72. பீசக்காலம் – Peesa Kalam

வேறு பெயர்கள் :

1. அண்ட காலம் (வர்ம சூத்திரம்-101)
2. கல்லடைக் காலம் (வர்ம விரலளவு நூல்)
3. பீசக்காலம் (அடிவர்ம சூட்சம்-500)
4. கன்னி வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

பெயர்க்காரணம் :

அண்டம் அல்லது பீசம் என்றால் விதை (Testis) இரு விதைகளுக்கும் நடுவிலுள்ள வர்மமாகையால் அண்ட வர்மம் என்றும் பீச வர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் இரு விதைகளும் மேலே ஏறி விதைப் பையின் துவாரத்தை (Inguinal Canal) அடைத்துக் கொள்ளுமாதலால் இவ்வர்மம் ‘கல்லடை வர்மம்’ என பெயர் பெற்றது.

இடம் :

இரு விதைகளுக்கும் (Testis) நடுவில் உள்ளது. இந்த பீசக் காலம் பெண்களுக்கு கிடையாது.

இருப்பிடம் :

1. ‘செய்யவென்றால் வித்து ரண்டும் பதிந்த சார்பில்
செயலான அதன் நடுவில் அண்ட காலம்’ (வர்ம சூத்திரம்-101)

2. ‘தயவான அண்ட வர்ம தலத்தைக் கேளு
கேளப்பா வித்துரண்டும் பதிந்த சார்பில்
கெணிதமுடன் இதன் மையம் வர்மம் கொண்டால்’ (வர்ம நிதானம்-300)

3. ‘தாமென்ற மூலமது முக்கோணத்தில்
சரியாக பார்த்தறி நீ கண் கலங்கி
ஆமென்ற அதற்கு மூவிரலின் மேலே
அறியலாம் அண்ட வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

4. ‘தண்டுபோய் முடிந்த தலத்தில் அண்டத்தில்
அண்டக்காலம்…………..’ (வர்ம ஆணி-108)

5. ‘லிங்கவர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே கல்லடைக் காலம் இவ்வர்மத்துக்கு மூன்று விரலுக்கு வலத்தே வித்து வர்மம்’ வர்ம விரலளவு நூல்)

6. ‘உந்திவர்மத்திலிருந்து கீழ் நோக்கி விதைப் பையில்அமைந்துள்ள கல்லடைக் காலம் வரை அளவெடுத்து (12 விரலளவு) இரண்டாய் மடக்கி (6 விரலளவு) உந்தியிலிருந்து கீழ் நோக்கி அளக்க மூத்திரக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

7. ‘வேளென்ற அரையிறையின் கீழ் பீசக்காலம்
விதிப்படியே இருநெல் கீழ் கல்லிடையாம் காலம்’
(அடிவர்ம சூட்சம்-500)

8. ‘மங்கையர்க்கு குறைந்த வர்மம் பீசக்காலம்’ (ஒடிவு முறிவு ஞானம்-300)

9. ‘படுவர்மம் கன்னியது சொல்லக்கேளு
பகருவேன் கல்லிடையின் காலமப்பா’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

விளக்கம் :

இவ்வர்மம் நாபியிலிருந்து பன்னிரண்டு விரலுக்குக் கீழாகவும், மூத்திரக் காலத்திலிருந்து எட்டு விரலுக்குக் கீழாகவும், மோதிரக் காலத்திலிருந்து ஆறு விரலுக்குக் கீழாகவும், நடுக்கு வர்மத்திலிருந்து மூன்று விரலுக்குக் கீழாகவும், மூலவர்மத்திலிருந்து சுமார் ஆறு விரலுக்கு மேலாகவும் அமைந்துள்ள ஒரு வர்மமாகும்.

அண்ட வர்மம் எனப்படும் இவ்வர்மம் பீசக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வர்மம் பெண்களுக்கு இல்லை. இவ்வர்மத்ததை வர்ம விரலளவு நூல், வர்ம நூலளவு நூல் போன்ற சில நூல்கள் கல்லிடை வர்மம் என்றும் அழைக்கின்றன. இவ்வர்மம் ஒற்றை வர்மமாகும். ஆனால் வர்ம சாரி-205 குறிப்பிடும் கல்லிடை வர்மம் இரட்டை வர்மமாகும். இது அண்ட வர்மம் என்ற (ஒற்றை) கல்லடை வர்மத்துக்கு பக்கவாட்டில் காணப்படுகிறது (இரட்டை) கல்லிடை வர்மம்.

‘வர்ம கண்ணாடி-500’ என்ற நூல் குறிப்பிடும் கல்லிடை காலம் இரட்டை வர்மமாகவே இருக்க வேண்டும். காரணம் ‘வித்து ரண்டும் பதிந்த சார்பில் கல்லிடை காலம்’ என்று அந்நூல் குறிப்பிடுவதால் வித்து (Testis) இரண்டும் காணப்படுகின்ற இரு இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது. ஆனால் வர்ம சூத்திரம்-101, வர்ம நிதானம் போன்ற நூல்கள் ‘வித்துரண்டும் பதிந்த சார்பின் மையத்தில் (நடுவில்) அண்ட வர்மம்’ என்று குறிப்பிடுவதால் அண்ட வர்மம் இரு வித்துக்கும் நடுவில் காணப்படும் ஒற்றை வர்மமே என்பது புலனாகிறது.

கல்லிடைக் காலம் படுவர்மம் பன்னிரண்டுள் ஒன்றாக விளங்குகிறது. படு வர்மங்கள் பன்னிரண்டையும் விவரிக்கும் சில நூல்கள் கல்லிடைக் காலத்தையும் (வர்ம கண்டி) சில நூல்கள் கல்லிடை காலத்திற்குப் பதிலாக அண்ட வர்மத்தையும் குறிப்பிடுகின்றன. (வர்ம சூட்சம் / வர்மானி-101)

‘வர்ம சூத்திரம்-101’ என்ற நூல் கல்லிடை வர்மத்தையும், அண்ட வர்மத்தையும் தனித்தனியே குறிப்பிடுகிறது என்றாலும் இரு வர்மங்களின் குறி குணங்களிலும் விதை மேலே ஏறிக் கொள்ளும் என்றும், அதற்குப் பரிகாரம் செய்யும் போது மூன்று கல்லை அடையாகக் கட்டி அதன் மேல் நோயாளியை இருத்தி சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுவதிலிருந்து இரு வர்மங்களும் ஒத்த குறிகுணமுடைய வர்மங்கள் என்பது விளங்குகிறது.

பொதுவாக கல்லிடை காலத்துக்கென்று குறிப்பிட்ட ஓர் இடத்தை சுட்டுவது சாத்தியமற்றது. விதைப்பையின் ஸ்திரமற்ற தன்மையை மனதில் கொள்ளும் போது, விதைப்பையின் அடிப்பகுதியிலிருந்து மொத்தமாக ஓர் அடி மேல் நோக்கி விழும் போது, வித்திரண்டும் மேலே ஏறிக்கொள்ளும். இந்த அடிபடுதலை நடுவில் அல்லது பக்கவாட்டில் என்று குறிப்பாக கூறுவது கடினமாகையால் கல்லடை வர்மம் அல்லது அண்ட வர்மத்தின் இடமும் நடுவில் அல்லது பக்கவாட்டில் என்று இல்லாமல் விதைப்பையின் அடிப்பாகம் முற்றிலுமாய் வியாபித்திருக்கிறது என்பதே சரியானதாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி