20. கோண வர்மம் – Kona Varmam

வேறு பெயர்கள் :

1. கோணச்சன்னி வர்மம் (வர்ம நிதானம்)
2. கோண வர்மம் (வர்ம பீரங்கி-100)
3. கோணசென்னி அடங்கல் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
4. மாத்ரிகா வர்மங்கள் 4-ல் ஒன்று (சுஸ்ருத சம்ஹிதா)

பெயர்க்காரணம் :

கீழ்த்தாடை ஒருபுறமாக கோணிக்கொள்வதால் கோண வர்மம் என்றும் கோண சன்னி என்றும் பெயர் பெற்றது.

இடம் :

காதின் கீழ்ப்பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘கேளப்பா கீழ் நாடி முடிந்த மூட்டில்
கெணிதமுடன் அலவாடு கோணச்சன்னி காலம்’ (வர்ம நிதானம்)

2. ‘கூறப்பா கோண வர்மம் செவியின் கீழே
கூறலாம் அங்குலம் நால் உதிரக்காலம்’ (வர்மபீரங்கி-100)

3. ‘நலமாக கோணவர்மத்தினருகில் குறியதாமே’
‘குறியான செவியின் கீழ் அங்குலம் நாலில்
கூறுகின்ற உதிர காலமது ஆகும்’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘பாருமினி கோணச்சென்னி அடங்கல் தன்னை
பார்க்கவே நாடியதின் அருகுபற்றி’ (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

5. ‘குடமான முன் காலத்தில் மூன்றங்குலம் கீழ்
கோண என்ற சன்னிவர்மம் கொண்டால் கேளு’
(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

விளக்கம் :

கோணச்சன்னி வர்மமானது கீழ்நாடி (Mandible) முடியும் மூட்டுப் பகுதியான காதுக்கு அடிப்பகுதியில் அலவாடி வர்மத்துக்கு ஒரு விரலுக்கு கீழேயும் செவிக்குற்றிக் காலத்துக்கு சுமார் மூன்று விரலளவுக்கு கீழேயும் உள்ள வர்மமாகும். இது அடங்கலாகவும் பயன்படுகிறது. இதில் காயம் கொள்ளும் போது முகநரம்பு பாதிப்படைவதால் நாடி ஒரு பக்கம் கோணும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி