58. கிளிமேக வர்மம் – Kilimega Varmam

வேறு பெயர்கள் :
1. கிளிமேக வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. தண்டு வர்மம் (தொடு வர்ம நிதானம்)

பெயர்க்காரணம் :
இவ்வர்மத்தில் தாக்குதல் ஏற்பட்டால் கிளி சத்தமிடுவதைப் போன்று நோயாளி சத்தமிடுவர். இதனால் இவ்வர்மம் இப்பெயர் பெற்றது.

இடம் :
கழுத்தின் பின் பகுதியின் அடிப்பக்கம் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘……………………………………………………………..
வளமான காக்கட்டை சுமை வர்மம் தான்
ஆகுமே கிளிமேகம் மேலதாகும்
அடங்கியே கழுத்தின் மேல் முப்பத்தேழு’
(வர்ம ஒடிவு முறிவுசாரி-1500)
2. ‘குணமான கிளிமேக மொன்றதாகும்’ (வர்மசாரி-205)

3. ‘கணமான சடப்பிறகாலம் ரண்டு
சாலமென்ன கிளிப்பிற வர்மம் ஒன்று
தகர் கைகெட்டி ரண்டு…………..’ (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)

4. ‘செப்புகிறேன் தும்பிரண்டு…………………………’ (வர்ம சாரி-205)

5. ‘வருந்தியே ஈரெட்டெல்லின் உடற்சுருக்கி
வர்மம் நேர்வர்மத்தின் கீழ் நேர் தும்பிக்காலம்
கருதியே தும்பியின் மேல் நாலிறைக்குள் கைக்கொட்டிக்
காலம் மேலிரு யிறை சடப்பிறக்காலம்
ஒருயிறை மீது கிளிப் பிறையாம் வர்மம்
ஓரிரண்டிறை மேல் கிளிமேக வர்மந் தானே’ (வர்ம பீரங்கி-100)

6. ‘நேர்வர்மத்தின் கீழ்ப்பக்கம் நேர் தும்மிக்காலம்
நின்றதின் நாலிறையின் கீழ் கைக்கெட்டிக்காலம்
பார் அதின் கீழ் ரண்டிறைக்குள் சடப்பிற வர்மம்
பாரிறைக்கு மேல் கிளிப்பிற வர்மமாமே
ஆமிந்த காலமதில் இறையோரிரண்டில்
அதின் மேலே கிளிமேக வர்ம மென்பார்’ (வர்ம கண்ணாடி-500)

7. ‘நேரான மார்புறமே தும்பிக்காலம்
நாலிறைக்கு மேலே கைக்கூட்டு காலமாகும்
ஓரான ரண்டிறைக்கு மேல் சடைப்பிறைக்காலம்
ஓரிறைக்கு மேலே கிளிப்பிற வர்மம்
ஈரான ஈரிறைக்கு மேலே கிளிமேக காலம்’ (வர்மானி-16)

8. ‘உடலிலே நேருவர்மம் ஊற்றதின் கீழ்பக்கத்தில்
துடலிலே தும்மிக்காலம் தும்மிநாலிறையினுள்
குடலிலே தெளிவாய்க்காணும் கூடிநிற்கும் கைகூப்பிகாலம்
திடலிலே ரண்டிறைக்குள் சடப்பிறை வர்மமென்றேனே
சடப்பிறை கோரிறைக்கும் சற்றுமேல் பக்கம் தன்னில்
இடைக்கிளி பிறையதற்கும் ரண்டிறைமேலே பார்க்க
நடைகிளி மேகவர்மம்………………………….’ (வர்ம லாட சூத்திரம்-300)

9. ‘தானென்ற தண்டுவர்மம் குணத்தைக்கேளு
தலைதனிலே பிடரிக்குழியதின் மேல்-மோணில்
வானென்ற அதில் நின்று எட்டுவிரலின் கீழாய்
வரித்தண்டு யெல்லினு மோணின்மேலாய்
மானென்ற தண்டு வர்மமிதற்குப் பேரு………….’ (தொடு வர்ம நிதானம்)

விளக்கம் :
கிளிமேக வர்மத்தின் சரியான இடத்தைக் கணிக்க நாம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வர்மம் ஒற்றை வர்ம வகைப்பாட்டில் உள்ளதால் இது உடலின் மையக்கோட்டில் அமைந்துள்ளது என்பது தெளிவு. ‘வர்ம சாரி-205’ ‘வர்ம ஒடிவு முறிவு சாரி-1500’ ஆகிய இரு நூல்களும் தலை-கழுத்துப்பகுதியில் 37 வர்மங்கள் உண்டு என்றும், அவ்வரிசையில் இந்த கிளிமேக வர்மம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட நூல்களைத் தவிர பிற நூல்கள் கழுத்துக்குக் கீழ் தொப்புள் வரையுள்ள 45 வர்மங்களின் பட்டியலில் இந்த வர்மத்ததைக் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து இவ்வர்மம் கழுத்தும் மார்பும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது என விளங்குகிறது. இவ்வர்மம் முதுகுப்புறத்தில் அமைந்துள்ளது என்பதற்கு கீழ்காணும் விவரங்களே சான்றாகும்.

‘வர்ம ஒடிவு முறிவு சாரி-1500’ என்ற நூலின் படி காக்கட்டை, சுமை, கிளிமேகம் ஆகிய மூன்று வர்மங்களும் இருப்பிடங்களின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன ஆகும். தோளில் அமைந்துள்ள காக்கட்டை வர்மத்திலிருந்து கழுத்தின் முன்புறமாக (Anterior) சுமை வர்மமும், பின்புறமாக (Posterior) கிளிமேக வர்மமும் உள்ளது.

பல வர்ம நூற்கள் முதுகுப் பகுதியிலுள்ள வர்மங்களில் சிலவற்றை இவ்வாறு வரிசைப்படுத்துகிறது. அவை : தும்பிவர்மம்-கைக்கெட்டிக்காலம்-சடப்பிறக்காலம்-கிளிப்பிற வர்மம்-கிளிமேக வர்மம்.

மார்பிலுள்ள நேர் வர்மத்தின் மட்டத்தில் நேரே பின்புறம் முதுகில் இரு மார்புகளுக்கு மறுபக்க காலமாக அமைந்துள்ள வர்மம் தும்பி என்ற தும்மி வர்மமாகும். இது இரட்டை வர்மம் (வர்மசாரி-205) இவ்வர்மத்திலிருந்து நான்கு இறைக்கு மேல் அகப்பக்கவாட்டில் (Supero-Medial) கைக்கொட்டிக் காலம் உள்ளது. இது இரட்டை வர்மம். இதற்கு இரு இறைக்கு மேலே சடப்பிறக்காலம். இது இரட்டை வர்மம் இதற்கு ஓர் இறைக்கு மேலே கிளிப்பிறை வர்மம். இது ஒற்றை வர்மம். இதற்கு இரு இறைக்கு மேலே கிளிமேக வர்மம் இது ஒற்றை வர்மம்.

தும்பி வர்மத்துக்கு மேலாகவே மேலே கூறப்பட்ட மற்ற வர்மங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளன என்று வர்ம பீரங்கி-100, வர்மானி-16, வர்ம லாட சூத்திரம்-300 போன்ற நூற்கள் குறிப்பிடுகின்றன. சில நூற்கள் இதிலிருந்து சற்று வேறுபடுகின்றன. இந்த வேறுபாடு ஏற்றுக்கொள்வதற்கில்லை. தும்மி வர்மத்துக்கும், கிளிமேக வர்மத்துக்கும் இடைப்பட்ட அளவு சுமார் 9 விரலளவு (4+2+1+2) ஆகும்.

பிடரிக்குழிக்கு மேலுள்ள மோணெலும்பிலிருந்து எட்டுவிரலுக்கு கீழாக வரித்தண்டு எல்லின் மோணுக்கு மேலாக உள்ள வர்மம் தண்டு வர்மம் என்று தொடு வர்ம நிதானம் என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்த இடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உடற்கூறுப் பகுதியேயாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி