48. காரீரல் வர்மம் – Kareeral Varmam
வேறு பெயர்கள் :
1. காரீரல் வர்மம் (வர்ம சூடாமணி)
இடம் :
மார்பின் முலைக்காம்புக்கு மேலே உள்ளது.
இருப்பிடம் :
1. ‘நேர் வர்மம் தன்னிலிருந்து சுகமாக மூவிரலுக்கு
நேரேதானே சுருக்கி என்ற காரீரல் நேருமப்பா’ (வர்ம சூடாமணி)
2. ‘காரீரல் வர்மத்துக்கு இரண்டு விரலுக்குக்
கீழே வெள்ளீரல் வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
3. ‘நாணமென்னும் உள்ளுக்குள் காரீரல் வர்மம்
நலம் பெரிய வெள்ளீரல் சமீபம் தானே’ (வர்ம சூத்திரம்-101)
4. ‘………………………………………………………………… நேர் வர்மம்
தக்கபடியதிலிருந்து ஆறு விரல் மேல்
சார்ந்த வெள்ளீரல் காரீரல் வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
5. ‘கைசீப்பின் மூன்றாவது எலும்பின் தாழே துண்டு சதைக்கு
மத்தியில் காரீரல் வர்மம்’ (வர்ம விளக்கம்)
6. ‘குறித்த வெள்ளீரல் பக்கம் காரீரல் வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)
7. ‘கைப்புஜ வரி எலும்பில் மூணாவது வரியினுடைய
பொய்கையில் வர்மங் கொண்டால்………………..’ (வர்மாணி நாலு மாத்திரை)
8. ‘எட்டெல்லின் மூன்றாவது பொய்கையில் குத்தினால்
காரீரல் விறைக்கும்………………….’ (வர்ம வில்லு விசை)
9. ‘திவளை வர்மத்துக்கு கீழே காரீரல் வர்மம்’
(வர்ம நூலளவு நூல்)
விளக்கம் :
காரீரல் வர்மம், திவளை வர்மத்துக்கு நேரே கீழாக, முலைக் காம்புக்கும் (தூசிக வர்மம்) ஒன்றரை விரலுக்கு மேலாகக் காணப்படுகிறது.
நேர் வர்மத்துக்கு மூன்று விரலுக்கு மேலே என்றாலும் நேராக மேலே அமையாமல், நேர் வர்மத்துக்கு நேரே பக்கவாட்டில் 5 விரலளவு தொலைவில் உள்ள எல்லு வர்மத்துக்கும் சுமார் மூன்றரை விரலுக்கு மேலாக அமைந்துள்ளது.
வர்ம விரல் அளவு நூல் காரீரல் வர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே வெள்ளீரல் வர்மம் என்று கூறுகிறது. இதற்கு ‘வர்மாணி நாலு மாத்திரை’ என்ற நூலும் ‘வர்ம வில்லு விசை’ என்ற நூலும் ஆதாரம் காட்டுகின்றன.
அதாவது மேற்கண்ட நூல்கள் உடல் சுருக்கி வர்மம் எனப்படும். ‘எட்டெல்லு பொய்கை’ வர்மங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, மூன்றாவது பொய்கையில் குத்தினால் காரீரல் பாதிக்கும் என்று கூறுகிறது. எனவே இக்காரீரல் வர்மம் எட்டெல்லின் 3-வது பொய்கை (3rd Intercostal Space) வர்மத்துடன் நெருங்கிய தொடர்புடைய வர்மம் எனத் தெரிகிறது.
காரீரல் – வெள்ளீரல் வர்மங்கள் :
காரீரல், வெள்ளீரல் வர்மங்களின் இருப்பிடங்களில் பல மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமுண்டு காரீரல் என்பது கல்லீரலையும் (Liver), வெள்ளீரல் என்பது மண்ணீரலையும் (Spleen) குறிக்குமா? என்று ஆராய்வோமானால், வர்ம நிதானம்-300 என்ற நூல்
‘தீருமே வலதுபக்கம் காரீரல் வர்மம்
தயவாக இடதுபக்கம் வெள்ளீரல் வர்மம்’
என்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து வலது பக்கம் கல்லீரலும், இடது பக்கம் மண்ணீரலும் இருக்கும் இடத்தையே இது குறிக்கிறது என்று நாம் கொள்ளலாம். வர்ம திறவு கோல்-225 என்ற நூலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
‘கூறெட்டு எலும்பினுள் சுருக்கி வர்மம்
குறித்த வெள்ளீரல் மறுபக்கம் காரீரல் வர்மம்’
மேற்கண்ட நூல் வெள்ளீரல் ஒரு பக்கமும், காரீரல் மறுபக்கமும் இருக்கிறது என்றே குறிப்பிடுகிறது. கல்லீரலும், மண்ணீரலும் வீக்கம் கொள்ளும் போது எந்த இடத்தில் நாம் அழுத்திப் பார்த்தால் விரல்களால் உணரமுடியுமோ அந்த இடத்தில் இவ்வர்மம் உள்ளதாக அடிவர்ம சூட்சம்-500 என்ற நூலும் கூடுதல் ஆதாரங்களைக் காட்டுகிறது.
‘கூறரிய பள்ளைக்கு கீழ் காரீரல் வர்மம்
குளிரு வெள்ளீரல் அதன் கீழாம் பாரு’
அதாவது வல, இட பள்ளை வர்மங்களுக்கு கீழே ஒரு புறம் காரீரல் வர்மமும், மறுபுறம் வெள்ளீரல் வர்மம் உள்ளதாக நாம் பொருள் கொள்ளலாம்.
ஆனால் ‘வர்ம நிதானம்-300’ என்ற நூல், மற்றொரு இடத்தில் காரீரல் வர்மத்துக்கு அடுத்து வெள்ளீரல் வர்மம் உள்ளதாகவும், இரண்டு வர்மங்களும் ஒரே குறிகுணம் உடையது என்றும் குறிப்பிடுவதால் இரண்டும் ஒரே பக்கம் அடுத்தடுத்து உள்ள வர்மங்கள் என உணர முடிகிறது.
‘செய்யவே (காரீரல்) இதனடுத்து வெள்ளீரல் வர்மம்
செயலாக இத்தலத்தில் குத்துவெட்டு கொண்டால்
அய்யவே அவர் பிழையார் அறிந்து பாரு
அடவாக ரண்டுவர்மம் குணமொன்றாகும்’
‘வர்ம லாட சூத்திரம்-300’ என்ற நூலும் மேற்கண்ட கருத்துக்கு ஆதரவு காட்டுகிறது.
‘வெள்ளீரல் பக்கம்பற்றி விள்ளும் காரீரல் வர்மம்’
வர்ம நூலளவு நூலை ஆய்வு செய்யும் போது, திவளை வர்மத்தைச் சார்ந்து உள்ள (Mid-ClaviclePlane) பகுதியில் ஒரே நேர் கோட்டில் ஒன்றன் கீழ் ஒன்றாக காரீரல், வெள்ளீரல் வர்மங்கள் அமைந்துள்ளன என்று அறியமுடிகிறது. வர்மாணி நாலு மாத்திரை, வர்ம வில்லுவிசை போன்ற நூற்களும் மார்பில் விலா இடைப்பகுதிகளிலுள்ள எட்டெல்லு பொய்கை வர்மங்களில் மூன்றாவது பொய்கை (3rd Intercostal Space) வர்மத்தில் குத்தினால் காரீரல் விறைக்கும் என்றும், நான்காவது பொய்கை (4th Intercostal Space) வர்மத்தில் குத்தினால் வெள்ளீரல் தரிக்கும் என்றும் ஆதாரம் காட்டுகின்றன. இதைக் கொண்டு நோக்கும் போது காரீரல் வர்மமும், வெள்ளீரல் வர்மமும் ஒரே பக்கத்திலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக சுமார் இரண்டு விரலளவு இடைவெளியிலுள்ள வர்மங்கள் என அறிய முடிகிறது. எவ்வாறெனினும் காரீரல், வெள்ளீரல் வர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைகளை கண்டறிய உடற்கூறு மற்றும் உடலியங்கு இயல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி