50. பள்ளை வர்மம் – Pallai Varmam

பெயர்க்காரணம் :
இவ்வர்மம் அமைந்துள்ள இடம் ‘பள்ளை‘ என்று வழங்கப்படும். எனவே இடவாகு பெயராக ‘பள்ளை வர்மம்’ எனப் பெயர் பெற்றது. மேலும் இவ்விடம் சற்று பள்ளமாக இருப்பதால் ‘பள்ள வர்மம்’ என்னும் பெயர் பெற்றிருக்கலாம்.

இடம் :
பள்ளைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘கீர்த்திபெற்ற அடப்ப வர்மம் தன்னிலிருந்து
கணிதமுடன் இரு மூன்று விரலுக்குள்ளே
வீர்த்தி பெற்ற பள்ளை வர்மமதற்குப்பேரு’ (வர்ம சூடாமணி)

2. ‘வாறெலும்பு நிகழ்ந்த அற்றம் ‘பள்ள வர்மம்’ (வ.ஒ.மு. சாரி-1500)

3. ‘சராவில் விரல் நாலது பின் சருதி வர்மம்
சார்ந்ததொரு பள்ளைதனில் பள்ளை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘இருக்குஞ் சிறிய சுருக்கி மேல் நால்விரல் முன்
எழுஞ் சுருதிவர்மமுடன் பள்ள வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

5. ‘பள்ள வர்மம் ரண்டு யெல்லிடை தான் ரண்டு’ (வர்ம சாரி-205)

6. ‘தாமிந்த ஒருவிரல் கீழ் சிறிய அஸ்திசுருக்கி
தயவாக இதன் பக்கம் சரிவிலேதான்
சரிவில் விரல் நாலில் முன்சருதி வர்மம்
சார்ந்ததொரு பள்ளைதன்னில் பள்ளை வர்மம்’ (வர்ம துறவுகோல்-225)

7. ‘பள்ளை தானெங்கேயென்றால் பரிசுடன் வாறெலும்பு
வெள்ளை தான் நெகிழ்ந்த அற்றம் வேறெங்கும் கூறொன்னாது’
(வர்ம லாட சூத்திரம்-300)

8. ‘வீறரிய பள்ளைதனில் பள்ளை வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

9. ‘விலாபுறத்து மூன்றாவது எலும்பினும் ஏழு விரலினும் தாழே, வலத்தே பள்ளைவர்மம் உள்ளது’ (வர்ம விளக்கம்)

விளக்கம் :
இவ்வர்மம் ‘வாறெலும்பு எனப்படும் மார்புகூட்டின் அடிப்பகுதியிலுள்ள என்புக்குக் கீழே முலை மார்புக்கு (Mid Clavicle Plane) நேரே கீழே அமைந்துள்ளது. இந்த இடம் முன் சருதி வர்மத்திலிருந்து மேல் அகம் சார்ந்தும், அடப்ப வர்மத்திலிருந்து சுமார் ஆறு விரலுக்கு கீழ் அகம் நோக்கியும் அமைந்துள்ளது. மூன்றாவது விலா என்பிற்கு சுமார் ஏழு விரலளவுக்குக் கீழே இவ்வர்மம் உள்ளதாக வர்ம விளக்கம் என்ற நூல் குறிப்பிடுகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி