34. குத்து வர்மம் – Kuthu Varmam
வேறு பெயர்கள் :
1. குத்து வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
2. எழுத்து வர்மம் (வர்ம விரலளவு நூல்)
3. கைக்குழி வர்மம் 2-ல் ஒன்று (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

இடம் :
கமுக்கூட்டில் பிறதாரையின் கீழ் குத்து வர்மம்

இருப்பிடம் :
1. ‘எடுத்த கமுக்கூடதிலே குத்து வர்மம்
நின்றதின் ஓர் இறை கீழ் வசவு வர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

2. ‘பிறமான கீழ்கை கூட்டின் மீதே
பேசு பிறதாரையின் கீழ் குத்துவர்மம்’ (வர்ம திறவு கோல்-225)

3. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே
கொடிய பிறதாரை கீழ் குத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)

4. ‘காரையே பிறதாரை காணதன் கீழே ரண்டு வர்மம்
பூரைய குத்துவர்மம் புகன்ற உள்புற்றும் ஒன்றாம்’ (வர்ம லாட சூத்திரம்-300)

5. ‘கைக்குழியில் அக்குளில் எழுத்துவர்மம் இது தொடுவர்மம்’
(வர்ம விரலளவு நூல்)

6. ‘கூறியதோர் கீழ் கமுக்கூட்டின் மீதே
கொடிய பிறதாரையின் கீழ் எழுத்துவர்மம்’ (வர்ம பீரங்கி-100)

7. ‘காக்கட்டைக் காலம் முதல் குளிப்பூட்டு தள்ளெலும்பு வரை ஒரு நூலால் அளவெடுத்து (36 விரலளவு) அதை நான்காக மடக்கி (9 விரலளவு) சிப்பி தூங்கு சதையிலிருந்து மேல் பக்கவாட்டில் கைக்குழியில் பிடித்தால் கைக்குழி வர்மம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

8. ‘பொக்கமாய் சொன்ன சித்திர காலத்துக்கும்
புகழ் நாலு விரல் பக்கம் வலமிடமும்’
‘வலமிடமும் கைக்குழி காலம் நாலு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

விளக்கம் :
சித்திரக்காலம் என்ற வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு புறப்பக்கவாட்டில் (Lateral) கைக்குழியில் காணப்படும் வர்மம் பிறதாரை ஆகும். இப்பிறதாரையின் கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக இருவர்மங்கள் உள்ளதாக ‘வர்ம லாட சூத்திரம்-300’ என்ற நூல் குறிப்பிடுகிறது. அவ்வர்மங்களாவன

(1) குத்து வர்மம், (2) உள்புற்று வர்மம் இவை இரண்டுமே கைக்குழிப் பகுதியில் காணப்படுவதால் ‘கைக்குழி வர்மங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ‘வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலானது கைக்குழி காலம் 4 (வலது இரண்டு + இடது இரண்டு) என்று குறிப்பிடுகிறது. சில வர்ம நூற்கள் இக்குத்து வர்மத்தை ’எழுத்து வர்மம்’ என்றும் குறிப்பிடுகிறது. குத்து வர்மத்துக்கும், எழுத்து வர்மத்துக்கும் இருப்பிடமும், குறிகுணங்களும் ஒன்றேயாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி