18. கண்ணாடி காலம் – Kannadi Kalam

வேறு பெயர்கள் :

1. கண்ணாடி காலம் (வர்ம பீரங்கி-100)
2. குருந்து வர்மம் (சதுரமணி சூத்திரம்)
3. கொழுந்து வர்மம் (படுவர்ம நிதானம்-101)
4. தாங்கக் காலம் (வர்ம கண்டி-உரைநரை)

இடம் :

மூக்கு தண்டின் நடுவில்.

பெயர்க்காரணம் :

வர்ம பீரங்கி-100 என்ற நூலில் ‘கண்ணடைக்குமியல்பு பாரே’ என்றும், வர்ம கண்ணாடி-500 என்ற நூலில் ‘விழி மூடிப்போச்சு’ என்றும் கூறியிருப்பதால் இது கண்ணடை வர்மம் என்று வழங்கி, பின்னாளில் கண்ணாடிக் காலம் என்று மருவியிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘சுந்தரமாய் நாசிமத்தி கண்ணாடிகாலம்’ (வர்மகண்ணாடி-500)

2. ‘இடமுடன் சொல் கொம்பேரி காலத்துக்கும்
இருவிரல் மேல் கண்ணாடி காலம் பாரு’ (வ.ஒ.மு. ச.சூ.-1200)

3. ‘தான் என்ற மூக்கு நடுமையம் தன்னில்
தப்பாதே கண்ணாடி காலம் பாரே’ (வாகட நிதானம்)

4. ‘சுழுமுனைக்கு இரண்டு விரலுக்கு மேல் மூக்கு கண்ணாடி
போடுமிடம் கண்ணாடிக்காலம்’ (வர்ம விரலளவு நூல்)

5. ‘நாதனே ஒருவிரல் மேல் சுழிமுனையாம்
முனையான இருவிரல் குருந்துவர்மம்
முக்கியமாய் ஒருவிரல் மேல் பாலக் காலம்’ (சதுரமணி சூத்திரம்)

6. ‘திலர்த காலத்துக்கு இருவிரல் கீழ் தாங்கக்காலம்’ (வர்மகண்டி-உரைநடை)
7. ‘கண்டத்துக்கு மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லியுட் படச் சுற்றளவு எடுத்து (32 விரலளவு) பதினாறாய் மடக்கி
(2 விரலளவு) திலர்தகாலத்திலிருந்து கீழ்நோக்கி அளக்க கண்ணாடிக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

8. ‘கொள்ளவே (திலர்த வர்மத்துக்கு) பெரு விரலோரிறைக்குத் தாழே
குணமுடனே கொழுந்து வர்மம் கொண்ட பேர்க்கு’
(படுவர்ம நிதானம்-101)

விளக்கம் :

கண்ணாடி காலமானது மூக்குத் தண்டின் நடுப்பகுதியில், திலர்தகாலத்துக்கு இருவிரலளவுக்கு கீழாகவும், கொம்பேறி வர்மத்துக்கு இருவிரலளவுக்கு மேலாகவும், சுழுமுனை வர்மத்திலிருந்து குறுக்காக (மூக்கு நுனியைச் சுற்றி அளக்காமல்) இரு விரலளவுக்கு மேலாகவும் அமைந்துள்ளது.

சுழுமுனை வர்மத்துக்கு இரு விரலளவுக்கு மேலேயுள்ள வர்மம் ‘குருந்து வர்மம்’ எனப்படுகிறது. இது குருத்தெலும்பால் ஆன பகுதியாகையால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு விரலளவுக்கு மேலே பால வர்மம் உள்ளது. வர்மகண்டி என்ற உரைநடை நூல் திலர்த காலத்துக்கு இருவிரலளவுக்குக் கீழே தாங்கக் காலம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. இது கண்ணாடிக் காலத்தின் இருப்பிடமேயாகும். இருப்பிடத்தில் மட்டுமன்றி குறிகுணங்களிலும், மருத்துவ முறைகளிலும் கூட இந்த இரு வர்மங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால் இரண்டும் ஒரே வர்மமாகவே இருக்க வேண்டுமென்று அறிய முடிகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி