1. 2. சீறும்கொல்லி வர்மம்

 

வேறு பெயர்கள் :

 

 1. சீறும் கொல்லி வர்மம் (வர்ம பீரங்கி-100)
 2. சிடை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

 

பெயர்க்காரணம் :

 

இந்த வர்மத்தில் அடிபட்டால், நோயாளி தலையை அங்குமிங்கும் உருட்டுவான். மேலும் வாயில் நுரை தள்ளும், இது காண்பதற்கு சீறுவதைப் போலத் தோன்றும். இதனால் இவ்வர்மத்திற்கு ‘சீறும்கொல்லி’ எனப் பெயர் வந்திருக்கலாம்.

 

இடம் :

 

பின் தலைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

 

 1. கேளப்பா சிரசில் நடு கொண்டக் கொல்லி

கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி

நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’    (வ.ஒ.மு. சாரி-1500)

 

 1. ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக் கொல்லி

அதனொன்று ஒட்டையின் கீழ் சீறும் கொல்லி

ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’      (வர்ம பீரங்கி-100)

 

 1. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி

சாண் ஒட்டை அதற்குக் கீழ் சீறுங்கொல்லி

ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழ்

உற்றதொரு பிடரி வர்மம் ஆகும்பாரு’       (வர்ம கண்ணாடி500)

 

 1. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி

சாணொட்டை அதன் கீழே சீறுங்கொல்லி

ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழே

உற்றதொரு பிடரிவர்மமாகும் பாரு’    (வர்ம திறவுகோல்)

 

 1. ‘சேரவே தலையில் மத்தி செகித்ததோற் கொண்டைக்கொல்லி

பூரவே சாணொட்டைக்குள் புகன்றிடும் சீறும்கொல்லி

தாரவே நால்விரலுக்கு தாழவே பிடரி வர்மம்’ (வ.லா. சூத்திரம்-300)

 

 1. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலுக்குக்

கீழ் சீறுங்கொல்லி இதற்கு நாலு விரலுக்குக் கீழ் பிடரிவர்மம்’

(வர்ம விரலளவு நூல்)

 

 1. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு

விரலளவுக்குக் கீழே பின்புறமாக சீறும்கொல்லி வர்மம்….’

(வர்ம விளக்கம்)

 

 1. ‘உச்சியிலுள்ள துடி காலத்திலிருந்து முன் பக்கம்

கொம்பேறிக் காலமும் பின்பக்கம் சீறும் கொல்லி வர்மமும்

சம அளவு தூரத்தில் அமைந்துள்ளது’.       (வர்மாணி நாலுமாத்திரை)

 

 1. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறும்கொல்லி

உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) இரண்டாக

மடக்கி (16 விரலளவு) திலர்த காலத்திலிருந்து (பக்கவாட்டில்)

அளந்தால் சீறும் கொல்லி அறியலாம்’        (வர்ம நூலளவு நூல்)

 

 1. ‘செய்யவே ஒட்டையின் கீழ் உச்சி தன்னில்

திடமான சிடைவர்மம் தன்னைக்கேளு’ (வ.ஞா.ஒ.மு.ச.சூ-2200)

 

விளக்கம் :

இவ்வர்மம் கொண்டைக் கொல்லி (துடி காலம்) வர்மத்துக்கு ஓர் ஒட்டைக்கு அல்லது ஒரு சாணுக்கு (12 விரலளவு) பின்புறமாக அமைந்துள்ளது.

(பொதுவாக ‘ஒட்டை’ என்பது 10 விரலளவு என்ற கணக்கில் கொண்டால்கூட தலை போன்ற வளைந்த பகுதிகளில் ஒட்டை அளவை அளக்கும் போது விரிக்கப்பட்ட இரு விரல் நுனிகளுக்கிடைப்பட்ட நேரடி நீளத்தை (10.வி.அ.) கணக்கிட்டாமல் மண்டையின் வளைவை மனதில் கொண்டு விரல்களின் ஓரமாகவே அளக்க வேண்டும். இப்படி அளக்கும் போது 12 வி.அ. இருக்கும்.) மேலும் இவ்வர்மம் பிடரி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு மேலாக அமைந்துள்ளது. திலர்த வர்மத்திலிருந்து 16 விரலளவுக்கு பக்கவாட்டில் உள்ளது. இது ஒற்றை வர்மமாகும்.

‘வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் சிடைவர்மம் என்ற பெயரில் ஒரு வர்மத்தைக் குறிப்பிடுகிறது. இது உச்சியிலிருந்து ஒர் ஒட்டைக்கு கீழே (பின்னால்) உள்ளது என்று குறிப்பிடுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் தலை உருட்டல், வாயில் நுரைதள்ளல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும் இவ்வர்மத்தின் இருப்பிடம் மற்றும் குறி குணங்கள் சீறும் கொல்லி வர்மத்தோடு ஒத்துப் போவதால் இரண்டும் ஒரு வர்மமே என்பது தெளிவாகிறது.

உடற்கூறு : The Lambda of the skull. The point of intersection of sagittal and Lambdoid Sutures இவ்வர்மம் இரு Parietal என்புகளும். பின்புறமுள்ள ஒரு Occipital என்பு சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தலையில் அல்லது ஒரு மண்டை ஓட்டின் பின் பகுதியைத் தடவிப் பார்த்தால் இவ்விடம் சற்றே மேடாகத் தெரியும்.

 

மாத்திரை :

ஏழு விரல் அகலம் வாங்கி, அடிக்கவோ குத்தவோ செய்தால் உடன் மயங்கும்.