44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam
வேறு பெயர்கள் :
1. அத்தி சுருக்கி வர்மம் (வர்மலாட சூத்திரம்-300)
2. வலிய அத்தி சுருக்கி வர்மம் (வர்ம சாரி-205)
3. சுருக்கிக் காலம் (வர்ம சூத்திரம்-101)
பெயர்க்காரணம் :
‘அத்தி’ என்றால் என்பு. என்பை சுருங்கச் செய்யும் (அதாவது முதுகென்பை முன் நோக்கி வளையச் செய்வதால் கூன் ஏற்பட்டு நாற்பது நாட்களுக்குள் உடலின் உயரம் ஒரு முழம் குறுகிப் போகச் செய்யும்) வர்மமாகையால் இப்பெயர் பெற்றது.
இடம் :
முண்டெல்லு வர்மத்துக்கு இரு விரலளவுக்கு கீழே உள்ளது.
இருப்பிடம் :
1. ‘போகவே விலாவின் முண்டெல்லின் கீழே
இதமாக இருவிரல் கீழேதானே
போகவே வலிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம கண்டி)
2. ‘தேறு முண்டெல் வர்மம் கீழிருவிரலில்
திறமான வலிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம பீரங்கி-100)
3. ‘உந்தி (நாபி) யிலிருந்து சடயாந்திர காலம் (சரடயந்த வர்மம்) சுற்றளவெடுத்து அதை நாலாய் மடித்து உந்திக்கு இடத்தும் வலத்தும் அளந்தால் வலிய அத்தி சுருக்கி
வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)
4. ‘தானமே முண்டெல்லு வர்மம் தான் இருவிரலுக்கு கீழ்
ஊனமே வர்மம் அஸ்தி சுருக்கி ஒன்றதற்குக் கீழே
சீனமே ஓரிறைக்கு சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்’ (வர்ம லாட சூத்திரம்-300)
5. ‘கேளப்பா விலாவின் முண்டெலும்பின் தாழ்வாய்
கெணிதமுடன் இரு விரலில் சுருக்கிக் காலம்’ (வர்ம சூத்திரம்-101)
6. ‘சத்தியமாய் விலாவின் முண்டெல்லுயிரு விரல் கீழ்
சாற்றுகிறேன் வலிய அத்தி சுருக்கிக் காலம்’
‘சுருக்கியின் கீழிருவிரலில் சிறிய அத்தி சுருக்கியாகும்’ (வர்ம சாரி-205)
7. ‘ஆகுமே வலிய அத்தி சுருக்கி ரண்டு’ (வர்ம சாரி-205)
விளக்கம் :
இவ்வர்மம் முண்டெல்லு வர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே அமைந்துள்ளது என்று பல நூற்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மம் சிறிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு ஒரு விரலுக்கு மேலே அமைந்துள்ளது. வயிற்றுச் சுற்றளவின் நான்கில் ஒரு பகுதி அளவை தொப்புளிலிருந்து பக்கவாட்டில் அளக்கும் போது இவ்வர்மத்தின் இடத்தைக் காணலாம்.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி