65. கச்சைக் காலம் – Kachai Kalam
வேறு பெயர்கள் :
1. கச்சைக் காலம் (அடிவர்ம சூட்சம்-500)
இடம் :
நட்டெல்லு வர்மத்திற்கு கீழே அரையில் வளையமாக உள்ளது.
பெயர்க்காரணம் :
இடுப்பில் கச்சை கட்டும் இடத்தைச் சுற்றிலுமுள்ள வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.
இருப்பிடம் :
1. ‘நட்டெல் வர்மத்திற்கும் நல்லதின் கீழ் கச்சை வர்மம்’
(வர்ம லாட சூத்திரம்-300)
2. ‘எண்ணிந்த ஈரிறை கீழ் முண்டு வர்மம்
எல்லை இதன் இரு இறைகீழ் கச்சைக்காலம்’
(அடிவர்ம சூட்சம்-500)
3. ‘சொல்லுவார் மூலத்தண்டில் நட்டெல் வர்மம்
சூட்சமமாம் அதற்கும் கீழ் கச்சை வர்மம்’
(வர்ம திறவு கோல்-225)
4. ‘கச்சை வர்மம் அரைதனில் வளையமாய்……….’ (வர்ம ஆணி-108)
5. ‘நாணமுறு மூலத்தண்டில் நட்டெல் வர்மம்
நணுகியதன் கீழ் கச்சைக் காலமென்பர்’ (வர்ம பீரங்கி-100)
விளக்கம் :
அரையில் கச்சை கட்டும் இடத்தைச் சுற்றிலும் இவ்வர்மம் உள்ளது. இப்பகுதியை இறுக்கும் போது கால் இரண்டும் குழைந்து தள்ளாடும் இப்பகுதி நட்டெல்லு வர்மத்துக்கு சற்றே கீழாக அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி