7. செவிக்குத்தி வர்மம்

வேறு பெயர்கள் :

1. செவிக்குத்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. செவிக்குற்றி வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
3. செவிக்குறி வர்மம் (வர்ம சூடாமணி)
4. சிருங்காடம் (வர்ம விதி)

இடம் :

செவியின் சிறுதண்டுக்கு (Tragus) அருகில்

பெயர்க்காரணம் :

இவ்வர்மத்தை ஏற்படுத்த, செவியின் சிறு தண்டுப் பகுதிக்கருகே குத்துவதால் ‘செவிக்குத்தி’ எனப் பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘தேளப்பா காது சிறு தண்டருகு பற்றி
திட்டமுடன் செவிக்குத்தி காலமாகும்’ (வர்ம நிதானம்)

2. ‘மூலமாம் காதில் சிறுதண்டருகில் தானே
முறையான செவிக்குத்தி காலமென்பர்
கூலமாம் இதனிரண்டு இறைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)

3. ‘காடப்பா காதில் சிறுதண்டில் தானே
கலங்காதே செவிக்குத்தி காலம் என்பர்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘காதின் முன்புறத்தில் செவிக்குத்தி காலம்’ (வர்மவிரலளவு நூல்)

5. ‘சயமாகும் செவிக்குறி வர்மம் தானும்
செயலாக அதன் குணத்தை சொல்லக்கேளு’
‘கேளப்பா காதில் சிறுதண்டின் அருகே
கெடி குழிவுங்காணும் அதுதானே……’ (வர்ம சூடாமணி)

6. ‘சீறுகின்ற கொல்லியதில் ஆறுவிரலில்
ஆறுவிரல் சுற்றி செவிக்குத்திக் காலம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

7. ‘வருதியின் செவியினில் சேர்வன்மையாம் சிறுதண்டிற்கும்
சுருதியின் சேரிடத்தில் செவிக்குற்றி காலம் தானே’ (வர்ம லாட சூத்திரம்-300)

8. ‘பேதகமே இல்லையடா கீழ்தாரைக்குள்
வேதகமே அலவாடி மூட்டில் குச்சம்
சேதகமுனை ஏவி நிற்கும் செவிக்குற்றியில்’ (உற்பத்தி நரம்பறை-1000)

9. ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து
சீறுங்கொல்லியுட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காக மடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்து
பார்த்தால் செவிக்குத்திக் காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

10 ‘உற்ற கண்ணாடி நாசியுறு கன்னமிவை பிரிந்து
வெற்றியுள் வாயிற் காணுமெதிற் சிருங்காட வன்மம்’ (வர்மவிதி)

விளக்கம் :

செவிகுத்தி வர்மமானது காதின் முன்பக்கமுள்ள சிறு தண்டுக்கு (Tragus) அருகே (முன் பக்கம்) அமைந்துள்ளது. இது பொய்கை வர்மத்துக்கு இரு விரலளவுக்கு கீழாகவும் நட்சத்திர வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு பின் கீழ் நோக்கியும் (Postero-Inferior) திலர்த வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்குப் பக்கவாட்டிலும் (Lateral) அமைந்துள்ளது. ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலானது சீறும்கொல்லி வர்மத்திலிருந்து ஆறு விரலளவுக்குள் இவ்வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இது சரியானதல்ல. சீறும் கொல்லி வர்மத்திலிருந்து சுமார் எட்டு விரலளவு தூரத்தில் செவிகுத்தி வர்மம் அமைந்துள்ளது என்பதே சரியானதாகும். ஏனெனில் திலர்த வர்மத்துக்கும் சீறும் கொல்லி வர்மத்துக்கும் நடுப் பகுதியிலேயே செவிகுத்தி வர்மம் அமைந்துள்ளது.

திலர்தவர்மம் – செவிகுத்தி வர்மம் = 8 விரலளவு
செவிகுத்தி வர்மம் – சீறும் கொல்லி வர்மம் = 8 விரலளவு
திலர்தவர்மம் – சீறும் கொல்லி வர்மம் = 16 விரலளவு

காதின் சிறு தண்டுக்கு முன்பு நாம் விரலை வைத்துக் கொண்டு மெதுவாக வாயைத் திறந்தோமானால் ஒரு சிறு பள்ளம் உருவாவதை விரல் உணரும் இந்த இடமே செவிகுத்தி வர்மத்தின் இருப்பிடமாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.