54. தும்பிக்காலம் – Thumbi Kalam

வேறு பெயர்கள் :
1. தும்பிக் காலம் (வர்ம பீரங்கி-100)
2. தும்மிக் காலம் (வர்ம கண்ணாடி-500)

இடம் :
மார்பிலுள்ள நேர் வர்ம மட்டத்தில் நேரே மறுபுறம் முதுகில் உள்ள இடம். இது இரட்டை வர்மமாகும் (வர்மசாரி-205)

இருப்பிடம் :
1. ‘வர்மம் நேர் வர்மத்தின் நேர் தும்பிக்காலம்
கருதியே தும்பியின் மேல் நாலிறைக்குள்
கைக்கொட்டிக் காலம்………………..’ (வர்ம பீரங்கி-100)

2. ‘உடலிலே நேருவர்மம் உற்றதின் கீழ் பக்கத்தில்
துடலிலே தும்பிக்காலம்…………’ (வர்ம லாட சூத்திரம்-300)

3. ‘மருவியே ஓட்டையின் கீழ் மலப்பிறவர்மம்
மாத்திரையாம் ஒட்டை மேல் தும்மிக் காலம்’ (வர்ம சாரி-205)

4. ‘செப்புகிறேன் தும்மி ரண்டு………….’ (வ.ஒ.மு. சாரி-1500)

விளக்கம் :
இவ்வர்மம் மார்பின் முன் பக்கமுள்ள நேர் வர்மத்துக்கு மறு (கீழ்) பக்கம் முதுகில் உள்ளது. இவ்வர்மத்தை ‘வர்ம ஒடிவு முறிவு சாரி-1500’ என்ற நூல் இரட்டை வர்மம் என்று குறிப்பிடுவதால் இது முதுகின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வர்மத்துக்கு நான்கு இறைக்கு மேலே கைக்கூட்டி காலம் உள்ளது. அதற்கு இரண்டு இறைக்கு மேலே சடப்பிற வர்மம் உள்ளது. அதற்கு ஓர் இறைக்கு மேலே கிளிப்பிற வர்மம் உள்ளது. அதற்கு இரு இறைக்கு மேலே கிளிமேக வர்மம் உள்ளது. (கிளிமேக வர்மம் – தும்மி வர்மம் = 9 இறை)

‘கைபுட்டி’ எனப்படுவது இரு கைகளின் வாகென்பு (Scapula Bone) பகுதியாகும். இதன் மையப் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளது. இப்பகுதி மார்பிலுள்ள நேர் வர்மத்துக்கு நேரே பின்புறம் முதுகுப் பகுதியிலுள்ளது இது தும்மி வர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவ்வர்மமானது ‘பெரு நரம்பு’ எனப்படும் தண்டு வடத்தின் (Spinal Cord) மையப் பகுதியில் அமைந்துள்ளது என்ற ஒரு செய்தியும் காணக்கிடைக்கிறது. (ஒப்பு நோக்குக : கிளிமேக வர்மம்)

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி