43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam

வேறு பெயர்கள் :
1. முண்டெல்லு வர்மம் (வர்ம விரலளவு நூல்)
2. முண்டெல்லின் வர்மம் (வர்ம நிதானம்)

பெயர்க்காரணம் :
முண்டெல்லு (முண்டம் + எல்லு) அதாவது நெஞ்சென்போடு இணையாது முண்டமாய் தொங்கிக் கொண்டிருக்கும் என்பு முண்டெலும்பு ஆகும். (Floating-Rib) இவ்வெலும்பில் உள்ள வர்மமாகையால் இது முண்டெலும்பு வர்மம் எனப் பெயர் பெற்றது.

இடம் :
முண்டெலும்பின் நுனியில் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘பரிவாக வில்லு வர்மம் அதிலிருந்து
பத்திரமாய் இருவிரல் கீழே தாழே
அரிதான முண்டெல்லு வர்மமதாகும்’ (வர்ம சூடாமணி)

2. ‘அமைந்த முண்டெல்லின் மேல் அங்குலம் நாலில்
உற்றதொரு அடப்பு வர்மம்………’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘சத்தியமாய் விலாவில் முண்டெல்லுயிரு விரல் கீழ்
சாற்குகிறேன் வலிய அத்தி சுருக்கிக் காலம்’ (வர்ம சாரி-205)

4. ‘இறந்துபோம் முண்டெலும்பின் இறையோர் மூன்றில்
இசவான சிறிய அத்தி சுருக்கிக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)

5. ‘வேமிந்த முண்டெல்லில் முண்டெல் வர்மம்
விதமான இருவிரலின் கீழ் சுருக்கி வர்மம்
தாமிந்த ஒருவிரல் கீழ் சிறிய அஸ்தி சுருக்கி’ (வர்ம திறவு கோல்-225)

6. ‘சொன்னதோர் முண்டெல்லின் வர்மம் கேளே
சுகமான எல்லிடை முனையிலாகும்’ (வர்ம நிதானம்)

7. ‘உந்தி வர்மத்திலிருந்து (நாபி) சடயாந்திரம் சுற்றளவெடுத்து அதில் நாலில் ஒரு பகுதி நீளத்தை நாபியிலிருந்து இடப்புறமும் வலப்புறமும் நேராக அளந்தால் முண்டெல்லு வர்மத்தின் இடத்தை அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

விளக்கம் :
இவ்வர்மம் முண்டெல்லு எனப்படும் 11-வது விலா என்பின் முனையில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பெரிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு இரு விரலுக்கு மேலாகவும், சிறிய அத்தி சுருக்கி வர்மத்துக்கு மூன்று விரலுக்கு மேலாகவும் அமைந்துள்ளது. வில்லு வர்மத்திலிருந்து இருவிரலளவுக்குக் கீழாகவும், அடப்ப வர்மத்திலிருந்து நான்கு விரலளவுக்குக் கீழாகவும் இவ்வர்மம் உள்ளது. வயிற்றுச் சுற்றளவின் நீளத்தில் நான்கில் ஒரு பங்கு நீளத்தை, தொப்புளிலிருந்து பக்கவாட்டில் அளக்க இம்முண்டெல்லு வர்மத்தின் இடத்தைக் காணலாம்.

பிடிமுறை :
விரல் கொண்டு முண்டெல்லின் பக்கவாட்டில் பிடித்தால் முண்டெல்லு இருப்பு அசையும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி