45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam
வேறு பெயர்கள் :
1. சிறிய அஸ்தி சுருக்கி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
2. அத்தி சுருக்கி வர்மம் (வர்ம சூடாமணி)
3. மகர வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
பெயர்க்காரணம் :
இவ்வர்மம் ஏற்பட்டாலும் பெரிய அத்தி சுருக்கி வர்மத்தைப் போல உடலின் உயரம் ஒரு முழம் சுருங்கிப் போவதால் இப்பெயர் பெற்றது. இவ்வர்மம் பெரிய அத்தி சுருக்கி வர்மத்தை விட வன்மை குறைந்ததாகையால் ‘சிறிய அத்தி சுருக்கி’ எனப் பெயர் பெற்றது.
இடம் :
பெரிய அத்திசுருக்கி வர்மத்துக்கு ஒரு விரலளவுக்கு கீழாக உள்ளது.
இருப்பிடம் :
1. ‘கச்சை காலத்துக்கு இரண்டு விரலுக்கு மேல்
சிறிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம விரலளவு நூல்)
2. ‘இருக்குஞ் சிறிய அத்தி சுருக்கி மேல் நால்விரல் முன்
எழுஞ் சுருதி வர்மமுடன் பள்ள வர்மம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘உந்தி (நாபி) யிலிருந்து சடயாந்திர காலம் சுற்றளவெடுத்து
அதை நாலாய் மடித்து உந்திக்கு இடத்தும் வலத்தும்
அளந்தால் சிறிய அத்தி சுருக்கி வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
4. ‘இறந்து போம் முண்டெலும்பின் இறையோர் மூன்றில்
இசைவான சிறிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம சூத்திரம்-101)
5. ‘விலாவில் முண்டெல்லில் மூன்று விரலுக்கு தாழே
விதமான சிறிய அத்தி சுருக்கி வர்மம்’ (வர்ம பீரங்கி திறவுகோல்-16)
6. ‘முண்டெல்லு தனிலிருந்து அப்பனே நேரேதாழே
மூவிரலில் அழகான அத்தியென்ற சுருக்கி வர்மம்’ (வர்ம சூடாமணி)
7. ‘ஊனமே வர்மம் அஸ்தி சுருக்கி ஒன்றதற்குக் கீழே
சீனமே ஓரிறைக்கு சிறிய அத்தி சுருக்கி வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
8. ‘தாமிந்த ஒருவிரல் கீழ் சிறிய அத்திசுருக்கி
தயவாக இதின் பக்கம் சரிவிலேதான்’
‘சரிவில் விரல் நாலில் முன் சருதிவர்மம்’ (வர்ம திறவுகோல்-225)
9. ‘அடவான சிறிய அத்தி சுருக்கி ரண்டு’ (வர்ம சாரி-205)
விளக்கம் :
இவ்வர்மம் பெரிய அத்தி சுருக்கி வர்மத்திலிருந்து ஒரு விரலளவுக்குக் கீழாகவும், முண்டெல்லு வர்மத்திலிருந்து மூன்று விரலளவுக்கு பக்கவாட்டிலும் (Lateral) அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி