39. கூம்பு வர்மம் – Koombu Varmam

வேறு பெயர்கள் :
1. கூம்பு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. அரி வர்மம் (படு வர்ம நிதானம்-101)

பெயர்க்காரணம் :
இவ்வர்மம் கூம்பு வடிவில் காணப்படும் நெஞ்சென்பின் Xiphoid-Process-ன் அடியில் காணப்படுவதால் ‘கூம்பு வர்மம்’ எனப்பெயர் பெற்றது.

இடம் :
நெஞ்செலும்பின் அடிப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :
1. ‘போமப்பா கூம்பு வர்மம் தலத்தைக் கேளு
பொருந்து நேர் வர்மத்தின் மூவிரல் கீழ்’ (வர்ம நிதானம்)

2. ‘நேரு வர்மத்துக்கு மூன்று விரலுக்குத் தாழே
கூம்பு வர்மம் கொண்டால்………………..’ (வர்ம ஆணி-108)

3. ‘கருதி முன் சொல் கூம்பு வர்மம் அதிலிருந்து
கணக்காக இருவிரலின் மேலதாக
மேலாக பூட்டெல்லு வர்மம் அஞ்சு
வேந்தனே அதிலிருந்து பக்கம் பற்றி’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

4. ‘இலக்கமாய் சொன்னதாரு கூம்பு வர்மம்
இருந்தீராறு விரல் மேலே சுமை வர்மம் தான்’(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

5. ‘தப்பாது கூம்பினகம் கூம்பு வர்மம்’ (வர்ம சாரி-205)

6. ‘ஆகுமே கொம்புக்குத்தி ரண்டு கூம்பொன்று’ (வர்ம சாரி-205)

7. ‘துன்னுமிந்த முடிப்பதின் கீழே கூம்பு வர்மம்’
சொன்னதின் கீழிரு விரலில் வர்மமாமே’ (வர்ம கண்ணாடி-500)

8. ‘ கூம்பு வர்மம்’
மீறுமிறை மூன்றுக்குள் பன்றி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

9. ‘திவளை காலத்துக்கு ஒரு ஓட்டைச் சாணுக்கு
கீழ் கூம்பு வர்மம் கொள்ளும்’ (வர்ம கண்டி-உரைநடை)

10. ‘நேரு வர்மத்தின் கீழ் கூம்பு வர்மம்’ (வர்மாணி நாலு மாத்திரை)

11. ‘கூம்பு குழி வர்மத்துக்கு இரு விரலுக்கு கீழே
கூம்பு வர்மம் இதற்கு மூன்று விரலுக்கு கீழே உறுமிக்காலம்’
(வர்ம விரலளவு நூல்)

12. ‘நேரவே கூம்பு வர்மத் தலத்தைக் கேளு
நேர் வர்மத்திலிருந்து மூன்று விரல் அகலேயாகும்’
(வர்ம நிதானம்-125)

13. ‘திறுதியென்ற நெஞ்சில் நடு வசமாய்
தீண்டியிருக்கும் கூம்பு வர்மம்‘ (சரசூத்திர திறவுகோல்-36)

14. ‘பாரப்பா அரி வர்மம் யெட்டு விரலின் கீழே
பண்பாக நேரே குத்திடிகள் கொண்டதனால்’ (படுவர்ம நிதானம்-101)

விளக்கம் :
நேர் வர்மத்திலிருந்து சுமார் மூன்று விரலுக்கு கீழே இவ்வர்மம் காணப்படுகிறது. சுமை வர்மத்துக்கு பன்னிரண்டு விரலுக்குக் கீழாகவும், திவளை வர்மத்திலிருந்து சுமார் பன்னிரண்டு விரலளவுக்கு கீழ் அகப்பக்கம் நோக்கியும், உந்தி வர்மத்திலிருந்து சுமார் ஏழு விரலுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது. நெஞ்சென்பின் (Sternum) Xiphoid-Process-ன் நுனிப் பகுதியே இதன் இருப்பிடமாகும்.

உறுமி எனப்படும் பன்றி வர்மம், இவ்வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழ் இருப்பதாக ‘வர்ம பீரங்கி-100’ என்ற நூல் குறிப்பிட்டாலும், வர்ம நூல் அளவுப்படி இரு விரலுக்குக் கீழ் உறுமி வர்மம் அமைந்துள்ளது என்பதே சரியானதாகும். வர்ம கண்ணாடி-500 குறிப்பிடுவதைப் போன்று நேர்வர்மத்துக்கு மேலே கூம்பு வர்மம் அமைந்துள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை. இது தவறானதாகும் உருத்திர என்ற கதிர் வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு கீழாக கூம்பு என்ற இந்த அரி வர்மம் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி