேரை அரைத்து உடலில் பூசவும்.
6. பெரிய அரணை நக்கினால் மூக்கரணைச் சாரணை வேரினை எடுத்து அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து பசுவின் பாலில் கலந்து கொடுக்கவும்.
பல்லி அல்லது அரணை விஷம்
பல்லி அல்லது அரணை விழுந்த பதார்த்தங்களை அறியாமல் சாப்பிட்டால் மிளகையும், கரும்பு வெல்லத்தையும் சேர்த்து மென்றோ அல்லது அரைத்தோ உள்ளுக்கு கொடுக்கவும். வாந்தி வரும் வரையில் நிறைய தண்ணீர் அருந்தும் படி செய்யவும்.
குரங்கு கடி
குரங்கை தொந்தரவு செய்தால் அது கடிக்கும். இது அபூர்வமாக நடக்கும் செயல் ஆகும். கடிவாயில் இருந்து இரத்தம், கடுப்பு, எரிச்சல், வீக்கம் காணும். குரங்கு கடிபட்டவர் அஜாக்கிரதையாக இருந்து விட்டால் பிறகு அதிக இன்னலை விளைவிக்கும். எனவே உடனே சிகிச்சை பெறுவது உத்தமம். கடித்த விஷம் உச்சமாய் இருந்தால் மனிதன் கூச்சலிடுவான். குரங்கைப் போல் ஆடிபாடி தவ்வி தவ்வி குதிப்பான்.
மருந்து
1. அவுரி வேர், நன்னாரி வகைக்கு 15 கிராம். எடுத்து அரைத்து பசும்பாலில் கரைத்து உள்ளுக்கு ஊட்டவும்.
2. இஞ்சிச்சாறு 30 மில்லி. நாளொன்றுக்கு 3 வேளை வீதம் 2 நாட்கள் கொடுத்து வர குரங்குக் கடி விஷம் மாறும்.
3. கொழிஞ்சிச் செடியின் வேரும், சுக்கும் சிறிதளவு எடுத்து சுடுநீரில் அரைத்து கடிவாயில் பூசவும்.
4. பூமி சர்க்கரை இலைச் சாறு, சிறிது மிளகுப் பொடி கலந்து வெயிலில் வைத்து மேலாக எழும் நீரை வற்றி வரும் போது எடுத்து கடிவாயில் பூசவும்.
5. சிறு குறிஞ்சான் பூ, இலவு வேர், நிலப்பனை இலை, தைவேளை இலை, சுக்கு இவைகளை சரி நிறையாய் எடுத்து சட்டியில் வைத்து வறுத்து கிளியாக கட்டி கடிப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்கவும். விஷம் நீங்கும்.
6. வாகை வேர், பனம் கிழங்கு சமனெடை எடுத்து பசுவின் பாலில் அரைத்து கலக்கி பருகவும். இதனையே கடிவாயில் பூசவும்.
7. விளாமரஇலை, கொளுஞ்சி இலை இவைகளை வதக்கி கடிவாயில் கட்டவும்.
குதிரைக் கடிக்கு
குதிரைகளில் சில மனிதனை அபூர்வமாய் கடிப்பதுண்டு. இதனால் வீக்கம் வலி, கடுப்பு, முதலியன ஏற்படும். தகுந்த சிகிச்சை உடன் பெறாவிடில் நாளடைவில் தலைவலி, காய்ச்சல், குளிர் முதலியன உண்டாகும். சில வேளை குதிரையைப் போல் பல் இளித்தல், கனைத்தல், கை கால் அசைவு போன்றவைகள் காணும்.
மருந்து
1. அமுக்கிராக் கிழங்கு 70 கிராம் சூரணித்து தினம் காலை மாலை இரு வேளை சிட்டிகை வீதம் சுத்தமான தேனில் சேர்த்து கொடுக்கவும். சில நாட்கள் உப்பு, புளி, நல்லெண்ணெய் அகற்றவும்.
2. அவுரி வேர் அரைத்து கடிப்பட்ட இடத்தில் பூச விஷத்தின் பாதிப்பு அகலும்.
பூனைக்கடி
பூனையை தொந்தரவு செய்தாலோ, பசியின் கொடுமையாலோ, கோபத்தாலோ மனிதரை கடிக்க நேரிடும். கடி ஏற்றால் அசதி, மயக்கம், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும். சிலருக்கு பூனை போல் சத்தமிட்டு சீற்றம் கொள்வர். தக்க சிகிச்சை செய்வது உத்தமம். கவனக்குறைவால் இருந்து விட்டால் இருமல், காசம், ஈழை போன்ற பல நோய்கள் உருவாகும்.
மருந்து
1. கொல்லம் கோவைக்கிழங்கு 10 கிராம் எடுத்து துளசிச்சாறில் அரைத்து வெந்நீரில் கலந்து பூனை கடிபட்டவருக்கு உள்ளுக்கு கொடுக்கவும். மேலும் இக்கிழங்கை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டவும்.
2. அவுரிப்பட்டையை சுடுநீரில் அரைத்து கடிவாயிலும், உடம்பிலும் பத்து நாட்கள் தடவி வர விஷத்தின் பாதிப்பு மாறும்.
3. ஆமணக்கு வேர், கடுக்காய், இந்துப்பு, திப்பிலி, சவர்க்காரம் இவை ஐந்தும் சமன் எடை எடுத்து தேன் விட்டு மை போல் அரைக்கவும். இதில் சிறிதளவு எடுத்து மூன்று தினம் உண்டு வர விஷத்தின் சீற்றம் தீரும்.
கீரிக்கடிக்கு
கீரி சாதாரணமாக காடுகளிலும், புதர்களிலும் வசிக்கும் ஒரு பிராணி. அணிலைப் போன்று தோற்றமுடையது. கீரியை தொந்தரவு செய்தாலோ பயத்தினாலோ மனிதரைக் கடிப்பதுண்டு. இதன் விஷம் கொடியதாகும்.
மருந்து
1. அவுரிச் செடியின் வேரைப் பிடுங்கி நன்றாக சுத்தம் செய்து வேரின் மேல் உள்ள பட்டையை உரித்து வைக்கவும். இதை சிறுநீரில் மை போல் அரைத்து எலுமிச்சம் காய் அளவு நீரில் கலக்கி மூன்று வேளை நோயாளிக்கு ஊட்டவும்.
மேல் பூச்சு மருந்து
1. புகையறையும், சுண்ணாம்பும் சமன் அளவு எடுத்து சிறு நீரில் அரைத்து கலக்கி கொதிப்பித்து கடிவாயில் பூச விஷம் அகலும்.
2. அவுரி வேர், அவுரி இலை இரண்டையும் எடுத்து இடித்து பிழிந்து சாறு உள்ளுக்கு கொடுக்கவும். இச்சாற்றை கடிவாயில் பூசவும்.
எலி கடிக்கு
உலகெங்கிலும் எலி சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. எலிகளில் பூங்கன், உத்தமன், புரந்தெரி, வருணன், புலமங்காரி, சுண்டெலி, பாண்டு மந்திரி, விருகன், பூண்டரகன், அராகடைப் பல்லன், பன்றி மூர்க்கன், செங்கோடன், கருவாவெளி, சதங்கை வாயெலி, அட்டை, முசுகம், செந்தலை எலி, அரணை வால் எலி என்கிற முக்கியமான இனங்கள் உண்டு.
பொதுவாக எலி கடித்தால் இருமல், இரைப்பு, உடல் இளைத்தல், அடிக்கடி மலம் வெளியேறுதல், வாய்பேசக் கூடாமை, கோழை, வாந்தி, போன்ற குறிகள் காணலாம். பின் அவ்விடத்தில் கட்டிகள் எழும்பி வீங்கி உடையும். மயக்கம், ருசியின்மை, குளிர், சுரம், வலி, நடுக்கம், முட்டிகளில் வலி, மயிர்க் கூச்சம், மூர்ச்சை முதலியவை உண்டாகும். நாள்பட்டால் உடலில் கபம் உறைந்து கட்டி கட்டியாக உருவாகும். ஏற்ற வேளையில் தக்க சிகிச்சை செய்வது நல்லது.
நஞ்சு முறிவு மருத்துவம்
கள்ளிப்பால் குடித்தால்
வயிறு, வாய், அபானம் இவைகள் பொள்ளி வயிற்றினுள் வெந்து கெட்ட வாசம் காட்டும். வலி தாங்காமல் துள்ளி விழுவார். உணவு உட்கொள்ள மாட்டார்.
மருந்து
1. சுத்தமான புதிய தேங்காய் எண்ணெயை உள்ளுக்கு கொடுக்கவும்
2. அறுகன் புல், நல்ல மிளகு, வெற்றிலை இவைகளை அளவுடன் எடுத்து குடிநீரிட்டு (கசாயமிட்டு) உள்ளே கொடுக்கவும்.
3. ஆவாரைக் கசாயத்தில் கடுக்காய் தூள் இட்டு கொடுக்கவும்.
4. வாழைத்தடையின் சாறை உள்ளுக்கு கொடுக்கவும்.
5. கறி மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலக்கி தெளிய வைத்து தெளிந்த நீரை 25 மில்லி உள்ளுக்கு கொடுக்கவும்.
6. கடுக்காய் தூளை வென்னீரில் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு
குறிப்பிட்ட காலத்திற்குள் பதற்றத்துடன் உடல் நடுக்கம் இருந்தால் 3,5 அல்லது 7 நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.
சதுரக்கள்ளிப்பால்
சதுரக்கள்ளிப் பால் குடித்தால் அதிகமான பேதி, இரத்த பேதி, வாந்தி, மயக்கம், கை கால்களில் வலி, கண்களில் சிவப்பு, உணவு உட்கொள்ளாமை, ஏப்பம், வயிறு உப்பிசம் போன்றவை ஏற்படும்.
மேல் சொன்ன மருந்துகளை கையாளவும்.
அவுரி நஞ்சுண்டால்
கடுக்காயை காடியில் அரைத்து கொடுக்கவும்.
கஞ்சா, அபின் நஞ்சுண்டால்
1. இலைக்கள்ளி, முத்தக்காசு வசம்பு வகைக்கு 8 கிராம் வீதம் குடிநீர் வைத்து 2 வாரம் குடித்து வர கஞ்சா, அபின் இவைகளால் உண்டான நஞ்சு நீங்கும்.
அபின் நல்லெண்ணெய் தயிர் கலந்து சாப்பிட்டால்
நோயாளி கண்களை திறந்து வானத்தை பார்ப்பார். வாய் கறுத்து, பைத்தியம் போல் ஆனால் சற்று நேரத்தில் உயிர் பிரியும்.
மருந்து
பசுவின் நெய்யில் சுத்தமான பொரிகாரத்தை பொரித்து பொடித்து சேர்த்து கொடுக்கவும்.
அபின், அரளி வேர் நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டால்
மூச்சு இளைக்கும், கபம் கெட்டும், வாயில் நுரை தள்ளும், சற்று நேரத்தில் உடலெங்கும் பிசுபிசுக்கும். வியர்வை காணும். கண் விழிகள் சாம்பல் நிறமடையும், உடம்பு நீண்டு நிமிர்ந்து உணர்வற்று விழும், குறியை உள் வாங்கச் செய்யும், கை விரல்கள் மடங்கி விடும், நிமிர்த்த முடியாது. தக்க மருந்து கொடுத்து காப்பாற்றவும். இல்லாவிட்டால் மரணம் நிச்சயம்.
அபின், நல்லெண்ணெய், தயிர் கலந்து சாப்பிட்டால்
விசம் தலைக்கேறி மூளையை எட்டும், கொடிய நஞ்சாக மாறும், கட்டுக்கடங்காமல் சத்தமிடச் செய்யும், உடல் திமிரம் ஏற்படும், மலமும் நீரும் அடைக்கும். பித்தம் கலந்து வாந்தியாகும். மூக்கு வழியாக பித்த நீர் வெளியேறும். கபம் நுரைத்து வாய் வழியாக வெளியேறும். உடல் உணர்வற்று சுருங்கி விடும். ஐம்புலன்களும் பொறிகளும் செயலற்று விடும். 36 மணி நேரத்தில் உயிர் பிhpயும்.
அதிகம் உணவு சாப்பிட்டால்
அளவுக்கு மீறி உணவருந்தினால் உணவுக்குழாய் பெருத்து மலம் அடைத்து, தன்னிலை கெட்டு பெருமூச்சு வாங்கும். தலை உருட்டல் ஏற்படும், வயிறு உப்பிசம் அடையும், சன்னி தோன்றும்.
மருந்து
மலம் வெளியேறத்தக்க குடிநீர், மாத்திரை கொடுக்கவும். பேதியாகி நிதானம் ஏற்படில் பிழைப்பார். இல்லை என்றால் மூன்றாம் நாள் மரணம் நிச்சயம்.
சோறும் உப்பும் கலந்து அதிகம் சாப்பிட்டால்
மூச்சடைத்து, இதயம் சுருங்கி, மூச்சுத் திணறி, மலவாய் சுருங்கி அடைத்து, மலம் வெளியேற முடியாமல் ஆகி விடும்.
மருந்து
தயிர் அல்லது புளித்த மோர் உடனே கொடுக்க வேண்டும். குணமாகாவிட்டால் இரண்டு நாளில் மரணம் ஏற்படும்.
நெய் அதிகம் உண்டால்
வயிறு மந்தம், கல்லீரல் விருத்தி, புளித்த ஏப்பம், ஆசன வாய் அடைப்பு இவை ஏற்படும்.
சோறும் நல்லெண்ணெயும் கலந்து சாப்பிட்டால்
கைகால் இழுக்கும், உடம்பை இசைவுடன் முறுக்கி நரம்புகள் விறைப்பாகும், தொடர்ந்து மயக்கம் ஏற்படும்.
மருந்து
பழம் காடியை உள்ளுக்கு கொடுக்கவும்.
சுண்ணாம்பு அதிகம் சாப்பிட்டால்
வாய் வெந்து பொள்ளும். குடலும், வயிறும் வெந்து போகும், மலவாய் முதற்கொண்டு கொதிப்படையும்.
மருந்து
1. கறி மஞ்சளை அரைத்து தேங்காய்ப் பாலில் கலந்து கொடுக்கவும். வேகம் தணியும். தணியா விட்டால் 7 நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.
2. சீந்தில் கொடியை வாயிலிட்டு மென்று சாப்பிடவும்
எருக்கம் பால் குடித்தால்
வயிறு, வாய் வெந்து ஆசன வாயை விரிவடையச் செய்யும். புத்தி மயக்கம் ஏற்படும். 7 நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.
தில்லைப் பாலை பால் குடித்தால்
உடல் வீங்கி புண்ணாகி, உணர்ச்சியற்று, உடலில் இருந்து பிணவாடை போல் கெட்ட வாடை வீசும். நடக்க இயலாது. படுக்கையில் ஆக்கி விடும். உடல் ஊதும். பித்தம் அதிகரித்து, நாவறண்டு, ருசியின்மை ஏற்படும். பேதி, வாந்தி, வாய் நாற்றம், சுரம் முதலானவை தோன்றும்.
மருந்து
நல்லெண்ணெய் தலையில் தேய்க்கவும். பாக்கு கசாயத்தில் பனை வெல்லம் சேர்த்து கொடுக்கவும். சிறு தும்பை சாறினை உடம்பில் தடவவும்.
ஊமத்தின் காய் சாப்பிட்டால்
மயக்கம், தொண்டை வறட்சை, தலைச்சுற்றல், நடை தடுமாறல், கண் மயக்கம், கண்களில் உள்ள கண்மணி விசாலமடைந்து கண்டபடி பேசுதல், ஆடல் பாடலுடன் உருளுதல், ஆடைகளை கிழித்து போடுதல், வயிறு பெருமல், நீண்ட சுவாசம் ஏற்படுதல் போன்ற குணங்கள் காணும். மரணமும் ஏற்படும்.
மருந்து
தாமரைக் கிழங்கை எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து கொடுக்கவும்.
நெல் வேரின் நஞ்சுக்குணம்
வாந்தி, வயிறு உப்பிசம், வயிறு மந்தம், பேதி, அரோசிகம் இவைகள் ஏற்படும்.
எல்லா வித தாவர விஷங்களுக்கும் பொது மருந்து
1. சிவந்த நாயுருவியை பசுவின் பாலில் அரைத்து வென்னீரில் பருகவும்
2. முருங்கைக் கீரையை காடி விட்டு அரைத்து கொடுக்க வாந்தி ஏற்பட்டு விசம் தீரும்.
மருதோன்றி வேர், நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டால்
நெஞ்சிலும், குடலிலும் கறை பிடிக்கும், அளவு கடந்து மலம் வெளியேறும், கண்களை விழித்துப் பார்க்க மிக சிரமமாக இருக்கும், உடல் வியர்த்து சோர்வடையும்.
மருந்து
மாசிக்காயை நன்றாக அரைத்து பசுவின் பால் நெய்யில் கலந்து உள்ளுக்கு அருந்த கொடுக்கவும்.
கண்ணாடித்தூள் சாப்பிட்டால்
அதனுடைய வேகத்தால் வயிறு புண்ணாகி உள்புறம் அழுகி நாற்றம் ஏற்படும். குமட்டல், இரத்தம் கொட்டுதல், மெதுவாக மலமும் நீரும் தேங்கி வெளியாகாமல் உள் பாகங்கள் பருத்து துன்புறுவர். ஊன் வெளியே தள்ளி வலி உண்டாகும். சோர்வுடன் வியர்வை ஏற்படும்
மருந்து
1. இஞ்சிச்சாறு, அதிமதுரம், மாசிக்காய் இவைகளை அரைத்து கொடுக்கவும். ஒரு வார காலத்தில் குணமடையும். இல்லா விட்டால் உயிர் பிரியும்.
2. கீழ்காய் நெல்லி சாறு எடுத்து குடிக்க கொடுக்கவும்.
எட்டி விரையும் நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டால்
உடல் படபடத்து துடிதுடிக்கும். வியர்வை நீர் சொரிந்து கொட்டும். குமட்டலுடன் வாந்தி ஏற்படும். கண்கள் சிவந்து விரிவடையும். குறியை மையத்தில் பிடித்துக் கொள்ளும். பொறி புலன்கள் அசதியாகி மவுனமாகி விடும். இந்நிலை ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.
மருந்து
கோழி முட்டை ஒன்றின் வெண் கருவை பசு நெய் பாலுடன் உள்ளுக்கு கொடுக்கவும்.
குன்றிமணி விதை சாப்பிட்டால்
வயிற்றை பிரட்டி வாந்தியுடன் பேதி ஏற்படும். நாவு தளர்ந்து குளறும். நினைவு தடுமாறும். கண் விழிகள் தெறித்து விழுவதைப் போல சோர்வுடன் காணப்படும். வியர்வை ஏற்படும். கன்று உறுமுவதைப் போல உறுமச் செய்யும், மேலும் மயக்கம், உடல் எரிச்சல், வயிறு எரிச்சல், பேதி, மந்தம் இவைகள் ஏற்படும், மரணமும் ஏற்படும்.
மருந்து
1. பொரிகாரத்தை பொரித்து தூள் செய்து பசுவின் பாலில் கலந்து அளவாக இருவேளை கொடுக்கவும்.
2. சுக்கை அரைத்து கொடுக்கவும்
குன்றிமணி விதையும் நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டால்
மலவாய் குறுகி வாந்தி ஏற்படும், அதிக வியர்வை தோன்றி உடல் குளிர்ந்து, கை கால்களில் வேதனை அதிகமாகும். ஒட்டிய வயிறு மேல் நோக்கி உப்பிசம் அடையும், ஒரு நாள் வரை மேல் மூச்சு வாங்கும், முகம் விகாரப்படும். திறந்த கண் விளி மூலம் உயிர் பிரியும். கை கால்களை பின்புறமே முறுக்கி வளைத்து இழுத்து வேறுபடுத்தி மூக்கின் தோற்றத்தை நீளமாக்கி காட்டும். இந்நிலை ஏற்பட்ட மூன்றாம் நாளில் மரணம் ஏற்படும்.
மருந்து
நல்ல நெய்யில் சுத்தமான சர்க்கரை கலந்து உள்ளுக்கு ஊட்டவும். இந்த மருந்தும் கொடுத்து குணமாகாவிட்டால் மரணம் நிச்சயம்.
கொடிக்கள்ளிப் பால் சாப்பிட்டால்
வெப்பத்தால் வாய் வெந்து, வாய் குளறும், உடல் வெப்பமாகி இரத்தம் கொட்டும். வயிற்றை புரட்டி வாந்தி ஏற்படும். முகம், கை கால்கள் வீங்கி காணப்படும். எரிச்சல் உண்டாகும். பெரு வியாதி ஏற்பட்டது போல் உடலில் தோற்றம் உண்டாகும். இரத்த பேதி ஏற்படும். ஒரே நாளில் மரணம் உண்டாகும்.
மருந்து
ஆவாரையை கசாயமிட்டு தயிரும், நெய்யும் கலந்து கொடுக்கவும்.
புகையிலை சாப்பிட்டால்
போதை மிகுந்து சோர்வு உண்டாகும். மனதை பலவாறு குழைய வைத்து நினைத்ததை எல்லாம் பேச செய்யும். காதுகள் அடைக்கும். குடலை மேலும் கீழுமாக கலக்கி மலத்தை வெளியேற்றும் அதிகமாக வியர்த்துக் கொட்டும். காலரா நோயினுடைய வெளி குணங்கள் காட்டும்.
மருந்து
அகத்திக் கீரை, பெரிய குறிஞ்சான் இலை, மிளகு இவைகளை சம எடை எடுத்து கசாயமிட்டு வடித்து காலை மாலை கொடுக்கவும்.
அபினும் ஊமத்துச் சாறும் சேர்த்து சாப்பிட்டால்
திகைக்கும் வலியும், கிறுகிறுப்பும், தலைச்சுற்றலும் உண்டாகும், குமட்டல் அதிகமாகி குறி உள் வாங்கும். வயிறு உப்பிசமடையும், வாந்தி ஏற்படும், கை கால்கள் குளிர்ச்சியடையும், ஐம்பொறிகளும் அசைவற்று தன்னிலை இழக்கும்.
மருந்து
மாசிக்காயை பாலில் உரைத்து கொடுக்கவும். குணமாகாவிடில் மிளகும் சீரகவும் சம அளவு எடுத்து குடிநீரிட்டு வடித்துக் கொடுக்கவும். அல்லது பெருஞ்சீரகத்தை குடிநீரிட்டு வடித்துக் கொடுக்கவும். 24 மணி நேரத்தில் குணமுண்டாகும். இல்லையென்றhல் மரணம் ஏற்படும்
அரளி விதை சாப்பிட்டால்
அலறுவர், வீங்கி பெருமி மேல் மூச்சு வாங்கும். வாய் குளறலுடன் வாயிலிருந்து நுரை வெளியேறும். அலறலோடு உறுமல் சத்தமிடுவர்.
மருந்து
1. காய்ந்த நாய் மலத்தை எருமை மோரில் யாரும் காணாதவாறு கலக்கி உள்ளே கொடுக்கவும். குணம் ஏற்படும்.
2. பூனைக் காட்டத்தை மோரில் கலக்கி உள்ளே கொடுக்கவும்
3. பருத்தி வேரை காடியில் அரைத்து கொடுக்கவும். இம்மருந்துகளில் குணமடையாவிட்டால் மூன்று நாட்களில் மரணம் ஏற்படும்.
அரளி வேரை நல்லெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால்
குறி உள் வாங்கும். கை கால்களை பலமாக இழுத்து மடக்கி விடும். வாந்தி பேதி, வாயில் நுரை தள்ளல், வயிறு கடுப்பு, மயக்கம், பல்கடி, உயிரானது பெருமூச்சு விட்டு அடங்கும். 12 மணி நேரத்திற்குள் உயிர் பிரியும்.
ஊமத்தங்காய் அபினுடன்
நாவடங்கும், மயக்கம் ஏற்படும், களைப்பும் கண்களில் அயர்வும் உண்டாகும். பொதுவாக வாயிலிருந்து நுரையும் பதையும் வெளியேறும் மேல் மூச்சு வாங்கும். மலம் கெட்டும். மேலும் பித்தம் தலைக்கேறி பைத்தியக்காரனுடைய தன்மையை ஏற்படுத்தும், தலைச்சுற்றல் அதிகமாக ஏற்பட்டு வாய் குளறும். இந்திரியம் தானே வெளியேறும். இயல்பாக தன் குறியை தன் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு இருப்பார்.
எட்டி விதையை தின்றால்
அதிக அளவு வாந்தியும் பேதியும் ஆகும். உட்கொண்ட உணவானது குடலில் தங்காது. புரட்டி வெளியே தள்ளும். கூப்பிடும் சத்தம் கேட்காது. தவறாக பலதும் பேசி நிலை குலையும். மேலும் வாயில் கசப்பு, விருவிருப்பு, வாயில் எச்சி ஊறுதல், மூச்சடைப்பு, தளர்வாதத்தை போல் உடம்பு வளைதல், உடல் தளர்ச்சி, கைகால் இழுப்பு, மயக்கம், அறிவு தடுமாற்றம் இவை ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
மருந்து
பசுவின் பாலில் முற்றிய நாவல் பட்டையை இடித்து பிழிந்து உள்ளுக்கு கொடுக்கவும்.