5. பொற்சை வர்மம் – Porchai Varmam
வேறு பெயர்கள் :
1. பொற்சை காலம் (வர்ம பீரங்கி-100)
2. பொர்ச்சை காலம் (வர்ம கண்ணாடி-500)
3. புகழ்ச்சை வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
4. புகச்சை வர்மம் (வர்மசாரி-205)
5. பெரிச்சல் வர்மம் (வர்ம நிதானம்-500)
பெயர்க்காரணம் :
‘புகைச்சல் வர்மம்’ என்பதே பொற்சை வர்மமாக திரிந்திருக்க வேண்டும். இதன் முக்கிய குறிகுணமாக ‘கண்ணிரண்டும் புகைச்சல் கொள்ளும்’ என வர்ம பீரங்கி-100, வர்ம கண்ணாடி-500 ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பிடம் :
1. ‘தானான உச்சியிலேயிருந்து எட்டு விரலின் கீழ்
சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே
காலமாம் அதற்குமொரு இறைக்கு கீழே
கனமான குத்தி என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)
2. ‘ஓமென்றங்குலம் நாலுக்குக் கீழ் பிடரி வர்மம்
உச்சாணின் எண் விரலுக்குக் கீழ் சுருதி வர்மம்
காமென்ற இருவிரலுக்குக் கீழ் பொற்சைக் காலம்
காணிறை கீழ் குற்றிக் காலம்…………’ (வர்ம பீரங்கி-100)
3. ‘…………………………………சீறும்கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்
நாலிறைக்கு மேல் பக்கமதில் சுருதி வர்மம்
பாளப்பா இரண்டிறை கீழ் பொற்சகாலம்
பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக்காலம்’ (வர்மசாரி-205)
4. ‘தேனென்ற காதில் நால் விரலுக்கு மேல்
திறமான பெரிச்சல் வர்மம் குணத்தைக் கேளு’ (வர்ம நிதானம்-500)
விளக்கம் :
உச்சி வர்மமாகிய கொண்டைக்கொல்லி வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு பின்-பக்க (Postero – Lateral) பக்கமாக, உடல் மையக்கோட்டுக்கும், காதுக்கும் நடுவில் சுருதி வர்மம் உள்ளது. இதற்கு இரண்டு விரலளவுக்குக் கீழே பொற்சை வர்மம் உள்ளது. இதற்கு ஒரு விரலளவுக்குக் கீழே குத்தி வர்மம் உள்ளது.
சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்குக் கீழே பிடரி வர்மம் உள்ளது. சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு இறைக்கு மேலே பக்கவாட்டில் சுருதி வர்மம் உள்ளது. இதற்கு இரு இறைக்குக் கீழே பொற்சை காலம் உள்ளது. இந்த இடம் காதிலிருந்து நான்கு விரலளவுக்கு பின்-மேல் (Postero-Superior) பக்கமாக உள்ளது. வர்மநிதானம்-500 என்ற நூல் இவ்வர்மத்தை பெரிச்சல் வர்மம் என அழைக்கிறது.
இடம் :
காதின் பின் மேல் பகுதியில் உள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.