51. உடல் சுளுக்கி வர்மம் – Udal Sulukki Varmam
வேறு பெயர்கள் :
1. உடல் சுழுக்கி வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. உடல் சுருக்கி வர்மம் (வர்ம சாரி-205)
3. நடுச்சுருக்கி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
4. சுளுக்கி வர்மம் (வர்ம துறவுகோல்-225)
5. கூடு வர்மம் (சதுரமணி சூத்திரம்)
6. எட்டெல்லு பொய்கை வர்மங்கள் (வர்மாணி நாலு மாத்திரை)
7. பொய்கை வர்மங்கள் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
உடல் சுருக்கி வர்மம் 1 – (முதலாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 2 – (இரண்டாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 3 – (மூன்றாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 4 – (நான்காம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 5 – (ஐந்தாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 6 – (ஆறாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 7 – (ஏழாம் விலாவிடைப் பகுதி)
உடல் சுருக்கி வர்மம் 8 – (எட்டாம் விலாவிடைப் பகுதி)
பெயர்க்காரணம் :
இவ்வர்மம் விலா இடைப் பகுதிகளில் (Intecostal Space) அமைந்துள்ளன. மூச்சு விடும்போது இதிலுள்ள தசைகள் மார்புக்கூட்டை சுருங்கி விரியச் செய்யும். எனவே ‘உடல் சுருக்கி வர்மம்’ எனப்பட்டு பின்னர் ‘உடல் சுழுக்கி வர்மம்’ என்று மருவியிருக்கலாம். எட்டு விலா என்புகளின் இடைப் பள்ளங்களில் (பொய்கை) அமைந்துள்ளதால் எட்டெல்லு பொய்கை வர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.
இடம் :
எட்டு விலா என்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள எட்டு வர்மங்களாகும்.
இருப்பிடம் :
1. ‘வருந்தியே ஈரெட்டெல்லின் உடற் சுருக்கி வர்மம்…….’ (வர்ம பீரங்கி-100)
2. ‘கோர்வை எட்டு எல்லினுடல் சுழுக்கி வர்மம்’
(வர்ம கண்ணாடி-500)
3. ‘விலா வெல்லில் ஈரெட்டு உடல் சுழுக்கி வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)
4. ‘பாரென்ற பதினாறு எல்லினும் தான்
பாடுகிறேன் நடுச்சுருக்கி பகர்ந்து பாரு’ (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
5. ‘காலமென்ற நடுச்சுழுக்கி ரண்டாகும்’ (வர்ம சாரி-205)
6. ‘…………………………………………… முண்டெல்லு வர்மம்
இன்னுமொன்று சொல்லுகிறேன் இதனடுத்து
இயலான கூடு வர்மம் எட்டுண்டப்பா’ (சதுரமணி சூத்திரம்)
7. ‘எட்டெல்லு பொய்கை ஸ்தானங்கள்’ (வர்மாணி நாலு மாத்திரை)
8. ‘எட்டெல்லு……..குருந்தில் குத்தினால்……..’ (வர்ம வில்லு விசை)
9. ‘நில்லடா காரையதின் கீழ் பொய்கைக்குள்
நிலையான பொய்கை வர்மம் பதினாறாகும்’
(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
10. ‘உள்ளெட்டெலும்பில் தானே ஒத்துடன் சுழுக்கி வர்மம்’
(வர்ம லாட சூத்திரம்-300)
11.‘கூறெட்டு எலும்பினுள் சுளுக்கி வர்மம்’ (வர்ம துறவுகோல்-225)
விளக்கம் :
எட்டு எல்லு என்பது எட்டு விலா என்புகளை குறிக்கும் (2nd – 9th). இவ்விலா என்புகளே வாரி என்புகள் என்றும் வழங்கப்படுகின்றன. இந்த விலா (Rib) என்புகளுக்கு இடைப்பட்ட தசைப்பகுதி (Intercostal-Muscles) மூச்சு விடும்போது சுருங்கி விரியும். இதனால் மார்புக் கூடும் சுருங்கி விரியும் எனவே இத்தசைகளிலுள்ள வர்மங்கள் ‘உடல் சுருக்கி வர்மம்’ எனப்பட்டு பின்னர் ‘உடல் சுழுக்கி வர்மம்’ என மருவியது.
இரு விலா என்புகளுக்கு இடைப்பட்ட பள்ளமான பகுதியே (Intercostal Space) பொய்கை எனப்படும். முதல் எல்லுப் பொய்கை முதல் விலா என்புக்கும், இரண்டாம் விலா என்புக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகிறது. இவ்வாறு இரண்டு, மூன்று என்று கீழ் வெளிப்புறம் நோக்கிய வரிசையில் காணப்படுகிறது.
வர்ம வில்லுவிசை நூல் இந்த விலா இடைத்தசைப்பகுதியை ‘குருந்து’ என்று குறிப்பிடுகிறது. வர்மாணி நாலு மாத்திரை என்ற நூல் ‘பொய்கை’ என்று குறிப்பிடுகிறது.
இவ்வர்மங்கள் எட்டு இடங்களில் அமைந்திருந்தாலும் வர்மசாரி, வர்ம பீரங்கி, வர்ம கண்ணாடி போன்ற நூல்கள் எட்டுக்கும் பொதுவான ஒரே குறிகுணங்களையே விவரிக்கின்றன. ஆனால் வர்மாணி நாலு மாத்திரை, வர்ம வில்லு விசை போன்ற நூல்கள் இவை எட்டின் குறி குணங்களையும் தனித்தனியே விவரிக்கின்றன என்றாலும் இந்நூல்கள் மூன்றாவது எல்லு பொய்கை வர்மத்தில் ஆரம்பித்து எட்டாவது எல்லு பொய்கை வரை மட்டுமே விவரிக்கின்றன. முதல் மூன்று பொய்கை வர்மங்களின் குறி குணங்களை ‘வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் விவரிக்கின்றது.
காரை என்பின் மையத்திலிருந்து (Mid Clavicular Plane) ஆரம்பிக்கும் இப்பொய்கை வர்மங்கள் கீழ்நோக்கி சென்று முண்டெல்லு வர்மத்துக்கு (11th Floating Rib) மேலாக முடிவடைகிறது. அடப்ப வர்ம (வர்ம நூலளவு நூல்) பகுதிக்கு மேலும் கீழும் இப்பொய்கை வர்மங்கள் அமைந்துள்ளன. (சிகிச்சை முறிவு சாரி-250)
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி