42. அண்டு வர்மம் – Andu Varmam

வேறு பெயர்கள் :

1. எல்லிடை வர்மம் (வர்ம சாரி-205)
2. அண்டு வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)

இடம் :

முண்டெல்லுகளுக்கு இடையில் இவ்வர்மம் உள்ளது.

பெயர்க்காரணம் :

இவ்வர்மம் 11-வது முண்டெலும்புக்கும், 12-வது முண்டெலும்புக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘விருதி யென்ற முண்டெல்லிடை எல்லிடை வர்மம்’
(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)

2. ‘…………………………………………………. எல்லிடைதான் ரண்டு’ (வர்ம சாரி-205)

3. ‘தனி அடைப்பம் முண்டெல் கீழ் அண்டுவர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

விளக்கம் :

இருமுண்டெலும்புகளுக்கும் இடையில் இவ்வர்மம் அமைந்துள்ளது. பதினொன்றாவது முண்டெலும்புக்குக் கீழே இவ்வெலும்பை அண்டிக் கொண்டு இவ்வர்மம் உள்ளது.

குறிகுணம் :

அண்டு வர்மம் (17)

வரிசை பெறும் அண்டு வர்மம் கொண்டுதானால்
வாகாக சயம் இளகும் சோரை காட்டும்
கரிசைபெற உச்சத்தில் கொண்டுதானால்
கடிகை ஈரேழுதான் கடந்திடாது
துரிசமாம் மெதுவாகி கொண்டுதானால்
தொலையாமல் வெகுகாலம் இழுப்புக் காட்டும்
வரிசையாம் வர்மமது நெய் எண்ணெயாலே
வரிசையாய் தீர்ந்து விடும் வலுவாய் தாமே. (அடிவர்ம சூட்சம்)

அண்டு வர்மத்தின் குணம் ஏதெனில் சயம் இளகும். சோரை காட்டும். வர்மம் உச்சமாய் கொண்டால் கடிகை 14 கடந்திடாது மெதுவாகக் கொண்டால் நீண்ட நாட்களாய் இழுப்பு வரும்.

மருத்துவம் :

மார்பு-வயிறு வர்மங்களுக்கான சிறப்பு வர்ம இளக்குமுறை மேற்கொள்ள வேண்டும். வர்ம நெய், எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி