வேறு பெயர்கள் :

1. பிடரிக் காலம் (வர்ம சாரி-205)
2. பிடரிச்சுழி (அ) பிடரிக்குழி

இடம் :

பிடரிப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘தாமப்பா தலை முடிந்த தலத்தில் தானே
சார்வான குழிவதிலே பிடரிக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)

2. ‘அறிந்து கொள்ளு பிடரியென்ற காலங்கேளு
அப்பனே பிடரி என்ற பெருநரம்பில் பிடரிக்காலம்’ (வர்ம நிதானம்)

3. ‘அதனொன்று ஓட்டையின் கீழ் சிறுங்கொல்லி
ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

4. ‘கொள்ளவே பிடரியதின் குழியில் தானே
குணமான முடி முகிழ்தலத்திலப்பா
விள்ளவே அதில் பிடரிக்காலம்……..’ (வர்ம கண்டி)

5. ‘சீறும்கொல்லி வர்மத்துக்கு நாலு விரலுக்குக்
கீழே பிடரி வர்மம்……..’ (வர்ம விரலளவு நூல்)

6. ‘……………………………………………………………..
கீர்த்தி பெற ஓட்டையின் கீழ் சீறும் கொல்லி
நானப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’ (வர்மசாரி-205)

7. ‘முறையான ஆராய்ச்சிக் காலம் பாரு
அடவாக அதற்கு அரைவிரலின் மேலே
அடுத்துண்டு பிடரியென்ற காலமப்பா’ (வ.ஒ.மு.ச.சூ.-1200)

விளக்கம் :

பிடரி வர்மமானது தலை (கொண்டை) முடிந்த தலத்திலுள்ள குழியில் உள்ளது. பெண்கள் தலை முடியை பின் பக்கமாக கொண்டை முடிந்து கொள்ளும் இடம் பிடரியாகும். இறுக்கமாக தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த குழியான தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும். சற்றே தளர்த்திக் கொண்டை போட்டுக் கொண்டாலும் அது இப்பிடரிக் குழிக்கு நான்கு விரலளவுக்கு கீழாக உள்ள வளை முடிந்த வர்மம் என்ற தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.

சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாக இவ்வர்மம் உள்ளது என்று பொதுவாக எல்லா நூல்களும் குறிப்பிடுகின்றன. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200 என்ற நூல் மற்ற நூல்களிலிருந்து வேறுபட்டு ‘ஆராய்ச்சி காலம்’ என்ற ஒரு வர்மத்தை அறிமுகப்படுத்துகிறது. இவ்வர்மத்துக்கு அரை விரலளவுக்கு மேலே பிடரி வர்மம் உள்ளதாக இந்நூல் குறிப்பிட்டாலும், வேறு வர்ம நூல்களோடு ஒப்பாய்வு செய்ததில் பிடரி வர்மத்துக்கு ஒரு விரலளவுக்குக் கீழே ஆராய்ச்சிக் காலம் இருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. (விளக்கம் : பேன் குழி வர்மம் பார்க்கவும்)

வர்ம நிதானம் என்ற நூல் ‘பிடரி என்ற பெரு நரம்பில் பிடரிக்காலம்’ எனக் குறிப்பிடுகிறது. வர்ம சூத்திரம்-101 என்ற நூல் ‘பிடரி தன்னில் பெரு நரம்பின் மையம் வாக்கடா சுழியாடி’ என்று குறிப்பிடுகிறது. எனவே பெரு நரம்பில் மேல் பக்கத்தில் அதாவது சுழியாடி வர்மத்துக்கு அருகிலேயே (சுமார் 2 விரலளவுக்கு மேல்) பிடரி வர்மம் அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது.

உடற்கூறுச் சான்று :

பிடரி வர்மத்தின் இருப்பிடமானது மூளைப்பகுதிக்கும், தண்டு வடப்பகுதிக்கும் (பெரு நரம்பு) நடுப்பகுதியான முகுளம் (Medulla Oblongata) பகுதியை மையமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது. ஏனெனில் இவ்வர்மத்தின் முக்கிய குறிகுணமாக ‘விதமாக மூச்செடுக்கும்’ (வர்மசாரி-205) என்று கூறப்பட்டுள்ளது. இது முகுளப் பகுதியில் உள்ள சுவாச மையம் (Respiratory Centre) பாதிப்படைவதால் ஏற்படுகிறது.

ஏழாவது கழுத்து என்புக்கும் (கிழிமேக வர்மம்) சுமார் ஏழு விரலளவுக்கு மேலேயுள்ள இடமே பிடரி வர்மத்தின் இருப்பிடமாகும்.

மாத்திரை :

பதினான்கு விரல் அகலம் வாங்கி சரித்து வெட்டினால் விழும். பலமாக கொண்டதென்றால் உடனே சாகும்.