53. நேர் வர்மம் – Ner Varmam
வேறு பெயர்கள் :
1. நேர் வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. நேரு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
3. கூம்பு குழி வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. கர்கடக வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
பெயர்க்காரணம் :
இவ்வர்மம் மார்புக்கும் வயிற்றுக்கும் நேரே நடுவில் அமைந்துள்ளதால் நேர் வர்மம் எனப் பெயர் பெற்றது. இது கூம்பு வர்மத்துக்கு மேலேயுள்ள குழியை சார்ந்து அமைந்திருப்பதால் கூம்பு குழி வர்மம் எனப் பெயர் பெற்றது.
இடம் :
நெஞ்சு குழியில் அமைந்துள்ளது.
இருப்பிடம் :
1. ‘பாலகனே அதன் மேலே நேரு வர்மம்
தக்கபடியதிலிருந்து ஆறு விரல் மேல்
சார்ந்து வெள்ளீரல் காரீரல் வர்மம்’ (வ.ஒ.மு.ச.சூ-1200)
2. ‘………………………………………………………. கூம்பு வர்மம்
சொன்னதின் கீழே இருவிரலின் நேரதானே
ஆமிந்த நேர் வர்மம் அதற்குக் கீழே’ (வர்ம கண்ணாடி-500)
3. ‘கூம்பின் மேல் நேரு வர்மம்’ (வர்மாணி நாலு மாத்திரை)
4. ‘தும்பி வர்மத்திலிருந்து உந்தி வர்மம் வரைக்கும் அளவெடுத்து (20 விரலளவு) அந்நூலை இரண்டாக மடக்கி (10 விரலளவு) தும்மி வர்மத்திலிருந்து கீழ்நோக்கி அளக்க நேர் வர்மம் அறியலாம்’. (வர்ம நூலளவு நூல்)
5. ‘தீருமப்பா நெஞ்சில் கூனெலும்பு ரண்டு விரல் தாழே
திறமான நேர் வர்மம் அதற்குப் பேரே’ (வர்ம பீரங்கி திறவு கோல்-16)
6. ‘போமப்பா கூம்பு வர்ம தலத்தைக் கேளு
பொருந்து நேர் வர்மத்தின் மூவிரல் கீழ்’ (வர்ம நிதானம்)
7. ‘புத்தி வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழே கூம்பு குழி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்குக் கீழே கூம்பு வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
8. ‘ஆளுமே கர்கடக வர்மமப்பா
அறைகிறேன் நடுவறையாம் நேர்வர்மம்’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
விளக்கம் :
பல நூல்கள் இவ்வர்மத்தின் இருப்பிடத்தை கூம்புக்கு அல்லது கூம்பெலும்பிற்கு (Sternum) தாழ்வாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இது சரிதான் கூம்பு எலும்பு எனப்படும் நெஞ்சென்பின் அடிப்பகுதியிலுள்ள பள்ளத்தில் இவ்வர்மம் காணப்படுகிறது. ஆனால் கூம்பு வர்மத்துக்கு மூன்று விரலுக்கு மேலேயே இவ்வர்மம் காணப்படுகிறது.
‘வர்மாணி நாலு மாத்திரை’ என்ற நூல் ‘கூம்பின் மேல் நேரு வர்மம்’ என்று குறிப்பிடுகிறது. இந்நூல் குறிப்பிடும் ‘கூம்பு’ கூம்பு வர்மமேயாகும். இவ்வர்மம் வெள்ளீரல், காரீரல் வர்மங்களிலிருந்து ஆறு விரலுக்குள் காணப்படுகிறது.
நேர் வர்மத்திற்கு நேரே மேலே தும்மி வர்மம் காணப்படுகிறது. தும்மி வர்மத்திலிருந்து பத்து விரலளவுக்குக் கீழாகவும், உந்தி வர்மத்துக்கு பத்து விரலுக்கு மேலாகவும் இவ்வர்மம் காணப்படுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி