63. நட்டெல்லு வர்மம் – Nattellu Varmam
வேறு பெயர்கள் :
1. நட்டெல்லு வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. சோர தீண்டா வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
பெயர்க்காரணம் :
இந்த வர்மம் கொண்டால் நிமிர்ந்து நிற்க முடியாது ‘நட்டம்’ என்றால் நேரான நிலை. நட்டமாக நிற்க முடியாத வர்மமாகையால் இப்பெயர் பெற்றது. மேலும் முள்ளம் தண்டில் இவ்வர்மம் அமைந்துள்ளது.
இடம் :
முதுகு தண்டில், கச்சை வர்மத்துக்கு மேலே உள்ளது.
இருப்பிடம் :
1. ‘சொல்லுவார் முள்ளந்தண்டில் நட்டெல்லு வர்மம்
துச்ச மதுக்குக் கீழ் கச்சைக் காலம்’ (வர்ம கண்ணாடி-500)
2. ‘நாணமுறு மூலத்தண்டில் நட்டெல்லு வர்மம்
நணுகிய தன் கீழ் கச்சைக் காலம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘வசம்பவே கூம்பு வர்மத்தில் நின்று
வகுப்பாக விரல் வலத்தே நட்டெல்லு வர்மம்’
(சதுரமணி சூத்திரம்)
4. ‘நெறியிலே மூலத்தண்டில் நெட்டிடை நட்டெல் வர்மம்’
‘நட்டெல் வர்மத்திற்கும் நல்லதின் கீழ் கச்சை வர்மம்’
(வர்ம லாட சூத்திரம்-300)
5. ‘காணவே சோரதீண்டா முதுகின் மையம்
கல்லென்ன நடுமுதுகு சோரதீண்டா’ (உற்பத்தி நரம்பறை-1000)
6. ‘கொழிப்பான சோரதீண்டா முடிச்சியான
கூம்பு முட்டு தனில்சேரும் பதனம்ரெண்டு’ (உற்பத்தி நரம்பறை-1000)
விளக்கம் :
இவ்வர்மம் கச்சைக் காலத்துக்கு மேல் உள்ளது. முன்பக்கமுள்ள கூம்பு வர்மத்துக்கு நேரே பின் பக்கமாக ஒன்பதாவது மார்பு முதுகெலும்பைச் (L-9) சார்ந்து உள்ளது. இதற்கு மேலுள்ள மார்பு முதுகென்புகள் ஒன்று முதல் எட்டு வரையுள்ள (L1-L8) என்புகளைப் பற்றி எட்டெல்லு வர்மம் (8) உள்ளது. உற்பத்தி நரம்பறை-1000 என்ற நூல் குறிப்பிடும் சோரதீண்டா வர்மம் முதுகின் நடுவில் உள்ளது. இதுவே நட்டெல்லு வர்மம் என்று மர்ம சாஸ்திரபீடிகா என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி