1. கண்டி வர்மம் – Kandi Varmam

 

வேறு பெயர்கள் :

  1. குழியானை வர்மம் (வர்ம ஆணி-108)
  2. குளியன் வர்மம் (வர்ம நிதானம்)
  3. சுழி வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
  4. கண்டி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)

 

பெயர்க்காரணம் :

காரை என்பு தோள் புயத்தோடு இணையும் பகுதியில் கீழ் பக்கமுள்ள சிறு குழியில் இவ்வர்மம் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

 

இடம் :

காரை எல்லின் மேல் அருகு பற்றி இவ்வர்மம் அமைந்துள்ளது.

 

இருப்பிடம் :

  1. ‘பாரப்பா காரை எல்லுமேல் அருகுபற்றி

பண்பான புஜத்தோடே குளியன் வர்மம்’       (வர்ம நிதானம்)

 

  1. ‘மாற்றான் காலத்துக்கு உயரே காரை எல்லில் மேல் அருகுபற்றி

குழியானை என்ற வர்மம் கொண்டால்’        (வர்ம ஆணி-108)

 

  1. ‘தானே காரை எல்லினகம் குழியானை என்ற வர்மம்’

(உள்ளூர கால அடங்கல்)

 

  1. ‘பாரப்பா காரையதின் முடிவில் தானே

பகர்ந்து நின்ற குழிவதிலே சுழிவர்மம் தான்’

(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

 

  1. ‘சீரடா தோள்முனையில் கண்டிவர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)

 

விளக்கம் :

இவ்வர்மம் காரை என்பின் புற அந்தத்தின் (மேல் அருகு) கீழுள்ள ஒரு குழிவான பகுதியில் காணப்படுகிறது. இவ்வர்மம் விலங்கு வர்மம் இல்லை காரணம் ‘வர்ம ஆணி-108’ என்ற நூலில் குழியானை வர்மமும், விலங்கு வர்மமும் தனித்தனியே விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வர்மம் காரை என்பு புஜமொழியோடு சேரும் பகுதியில் என்பிற்கு கீழ் ஒட்டி அமைந்துள்ளது. இவ்வர்மத்துக்கு கீழே கைக்குழிக்குள் அரங்கு வர்மம் உள்ளது. இவ்வர்மத்தை ‘அடிவர்ம சூட்சம்-500’ என்ற நூல் கண்டி வர்மம் என அழைக்கிறது.

 

காலக்கெடு :

16 நாழிகை (வர்ம ஆணி-108) (ஒரு நாழிகை 24 நிமிடம்)

3 நாழிகை கழிந்த பிறகு இளக்கவும் (வர்ம நிதானம்-300)

80 நாழிகை (அடிவர்ம சூட்சம்-500)

ஆதார நூல்கள்  1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்

  1. வர்ம மருத்துவம் (சிறப்பு)

 

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.