40. பன்றி வர்மம் – Panti Varmam

வேறு பெயர்கள் :
1. உறுமிக்காலம் (வர்ம சாரி-205)
2. பன்றி வர்மம் (வர்ம பீரங்கி-100)
3. வர்ம சக்கிற காலம் (வர்ம ஆணி-100)
4. சிங்கு (சிம்ம) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

இடம் :
தொப்புளுக்கும், நெஞ்சுக்குழிக்கும் நடுவில் உள்ளது.

பெயர்க்காரணம் :
இவ்வர்மம் கொண்டவர்கள் பன்றி போல உறுமுவார்கள், இதனால் இவ்வர்மத்துக்கு ‘பன்றி வர்மம்’ என்றும், ‘உறுமி வர்மம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.

‘செய்யவே பன்றி வர்மம் கொண்டதனால்
சிறு பன்றி போலுறுமி அமரும் சொன்னோம்’ (வர்ம பீரங்கி-100)

இருப்பிடம் :
1. ‘நடக்கவே கொப்புளிலே நாலு விரலுக்கு மேலே
நன்றாக உறுமிக்காலமதுவேயாகும்’ (வர்ம கண்டி)

2. ‘வலிய, சிறிய அத்தி சுருக்கிக்கும்
பன்னிரண்டு விரலுக்கு அருகே பன்றி வர்மம்’ (வர்மமும்-எழுப்பு முறையும்)

3. ‘கூம்பு வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழே உறுமிக்காலம் இதற்கு நாலு விரலுக்குக் கீழே உந்தி வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

4. ‘………………………………………. கூம்பு வர்மம்’
மீறுமிறை மூன்றுக்குள் பன்றி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

5. ‘………………………………………………கொழுந்து வர்மம்
மந்தியென்ற மூவிரல் கீழ் உறுமிக்காலம்’ (வர்ம சாரி-205)

6. ‘அப்பனேநேர் வர்மத் தலத்தின் கீழே
அங்குலம் நாலில் உறுமியென்ற காலம்’ (வர்ம சூத்திரம்-101)

7. ‘நலிந்த தொப்புள் நால்விரல் மேல் பன்றி தானே’ (அடிவர்ம சூட்சம்-500)

8. ‘ஆமிந்த நேரு வர்ம மதற்குக் கீழே
அழகான விரல் நாலில் பன்றி வர்மம்’ (வர்ம திறவு கோல்-225)

9. ‘நேர் வர்மத்துக்கும் உந்தி வர்மத்துக்கும் நடுப்பகுதியில் அதாவது நேர் வர்மத்துக்கும் சுமார் 5 விரலுக்குக் கீழாகவும் உந்தி வர்மத்துக்கு சுமார் 5 விரலளவுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது’ (வர்ம நூலளவு நூல்)

10. ‘போகவே கூம்பிலிரு விரலுக்குத் தாழே
பொருத்தவே வர்மம் சக்கிற காலம் பாரு’ (வர்ம ஆணி -100)

11. ‘நடுவளையம் சிங்கு வர்மம் உறுமிக்காலம்’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

விளக்கம் :
இவ்வர்மம் கொப்புளிலிருந்து (உந்தி வர்மம்) நாலு விரலுக்கு மேலே என்று பல நூல்கள் குறிப்பிட்டாலும் வர்ம நூலளவு நூல் முறைப்படி பார்த்தால் சுமார் ஐந்து விரலுக்கு மேலாகவே அமைந்துள்ளது. வர்மசாரி 205 என்ற நூல் கொழுந்து வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழே உறுமிக்காலம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

இவ்வர்மம் நேர் (கூம்பு குழி) வர்மத்திலிருந்து சுமார் ஐந்து விரலளவு கீழும், கூம்பு வர்மத்திலிருந்து சுமார் இரண்டு விரலளவுக்குக் கீழும் உள்ளது. அத்தி சுருக்கி வர்மங்களிலிருந்து சுமார் பன்னிரண்டு விரலளவுக்கு மேல்-அகம் (Supero-Medial) நோக்கி அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி