- உதிர காலம் – Uthira Kalam
வேறு பெயர்கள் :
- உதிர காலம் (வர்ம பீரங்கி-100)
- உதிர நரம்பு அடங்கல் (அடங்கல் விவரம்)
- மாத்திரிகா வர்மம் – நான்கில் ஒன்று (சுஸ்ருத சம்ஹிதா)
பெயர்க்காரணம் :
‘உதிரம்’ என்றால் ‘இரத்தம்’ என்று பொருள். இது தலையிலிருந்து இரத்தத்தை இதயத்துக்குக் கொண்டுவரும் Jugular vein-ல் இவ்வர்மம் அமைந்திருக்க வேண்டும். இதனால் இவ்வர்மம் இப்பெயர் பெற்றிருக்கலாம்.
இடம் :
முன் கழுத்தில் பக்கவாட்டில் உள்ளது.
இருப்பிடம் :
- ‘துடியான ஒட்டையின் கீழ் அடப்பு வர்மம்
துகையான ஆறு விரலின் கீழ் உதிரக்காலம்
வடிவான முண்டிருக்கி உறக்க காலம்’ (வர்மசாரி-205)
- ‘ஒன்றான உதிரக்காலம் ரண்டு’ (வர்மசாரி-205)
- ‘குறியான செவியின் அங்குலமே நாலு
கூறுகிற காலமது உதிரமாகும்’ (வர்ம கண்ணாடி-500)
- ‘கூறப்பா கொண்ட வர்மம் செவியின் கீழே
கூறலாம் அங்குலம் நால் உதிரக்காலம்’ (வர்ம கண்ணாடி-500)
- ‘உறக்க காலத்துக்கு கீழ் நான்கு விரலுக்குள் கொண்டை நரம்புக்கும்,
சங்கு நரம்புக்கும் மத்தியில் உதிரக்காலம்
இது தொடு வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
விளக்கம் :
இவ்வர்மம் கீழ் அடப்பு வர்மத்திலிருந்து ஆறு விரலுக்குக் கீழே பக்கவாட்டில் அமைந்துள்ளது. இது இரட்டை வர்மம், வெளிக் காது மடலுக்கு (Pinna) அடிப்பகுதியில் இருந்து நான்கு விரலுக்குக் கீழே அமைந்துள்ளது. இவ்வர்மத்துக்கும் உறக்கவர்மத்துக்கும் சுமார் நான்குவிரல் இடைவெளி உள்ளது.
உடற்கூறுச் சான்று :
‘ஆமென்று அசதியுடன் அழலுண்டாம்
அங்கமது விறைத்து நாவரண்டு கொள்ளும்
நாமென்ற சல்லியுண்டாம் நாடி சாயும்’ (வர்மசாரி-205)
மேற்கண்ட உதிர வர்மத்தின் குறிகுணங்களைப் பற்றிய பாடல் வரிகளிலிருந்து இவ்வர்மம் என்றால் அசதியுண்டாகும் என்று தெரிகிறது. Jugular Vein-ல் இவ்வர்மம் உள்ளதால் அது பாதிக்கும் போது அசுத்த ரத்ததேக்கம் தலையில் அதிகமாகிறது. இதனால் அசதி வருகிறது. கூடவே தலைவலியும் வருகிறது. (வர்ம பீரங்கி-100) உடல் எல்லாம் விறைத்து நாவறண்டு போகிறது. பிறகு சன்னியுண்டாகி நாடித்துடிப்பு குறைய ஆரம்பிக்கும்.
‘உதிர வர்மம்’ என்ற பெயரிலிருந்து இவ்வர்மம் கழுத்திலுள்ள ஏதேனுமொரு நாடியையோ அல்லது நாளத்தையோ சார்ந்திருக்கிறது என்று புரிகிறது. நாடியாக இருந்தால் மிக மோசமான குறிகுணங்களை உடையதாக இருக்கும். மரணம் நேரிடும் ஆனால் இவ்வர்மம் அசாத்திய வர்மமென்று சொல்லப்படவில்லையாதலால் இது நாளத்தை சார்ந்த வர்மமாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
- வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.