1. கதிர் வர்மம் – Kathir Varmam

 

வேறு பெயர்கள் :

 1. கதிர் வர்மம் (வர்ம பீரங்கி-100)
 2. நடுக்கு வர்மம் (வர்ம நூலளவு நூல்)
 3. உருத்திர வர்மம் (படுவர்ம நிதானம்-101)
 4. அக்கினி கம்ப வர்மம் (வ.சூ. பஞ்சீகரண பின்னல்-1500)

 

இடம் :

நெஞ்சின் நடுவில் அமைந்துள்ளது.

 

பெயர்க்காரணம் :

மார்பு பகுதியின் நடுவில் அமைந்துள்ளதால் இது ‘நடுக்கு வர்மம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

இருப்பிடம் :

 1. ‘கீழிரு விரற்கடை நால் கதிர் வர்மம்

கீழிறை ரண்டில் கதிர் காமம்………..’      (வர்ம பீரங்கி-100)

 

 1. ‘நகையான கழுத்தில் நால்விரலின் கதிர் வர்மம்

நலமான ரண்டிறை கீழ் கதிர்காம வர்மம்’     (வர்ம சாரி-205)

 

 1. ‘கனியான கதிர் வர்மம் ஒன்றதாகும்’ (வர்ம சாரி-205)

 

 1. ‘தும்மி வர்மத்துக்கும் உந்தி வர்மத்துக்கும் அளவெடுத்து (20 விரலளவு) இரண்டாய் மடக்கினால் (10 விரலளவு) நெஞ்சில் நேர் வர்மத்தின் இடத்தைக் காணலாம். இந்நூலை மறுபடியும் இரண்டாக மடித்து (5 விரலளவு) அந்த அளவை நேர் வர்மத்திலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் நடுக்கு வர்மத்தை அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

 

 1. ‘அன்றான தொண்டையின் கீழ் விலாவும்

அங்குலமே ஒரு நான்கில் கதிர் வர்மந்தான்’

(வர்ம துறவு கோல்-225)

 

 1. ‘சீர்தொண்டைக்கு இருவிரல் கீழ் கமலாடி வர்மம்

காரடா இருவிரல் கீழ் கதிர்வர்மம் தான்

கருது மிறை இரண்டில் கதிர்காமம் பார்’ (அடிவர்ம சூட்சம்-500)

 

 1. ‘பாரப்பா ருத்திர வர்மமஞ்சு விரலின் கீழே

பண்பாக நெஞ்சு நடுமையந்தன்னில்’    (படுவர்ம நிதானம்-101)

 

விளக்கம் :

இது ஒற்றை வர்மமாகும். இவ்வர்மம் கழுத்தில் தொண்டை பகுதியில் காணப்படும் திவளைக்குழி வர்மம் எனப்படும் சுமை வர்மத்துக்கு நாலு விரலுக்குக் கீழே காணப்படுகிறது என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

இக்கதிர் வர்மத்தையே வர்ம நூலளவு நூல் நடுக்கு வர்மம் என்று குறிப்பிடுகிறது. இது கழுத்தில் காணப்படும் தும்மி எனப்படும் வர்மத்துக்கு ஐந்து விரலுக்குக் கீழாகவும், நெஞ்சில் காணப்படும் நேர் வர்மத்துக்கு ஐந்து விரலுக்கு மேலாகவும் காணப்படுகிறது. அதாவது இவ்வர்மம் மார்பின் நடுவில் நெஞ்செலும்பின் மத்தியில் காணப்படுகிறது. கதிர்காமம் எனப்படும் வர்மத்திலிருந்து இருவிரலளவுக்கு மேலே இவ்வர்மம் காணப்படுகிறது. படுவர்ம நிதானம்-101 என்ற நூல் வாயு என்ற தும்மி வர்மத்துக்கு ஐந்து விரலளவுக்குக் கீழே ருத்திர வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.

 

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

 1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.